டில்லி ரவிதாஸ் ஆலயம் இடிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாபில் தலித்துகள் போராட்டம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 18:54

சண்டிகர்,

டில்லி, துக்ளகாபாத் பகுதியில் அமைந்திருந்த குரு ரவிதாஸ் ஆலயம் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. அதற்கு எதிராக பஞ்சாபில் தலித் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாபில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் பக்தி இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் குரு ரவிதாஸ். சிறந்த கவிஞரான ரவிதாஸ் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். சமூதாயத்தில் நிலவும் சாதி, மத, பாலின ரீதியான பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அவரது பக்தி பாடல்கள் இந்துமதம் மற்றும் சீக்கிய மதத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

ரவிதாஸ் சமூகத்தை சேர்ந்த தலித் மக்கள் சுமார் 22 முதல் 23 கோடி பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் டில்லியில் துக்ளாகாபாத் என்ற இடத்தில் குரு ரவிதாஸுக்காக எழுப்பப்பட்ட ஆலயம் ஒன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 11ம் தேதி இடிக்கப்பட்டது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த கோவில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக்  கூறி தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த ஆலயம் 15ம் நூற்றாண்டில் சுல்தான் சிக்கந்தர் லோதியின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரவிதாஸ் கோவில் இடிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாபில் தலித் மக்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனால் பஞ்சாபில் பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

லூதியானா, பாக்வாரா, நவன்ஷார், பர்னாலா, அம்ரிதசரஸ் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் பேரணியாக சென்றனர்.

டில்லியில் மீண்டும் ரவிதாஸ் கோவில் கட்டப்பட வேண்டும் என போராடும் தலித் மக்கள் வலியுறுத்தினர்.

குரு ரவிதாஸ் ஜெயந்தி சமரோஹ் சமிதி அமைப்பின் கீழ் இந்த போராட்டம் நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர். வரும் சுதந்திர தின விழாவை கறுப்பு தினமாக அனுசரிக்கவும் குரு ரவிதாஸ் ஜெயந்தி சமரோஹ் சமிதி அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சுமூகமாக தீர்வு காண உதவி செய்வதாக காங்கிரஸ், பாஜக மற்றும் சிரோமணி அகாலிதளம் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ரவிதாஸ் கோவில் விவகாரம் குறித்து டில்லி துணை நிலை ஆளுநரையும் தேவைப்பட்டால் பிரதமர் மோடியையும் சந்திப்பதாக மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.