இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 18:50

மும்பை,

   இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் இழப்புகளை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இறுதியில் 624 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 183 புள்ளிகள் சரிந்து 10,925.85 புள்ளிகளில் நிலைபெற்றது.இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்தது, இந்தியாவில் நடப்பாண்டு  ஜூலை மாதம் பயணிகள் வாகனம் விற்பனையில் 31 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது 9 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.

அமெரிக்க – சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுக்கு காரணமாகும்.

இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. இறுதியில் சென்செக்ஸ் 623.75 புள்ளிகள் சரிந்து 36,958.16. புள்ளிகளில் நிலைபெற்றது

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 183.80 புள்ளிகள் சரிந்து 10,925.85 புள்ளிகளில் நிலைபெற்றது.

யெஸ் வங்கி, எம் அண்ட் எம், பஜாஜ் நிதி, பாரதி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி, மாருதி, டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்ட் டி,ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 10.35 சதவீதம் சரிந்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எண்ணெய் வர்த்தக துறையில் சவுதி மற்றும்  பிரிட்டனுடன் முதலீடு செய்துள்ளது. மேலும் ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி நேற்று அறிவித்துள்ளார்

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் இன்று 9.72 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து சன் பார்மா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தது.

இந்திய பங்குச்சந்தை

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (13-08-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 38 காசுகள் சரிந்து ரூ. 71.15 காசுகளாக இருந்தது.

இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.45 காசுகளாக நிலைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.78 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.