ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுவை 2 வாரம் கழித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 16:57

புதுடில்லி,

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இரண்டு வாரங்களுக்கு பின் நடக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர் தெஹ்சீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ராஸ்டோகி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் பிற்போக்குதனமான நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என தெஹ்சீன் பூனாவாலா கோரினார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கடந்த 2016ம் ஆண்டு பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பதற்றத்தை குறிப்பிட்டார். அப்போது பதற்றத்தை தணிக்க ஜம்மு காஷ்மீரில் 3 மாதங்கள் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்ததை சுட்டிக்காட்டினார். 

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு நிலைமையை கண்காணித்து வருவதாகவும் நாளுக்கு நாள் சூழ்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் கே.கே. வேணுகோபால் கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பதற்றமாகவும் உள்ளது. அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப சில காலம் தேவைப்படும். அங்கு எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருக்க வேண்டும். எனவே இந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.