சிக்கிமில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்!

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 15:43

புதுடில்லி

சிக்கிம் மாநிலத்தில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் இன்று இணைந்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

டில்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னலையில் அக்கட்சியில் அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். இது எதிர்க்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. நீண்ட காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி, 15 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தற்போது, 10 எம்எல்ஏக்கள் இணைந்திருப்பதால் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரையில், பாஜக அதிகாரத்தில் இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம் என்பது குறிப்பிடத்தக்கது.