சோன்பத்ராவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்கிறார் பிரியங்கா காந்தி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 14:42

வாரணாசி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசி விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்துவிட்டு, சோன்பத்ராவில் கடந்த மாதம் கலவரத்தால் பதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்டார்.

உத்தரபிரதேசம் சோன்பத்ரா மாவட்டம் யூம்பா கிராமத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா கடந்த மாதம் சென்றார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை, விருந்தினர் இல்லத்தில் காவலில் வைத்தனர். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களில் சிலரது குடும்பத்தினர் பிரியங்கா காந்தியை விருந்தினர் இல்லத்திற்கு சென்று சந்தித்துப் பேசினர். இதையடுத்து அங்கிருந்து டில்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி, இன்று காலை வாரணாசிக்கு சென்றார். விமானநிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்த கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசிய அவர், சோன்பத்ராவுக்கு புறப்பட்டுச்சென்றார்.

சோன்பத்ரா செல்லும் அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், யூம்பா கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்த சம்பவத்திற்குப் பின் கோண்டா பழங்குடி இனத்தவருக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிய இருக்கிறார்.