வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்க ஸ்டாலின் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 13:26

சென்னை,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,

கேரளாவில் கனமழையிலும், பெரு வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள், 60 பேர் வரை காணாமல் போய் இருக்கிறார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இத்துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் முயற்சிகளை தி.மு.க. முன்னெடுக்கிறது.

எனவே, பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.