பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 11:31

சேலம்,          

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இன்று காலை முதல் கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 2.10 லட்சம் கன அடியாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இதையடுத்து, காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி நொடிக்கு 2.45 லட்சம் கன அடியாகவும், மாலை 4 மணி நிலவரப்படி நொடிக்கு 2.65 லட்சம் கன அடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி நொடிக்கு 2.85 லட்சம் கன அடி நீரும் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் நீர் வரத்து நொடிக்கு 3 லட்சம் கனஅடியைத் தாண்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், திங்கள்கிழமை மாலை 92.55 அடியைத் தாண்டியது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 35. 50 அடி உயர்ந்தது. அணையிலிருந்து நொடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92.55 அடியைத் தாண்டியுள்ள தாலும், கணிசமான அளவில் நீர் வரத்து இருப்பதாலும் விவசாயிகள் நலன் கருதி பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், சம்பா சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, காவிரியாற்றில் மலர்தூவினார். முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்திவிடப்படுகிறது. நீரின் அளவு படிப்படியாக தேவைக்கு ஏற்ப நொடிக்கு 28 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் நீர், ஜனவரி 28ம் தேதி வரை பாசனத்துக்குத் திறந்துவிடப்படும். அதன்பிறகு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அணையின் நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறப்பு 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படும்.

பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை கொண்டது தமிழக அரசு. இன்றைய மேட்டூர் அணை 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

இதனிடையே, செய்தியாளர்கள் மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?. அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.