இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை காண மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 18:50

புதுடில்லி,

சாகசக்காரர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சானலில் ஒளிப்பரப்பாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியத்தை தெரிந்துகொள்ள மக்கள் இந்த நிகழ்ச்சியை காண வேண்டும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

‘‘இயற்கை அன்னை சூழ்ந்திருக்கும் இந்தியாவின் பசுமையான காடுகளை விட சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து பேச சரியான இடம் உள்ளதா ? இன்று இரவு 9 மணிக்கு எங்களுடன் இணைந்திருங்கள்’’ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சாகசக்காரர் பியர் கிரில்ஸ் இன்று ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

‘‘நம் பூமியை பாதுகாக்க, அமைதியை வளர்க்க, விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம். நிகழ்ச்சியை ரசித்து மகிழுங்கள்’’ என்று பியர் கிரில்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பியர் கிரில்ஸ் டுவிட்டர் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மோடி தன் டுவிட்டரில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட பியர் கிரில்ஸ் உடனான பிரதமர் மோடியின் சாகச பயணம் உலகம் முழுவதும் 180 நாடுகளில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் கடந்த 2015ம் ஆண்டு பியர் கிரில்ஸ் அலாஸ்காவில் சாகச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.