கேரளாவில் கனமழை: நிவாரணப் பொருள்களை பொதுமக்கள் வழங்க ராகுல் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 16:27

திருவனந்தபுரம்

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 2.87 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி இருப்போருக்கு உதவ பொருள்களை நன்கொடையாக வழங்கும்படி வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்திவேண்டு கோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள புதுமலை, கவளப்பாறை ஆகிய 2 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போனது. இந்த கிராமங்களில் வசித்தவர்களை மீட்கச் சென்ற மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 2 கிராமங்களிலும் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களில் இதுவரை 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், 58 பேரை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இதில் 286 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், நிவாரண முகாம்களில், இதுவரை 77,688 குடும்பங்களைச் சேர்ந்த 2.87 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது.

மழை நேற்று ஓய்ந்திருந்தாலும் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடு பாதையில் வெள்ளம் தேங்கியதால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டது. நேற்று பிற்பகலுக்கு மேல் இங்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது.

விமான சேவை தொடங்கினாலும், கேரளாவின் முக்கிய ரயில் பாதைகள் அனைத்திலும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இதனால் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி வேண்டுகோள்

வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, நேற்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையில், ராகுல் காந்தி டுவிட்டரில்,

”வயநாடு தொகுதியில் உள்ள பல இடங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மக்கள் முன்வரவேண்டும். தங்களால் முடிந்தவற்றை அவர்களுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டுகோள் வைக்கிறேன். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அனைத்து பொருட்களையும் அனுப்பிவையுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்” என்று கேட்டுக்கொண்டார்.