ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019

* பள்ளியறை பூஜையில் பங்கேற்பதன் சிறப்பு என்ன...? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பலர் காத்திருந்து தரிசிப்பதன் நோக்கம் என்ன? ப. ராமநாதன், அம்பாசமுத்திரம்.

காலை முதல் இரவு வரை உழைத்துக் களைத்த அனைத்து ஜீவராசிகளுக்கும் மனசாந்தி எனும் உறக்கத்தை அருளி அமைதியடைச்செய்வதே சிவமும் சக்தியும் ஒடுங்கும் பள்ளியறை பூஜையின் தத்துவம். இதனைத் தரிசித்தால் மனதில் உள்ள எல்லா கவலைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை கிட்டும். குறிப்பாக, திருமணம் புத்திரபாக்கியம் ஆகியன கைகூடும்.

* பிடிவாதம், அடம் பிடிக்கும் குழந்தைகளைத் திருத்த என்ன பரிகாரம் செய்யலாம்? ஆ. மாரிமுத்து, செங்கோட்டை.

 ‘துருதுரு’வென விஷமம் செய்வதுதான் குழந்தைகளுக்கு அழகு. அவர்களோடு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தால் கஷ்டமாகத் தெரியாது. குழந்தைகளின் சுறுசுறுப்பை அறிவுபூர்வமான விளையாட்டுக்களாக மாற்றினால் அடம், பிடிவாதங்கள் குறையும். இதற்கெல்லாம் வேறு எதுவும் பரிகாரம் கிடையாது.

* சாம்பிராணிப்புகையை பூஜையறை மட்டுமின்றி எல்லா அறைகளிலும் காண்பிப்பது அவசியமா? தி. சங்கரலிங்கம், நெல்லை.

வீடு முழுவதும் செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணிப் புகை போடுவதால் கண் திருஷ்டி, கடன் போன்றவை நீங்கும். கிருமிநாசினியாகவும் இருப்பதால் நோய்நொடிகள் அண்டாது.

* மனம் உறுதியுடன் இருக்க மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்.... எஸ். அனந்த பத்மநாதன், நாகர்கோவில்.

 மனதைக் கட்டுப்படுத்த வேண்டியது நம் அறிவு. எனவே அறிவை, பலப்படுத்தினால் மனம் உறுதி பெறும். இதனால் குழந்தைகளுக்குக்கூட “ஆண்டவா! எனக்கு நல்ல புத்தியைக்கொடு” என வேண்டிக்கொள்ள நம் பெரியவர்கள் பழக்குவார்கள். ‘காயத்ரி மந்திர’த்தின் பொருளும் அதுதான். காலை, மதியம், மாலை மூன்று பொழுதுகளிலும் குடும்ப வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் அணிந்து இயன்றவரை ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் நமோ நாராயணாய’ என ஜபம் செய்து வாருங்கள். மன உறுதியுடன் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.