ஒன்று! – மதிஒளி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019


விரும்பிய பொருள் நம்மை விலகிவிட்டால் விம்மலும் அழுகையும்தான் நம்மை வேடிக்கை பார்க்கும். அந்த   பொருளைவிட்டு நாம் பிரிய நேர்ந்தால் அப்போதும் சோகமும் துயரமும்தான் நம்மை சுவீகரிக்கும்.

பற்று என்பதுதான் துக்கம் ஊன்றிய விதை. நாமும், நமது விருப்பங்களும் பிரிக்கப்படாத வரையில் வேதனை அங்கு விளையாடக்கூட அஞ்சும். ஆனால், பிரிவு என்பது தவிர்க்க முடியாததொன்று.

அமைதியும், ஆனந்தமும் நமக்குள்ளேயே அடங்கிக் கிடக்கிறது. நம்மிடமேயுள்ள ஆசைக்கும் பாசத்திற்கும், அமைதிக்கும் ஆனந்தத்திற்கும், பிரிவினையால் ஒரு பிணைப்பு ஏற்பட வேண்டுமென ஒப்பந்தம் செய்து கொண்டால் நமக்கு பற்றுக்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இதற்குத்தான் ‘வைராக்கியம்’ என்று பெயர்.  நிர்பந்தத்தால் ஏற்படும் பிரிவு நம் நெஞ்சத்தில் நீங்காத வடுவாக நின்றுவிடும். இந்த காட்சியை பார்ப்போம்.

பழுக்காத மாங்காயை மாமரத்திலிருந்து பறிக்கிறோம். பறித்த அந்த  நுனியிலிருந்து மரம் பால் சொறிந்து நிற்பதை பார்க்கிறோம். அது தன்பால் நிறைந்த அன்பால் விளைந்த சோகம். அதுவே அப்பால்.

ஆனால் பழுத்த பின்பு அந்தக் காய் கனியாகிக் காம்பை விட்டுத் தானே பிரிந்து விழுந்து விடுகிறது. அழுவதில்லை. அது அப்பாலுக்கப்பாலாய் விரிந்து விடுகிறது. விளைந்து விடுகிறது.

காய் புளிப்பும் துவர்ப்புமாயிருக்கிறது. கனி இனிப்பில் கனத்திருக்கிறது. பக்குவப்படாத மனம் பாசத்தாலும், பரிவாலும் பிணைக்கப்பட்டிருக்கும் போது பிரிவாற்றாமை கண்ணீரை வெள்ளமாக்கிக் கலங்க வைக்கிறது. சம்சாரம். நம்மை வழுக்கிவிடும் இம்சையின் தாக்கம் இது. பற்றுக்களெல்லாம் அற்று விட்டபோது ஞானத்தின் பழச்சுவை ஆசைகளின் மாசையெல்லாம், மாயையை எல்லாம்

அகற்றிவிடுகிறது.  நம்மிடமுள்ள மறங்களையெல்லாம் அறங்களாக மாற்ற முயற்சிப்பதும் மகிமை பொருந்திய அறநெறியே. நம்முடைய எண்ணம், பேச்சு, செயல் யாவும் இந்த அறநெறியின் பார்பட்டே மாற்றி வைக்க முடிந்தால் ஆண்டவன் நல்லாசிகளும் அவற்றில் அழுந்தப் பதிந்திருக்கும்.

கேட்டு கொள்வது பாடம். கேட்காமல் கிடைப்பதும் பாடம்தான். கூட்டிக் கொள்வது வேடம். கூடாமல் வெல்வதும் பாடம். காட்டிக் கொள்வது கர்வம். காட்டாத அடக்கமுமோர் பாடம்.

நம்முள் மூட்டிக் கொள்வதே மோனம். அந்த மோனத்தில் காணும்  ஒளியும் ஒரு பாடம். சேர்த்து கொள்ள வேண்டியதை சேர்க்கத் தெரியாமல் சேர்ந்து போனதையெல்லாம் விலக்கத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம்மை விட்டுப் பறக்க தயாராக காத்திருக்கின்றன – உடல், பொருள், ஆவி இவை மூன்றும்.

– தொடரும்