மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 165

பதிவு செய்த நாள் : 06 ஆகஸ்ட் 2019

அகல்களையெல்லாம் அழகாக வைத்துவிட்டு தமது திருத்தொண்டு வழுவாமல் நடைபெறும் பொருட்டு, எண்ணெய்க்குப் பதிலாக தம் உடலில் நிறைந்துள்ள ரத்தத்தைக் கொண்டே திருவிளக்குகளை நிறைக்க எண்ணினார். அந்த எண்ணத்தோடு அவர் ஒரு கருவியை எடுத்து தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது பெருங்கருணையுடைய சிவபெருமான் தோன்றி கழுத்தை அறுக்கும் நாயனாரின் கையைப் பிடித்து தடுத்தருளிக் கலியனார் முன்பு பழவிடைமேல் எழுந்தருளிக் காட்சி தந்தார்.  கலியனார் தன் கழுத்தில் பட்ட ஊறு நீங்கி ஒளி பெற்ற மேனியுடன் தமது கைகளைத் தலை மீது தூக்கி வணங்கினார். சிவபெருமான் அவருக்குத் தமது சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும்படி திருவருள் புரிந்தார்.

 சிவனார் கோயிலுக்கு விளக்கேற்றும் திருத்தொண்டு தடைபட்டதும் தம் கழுத்தையே அறுத்துக் கொள்ள துணிந்த கலிய நாயனாரின் கழல் போற்றிவிட்டு, அடுத்ததாக சத்தி நாயனாரின் திருத்தொண்டைப் பார்ப்போம்.

 சோழர்கள் ஒரே செங்கோல் வன்மையால் எத்திசைகளிலும் வெற்றி ஸ்தம்பம் நாட்டி ஆட்சி புரிவதும், உழவர்கள் களைந்த தாமரை மலர்களின் தேன் நிறைவதுமான நீர்வளம் நிறைந்தது காவிரி நாடு. அந்நாட்டில் விரிஞ்சையூர் என்னும் ஒரு ஊர் உண்டு. அந்த ஊரிலே வாய்மைப் பண்புடைய வேளாளர் குலத்தில் பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பெரும் சிவபக்தர். சிவனடியார்களைப் பற்றி இவ்வுலகில் யாராவது இகழ்ந்து பேசினால், இகழ் வோரின் நாக்கை இழுத்து அறுத்து விடுவார்! அத்தகைய சத்தி வாய்ந்தவராகையால் ‘சத்தியார்’ என்று அவர் வழங்கப்பட்டார்.

 சத்தி நாயனார் சிவனடியாரை இகழ்ந்து கூறும் பாதகரின் நாக்கைப் பிடுங்குவதற்காக வணைந்ததொரு தண்டாயத்தினால் அதை இடுக்கி இழுத்து கூரிய கத்தியினால் நாக்கை அரிந்து விடுவார். அந்த வகையில் அன்புடன் திருத்தொண்டு புரிவதில் சிறந்து விளங்கினார். இத்தகைய ஆண்மைமிக்க திருப்பணியை நெடுங்காலமாக அவர் அன்புடன் செய்து வந்தார். இத்தகைய வீரத்திருத்தொண்டு புரிந்துவந்த சத்தி நாயனார், உலகம் உய்யும் பொருட்டு மன்றினில் ஆடும் அம்பலவாணரின் திருவடி நிழலை அடைந்தார்.

 நம்பிரான் அடியார்க்கும் நலம் கூறாதோரின் நாக்கை அறுக்கும் சத்தி நாயனார் நற்பாதத்தை பணிந்துவிட்டு, அடுத்ததாக ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் திருத்தொண்டை காண்போம்.

புகழுடன் அரசாண்ட பல்லவர்களின் குல மரபிலே ஐயடிகள் காடவர்கோன் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். வறுமை, பகை அவற்றால் வரும் துன்பங்கள் ஆகியவற்றைப் போக்கி, சைவ நெறி போற்றும் வழியை அறிந்து, அவர் காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி புரிந்து வந்தார். அவர் செங்கோல் செலுத்திப் பெருஞ் செல்வத்தால் புகழ்பெற்று விளங்கினார். உலகிலுள்ள எல்லா உயிர்களும் பெருமையுடன் இனிது வாழுமாறு, அறநெறி தழைத்தோங்க அரசு புரிந்தார். சைவ நெறியும், வேத நெறியும் விளங்கச் செய்த அவர் பகைப்புலங்களை வென்று, தமக்கு அடங்கி ஒடுங்கியிருக்கச் செய்தார். பிற அரசர்களைத் தமது ஏவல் வழியிலே பணி செய்திருக்கச் செய்தார். வடமொழி, தென்மொழி நூல்களிலும் கலைஞானங்களிலும் அவர் வல்லவராய்த் திகழ்ந்தார்.

 இவ்விதமாக சிவநெறியில் சிறந்து நின்றும் ஆட்சி புரிந்து வந்த ஐயடிகள் காடவர்கோன் ‘இந்த அரசியல் இன்னல் தருவது ஆகும்’ என்று அரசாட்சியை இகழ்ந்து நீத்து தமது மைந்தனுக்கு முடி  சூட்டிவிட்டுச் சிவநெறியிலே திருத்தொண்டு செய்ய முனைந்தார். சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயில்கள் எல்லாவற்றையும் தரிசித்து, வணங்கித் திருத்தொண்டு புரிந்து, தாம் சென்ற ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு வெண்பா பாடித் துதித்து வந்தார்.

ஐயடிகள் காடவர்கோன் ஐயடிகள்: இது நாயனார் பெயர். இவரை நம்பியாண்டார் நம்பிகள் ‘பக்தி கடல்  ஐயடிகள்’ என்று துதிப்பர். இவர் இளமையிலே கடவுள் பக்தியில் மிகுந்து விளங்கியதால் ஐயடிகள் ( ஐ- தெய்வம்) என்று வழங்கப்பட்டார்.

 காடவர்கோன் – இது மரபுப் பெயர். (காடவர் – பல்லவர்) ஐயடிகள் காடவர்கோனை ஆராய்ச்சியாளர் மூன்றாம் சிவவர்மன் என்று கருதுகின்றனர். இவர் மகன், சிம்ம விஷ்ணு.

அவர் பொங்கியெழும் பெருங்காதலுடன் சிதம்பர நகருக்கும் சென்று சிவபெருமானின் திருக்கூத்தை கண்டு கும்பிட்டுச் செந்தமிழ் வெண்பாவாகிய மலரினைப் புனைந்தார்.

 இவ்வாறு ஐயடிகள் காடவர்கோன், தில்லைக்கூத்தரை வணங்கி வழிபட்டு திருவருள் பெற்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். பிறகு சிவ தலங்கள் எல்லாவற்றிற்கும் சென்று, வெண்பாக்கள் பாடித் துதித்தார். சிவனடியார்கள் இன்ப முறுவதற்காகத் தமக்கிசைந்த திருப்பணிகளைப் பன்னெடுங்காலம் செய்தபின் அவர் இவ்வுலக வாழ்வை நீத்து, சிவபெருமான் திருவடியின் கீழே வழிவழி நிற்கும் அன்பர்களோடு கூடி இருந்தார்.

பரமசிவனாருக்குப் பாமாலை அணிவித்த ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் பாதத் தாமரைகளை வணங்கிவிட்டு, அடுத்ததாக கணம்புல்ல நாயனாரின் திருத்தொண்டை காண்போம்.

 வடவெள்ளாற்றின் தென்கரையில் இருக்கிறது வேளூர் என்ற செழுமையான ஊர். அங்கு சோைலகளிலுள்ள பெரிய பலாப்பழங்களின் நீண்ட சுளைகளிலிருந்து பொழியும் தேன்வெள்ளம் மடுக்களை நிறைந்தது, வயல்களை விளையச் செய்யும்.

 அங்கு ஒரு சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவர் அங்கு வாழும் பெருங்குடி மக்களுக்கெல்லாம் தலைவராக விளங்கினார். அவர் பெருஞ் செல்வம் படைத்தவர். ஒப்பற்ற பெருங்குணத்தால் மேன்மையுற்று விளங்கி வந்தார். அவர் சிவபெருமானின் திருவடிகளே உண்மையான பொருள் என்றுணர்ந்து சிவபெருமானிடம் பேரன்பு கொண்டிருந்தார். அவர் சிவன் கோயிலுக்கு திருவிளக்கிட்டு, ஏற்றுவதையே தாம் பெற்ற பெருஞ்செல்வத்தின் பயனாகக் கருதினார்.