![]() | ![]() |
ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் 2
சிறையில் ஒருவன் மாட்டிக்கொண்டு, சிறைக் காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தால்,
‘‘தூங்குங்க தம்பிகளா தூங்குங்க, நான்
கடுக்கா தொடுத்திட்டுப் போனதும்
தும்பை விட்டு, உங்க வாலைத் தேடி,
ஏங்குங்க தம்பிகளா ஏங்குங்க’’, என்று
பாடுவான்.
ஆனால் இதே சூழ்நிலையில் மேற்படி நீலாம்பரி ராகத்தை எம்.ஜி.ஆர்., பாடவில்லை, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பாடினார்!
எப்படியும், படத்தில் காட்டப்படுவதைப்போல், ஒரு சிறைக்காவலரின் குறட்டை மட்டும் அந்தப் பாடல் பாடப்படுவதற்கான காரணம் அல்ல. எம்.ஜி.ஆர்., தாக்க நினைத்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சியை! மக்களை ஆட்சிக்கு எதிராக விழிப்படைய செய்வதுதான் பாடல் காட்சியின் உண்மையான நோக்கம்!
இந்தச் சிறைப் பாடல் வந்த காலகட்டம் என்ன? சுதந்திரம் அடைந்திருந்த இந்தியா, பூதாகாரமான பிரச்னைகளை எதிர்கொண்டிருந்தது. பாரத நாட்டில் செல்வம் கொழிக்கிறது என்று பேராசைப்பொங்க அதை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன், அதன் வளங்களை எல்லாம் நன்றாக சப்பிப் போட்டுவிட்டு விலகியிருந்த காலகட்டம் அது. உணவுப் பொருள் உற்பத்தி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சார வசதி என்று பல துறைகளில் இந்தியா பெரும் பற்றாக்குறைகளை சந்தித்துக் கொண்டிருந்தது. நாடு ஒன்றாக நிலைக்குமா இல்லை பலவாக சிதறுமா என்ற அச்சம் இருந்தது. சோவியத் பாணியிலும் சோஷலிச கனவுகளுடனும் பிரதமர் நேரு ஐந்தாண்டு திட்டங்கள் வகுத்தார்...ஆனால் அவற்றின் வளர்ச்சி ஆமை வேகத்தில் இருந்தது. அதை ‘இந்து சதவீத வளர்ச்சி’ என்று இடதுசாரிகள் பெயரிட்டார்கள்!
தனியாரின் ‘லாபம்’ என்கிற சொல்லையே கூட நேரு வெறுத்தார். இதன் காரணமாக, தொழில்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை அரசு தன்னிடம் தேக்கி வைத்துக்கொண்டது. தனியார் முயற்சிகளைப் பெர்மிட் லைசென்ஸ் ராஜ் என்ற சங்கிலி போட்டு அரசு முடக்கியது. இன்னொரு பக்கம் அரசு எந்திரத்தில் ஊழல் பெருகியது. இந்த நிலையில், நேரு கடைப்பிடித்த சோஷலிச பாதையை ஆதரிக்கும் அணியில் இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்தான், ‘தூங்காதே தம்பி தூங்காதே.’
‘‘பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதடா’’ என்பவைதான் பாடலின் முக்கிய வரிகள். பொறுப்பை எங்களிடம் கொடுங்கள் என்பதுதான் தாத்பர்யம். இந்தப் பாடல் பாடப்பட்ட பத்து ஆண்டுகளுக்குள் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த கட்சி ஆட்சிக்கு வந்தது. இன்னொரு பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரே ஆட்சிக்கு வந்தார்!
ஒரு ஜனரஞ்சகப் படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதன் பிரதான பாத்திரத்தின் மீது மக்களுக்குக் கரிசனம் ஏற்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி. இதற்கு இந்தப் பாடல் காட்சி நல்ல சான்று அளிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறையில் இந்தப் பாடலை பாடும் காட்சியில், மேல் தளத்தில் கதாநாயகி பானுமதி இருப்பார். இடையிடையே அவர் பாடலை கேட்டு ஆமோதிப்பதைப் போல் பல ஷாட்டுகள் உள்ளன. பாடல் நிறைவடைந்ததும், ‘பேஷ் பேஷ், பிரமாதம்’ என்று மனதாரப் பாராட்டுவார். வேறு முக்கிய பாத்திரங்களின் வாயிலாகப் பிரதான பாத்திரத்தின் மீது மரியாதை ஏற்படுத்த வேண்டும் என்ற வெற்றிக்கான விதி இந்த வகையில் கடைப்பிடிக்கப்பட்டுவிட்டது.
![]() | ![]() | ![]() |
‘நாடோடி மன்ன’னில் இரண்டு எம்.ஜி.ஆர்கள் என்றால், ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ‘குடியிருந்த கோயி’லிலும் அதே நிலைதான் (இடையில் வந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’யிலும் அப்படித்தான்).
‘‘கோயிலும் தெய்வமும் தானாகி, நமையீன்ற தாயிற்சிறந்ததோர் கோயிலும் இல்லை தெய்வமும் இல்லை, தாயே கோயில், தாயே தெய்வம்...’’ என்று படத்தின் நிறைவில் பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த வகையில், ‘குடியிருந்த கோயில்’ நெடுக தனக்குத் தோதான காட்சிகளை எம்.ஜி.ஆர். அமைத்துக்கொண்டார்.
‘குடியிருந்த கோயி’லில் இரு எம்.ஜி.ஆர்கள் சிறையில்தான்
சந்திக்கிறார்கள்! கொள்ளைக்காரனால் (நம்பியார்) தீய வழியில் செலுத்தப்படும் ஒரு எம்.ஜி.ஆர், மனம் கொந்தளித்த நிலையில் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது, விபத்துக்கு உள்ளாகி போலீசாரின் பிடியில் சிக்குகிறார். இந்த நிலையில்தான் படத்தின் சிறைக்காட்சிகள் வருகின்றன.
முதன்முதலில் தாய்ப்பாசத்தை யாரிடம் அனுபவித்தாரோ, அந்த மாதையே கொல்வதற்கு ஏவப்பட்டதால் வந்த தடுமாற்றம் ஒரு புறம். விபத்தில் அடிபட்டதால் வந்த புத்தி மயக்கம் இன்னொரு புறம். ‘நான் யார், நான் யார், நீ யார்’ என்ற பாடலின் வாயிலாக அவருடைய மனதின் கலக்கம் வெளிப்படுகிறது (இது எம்.ஜி.ஆரைப் போல் அப்போது தி.மு.க.வில் இருந்த புலமைப்பித்தன், திரைப்பாடல் ஆசிரியராக நுழைவதற்கு வாய்ப்பு அளித்த கட்டம்).
ஆனால் படத்தில் காட்டப்படும் சிறை, சினிமா சிறைக்கூடமாகத்
தான் தென்படுகிறது! யதார்த்தத்தோடு ஒட்டியதாக இல்லை. குற்றவாளி சாப்பிடவேண்டிய ஒரு தட்டில் அவனுடைய முகம் கண்ணாடியில் தெரிவதுபோல் தெரிகிறது. பளிங்கைப்போல் அவ்வளவு துப்புரவாக இருக்கிறது தட்டு! இந்த சிறைதான், சின்ன வயதில் பிரிந்த இரட்டைப் பிறவிகள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் களமாக அமைகிறது. அது மட்டும் மல்ல. கொள்ளைக்கூட்டத்தில் செயல்பட்டு வரும் உடன்பிறப்பைப் போலவே சில தோற்ற மாற்றங்களைச் செய்துகொண்டு,
அவனைப்போல நடித்து அவனுடைய கூட்டாளிகளைப் பிடிக்க நாயகன் கிளம்பவும் செய்கிறான். இவை எல்லாவற்றுக்கும் சிறைக்கூடம்தான் ஆரம்ப களமாக விளங்குகிறது.
‘என் அண்ணன்’ படத்தில், தன்னுடைய தங்கைக்கு அவள் கணவனால் இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்கிறான் ரங்கன் (எம்.ஜி.ஆர்). இதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களில் அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
‘கடவுள் ஏன் கல்லானான், மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே’ என்ற அருமையான பாடலை நாயகன் சிறையில் பாடுகிறான். மண்வெட்டியும் கையுமாக தோட்டத்திலே கைதிகள் வேலை செய்ய விடப்படும்போது, அந்த வெளிப்புறத்தில் நாயகனின் இந்த அருமையான பாடல் ஒலிக்கிறது.
‘கல்லானான்’ என்பதன் வாயிலாக, ஏதோ கல்லாலும் செம்பாலும் பஞ்சலோகங்களாலும் வழிபாடு செய்யப்படும் இந்து கடவுளர்கள் மட்டும்தான் பாடலில் குறிக்கப்ப டுகிறார்கள் என்று கொள்வது மேம்போக்கான புரிதலாக இருக்கும்.
‘கல்’ என்பது உறைந்துபோன, இறுகிப்போன நிலையைக் குறிக்கிறது. பல்வேறு சமய கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், அவற்றின் ஜீவனான ஆன்மிக அடித்தளங்களிலிருந்து விலகி, அந்தக் கொள்கைகள் உறைந்துபோகும் நிலை வந்துவிடுகிறது.
அப்படி ஆகிவிட்டதா இல்லையா என்பதற்கு ஒரே பரிசோதனைதான் உண்டு...... உண்மையான தெய்வத் தொடர்பு உள்ளவர்கள், அருள் உள்ளவர்களாகவும் அன்பு உள்ளவர்களாகவும் சாந்தம் ததும்பும் இயல்பினராகவும் இருப்பார்கள்.
கல்லான மனம் கொண்டவர்கள்தான் கருணையற்றும் கடவுளுடைய கனிவற்றும் இருப்பார்கள். இந்த வகையில் உள்ளர்த்தம் கொண்ட அருமையான பாடல் இது. தத்துவப் பாடல்களை எழுதுவதில் வல்லவரான கண்ணதாசனின் கற்பனையில் வந்த அருமையான பல வரிகளைப் பாடல் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது ஒருவகையில் இழப்புகளின் தொகுதிதான். ஒவ்வொரு நொடியும் நாளும் மனிதன் தன்னுடைய இளமையையும் ஆயுளையும் இழந்துகொண்டிருக்கிறான்.
ஒவ்வொரு திருப்பத்திலும் தன்னுடைய நெருங்கிய சொந்தங்களையும் இழக்கிறான்....அந்த வகையில் இழப்புகளை வைத்து ஒரு அருமையான சரணத்தைக் கண்ணதாசன் தருகிறார். இழப்பு என்ற சொல்லே அதில் ஒரு புதிய பொருளைப் பெறுகிறது.
‘‘கொடுமையைக் கண்டவன் கண்ணை இழந்தான், அதை கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான், இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்’’ என்ற வரிகள், இழப்பதிலும் உள்ள இனிமையை நினைக்க வைக்கின்றன.
‘நான்’, ‘நான்’ என்று எப்போதும் நினைக்கும் மனிதன், தன்னுடைய சுயநல எண்ணத்தை விடும் போது, ....தன்னைத் தொலைத்துத் தன்னை மீட்டெடுக்கிறான்!
இந்தப் பாடல் முடிந்ததும், வயோதிகரான ஒரு ஆயுள் கைதி (டி.கே. பகவதி), ரங்கனை நெருங்கி, ‘‘உண்மை என்னங்கறதை ரொம்ப தெளிவா சொல்லிட்டே, ஏன்ப்பா, நீ படிச்சு பட்டம் வாங்கினவனா?’’, என்று கேட்கிறார்.
இதற்கு ரங்கன், ‘‘ஏன்யா, இதைச் சொல்றதுக்குப் படிச்சு பட்டம் வேற வாங்கணுமா? என் வாழ்க்கையில நான் பட்ட அடிகளே போதாதா?’’, என்று பதில் கூறுகிறான்! எம்.ஜி.ஆருக்கு அமைந்த அருமையான வசனம்.
இப்படி தொடங்குகிறது அவர்களின் வார்த்தைப் பரிமாற்றம். தன் பேரைக்கூடத் தெரிவிக்காமல் கைதி எண்ணை ‘நூறு’ என்று முதலில்
தெரிவிக்கும் ஆயுள் கைதி, தன்னுடைய பேரை வேலப்பன் என்று தெரிவிக்கும் நாள் வருகிறது, அப்பா என்று ரங்கன் அவரைக் கட்டித்தழுவும்
நேரமும் வருகிறது! மகனைத் தந்தைக்கும் தந்தையை மகனுக்கும் அறிமுகம் செய்துவைக்கும் இடமாக சிறை அமைகிறது!
எத்தனையோ படங்களில் அசரீரிப் பாடல்கள் வரும்...பொதுவாக அவை ஓரளவுக்குத்தான் வெற்றி பெறும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் உணர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டும் எஃபெக்ட் பாடல்களாக ஒலித்து அவை வேலையை செய்துவிட்டு மறைந்துவிடுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். தொடர்புடைய ஒரு சிறைப்பாடல், மனதிலே தாக்கத்தை ஏற்படுத்துகிற வரிகளையும் இசையமைப்பையும் கொண்டிருந்தது. என்ன பாடல் என்று கேட்கிறீர்களா?
‘நான் ஆணையிட்டால்’ என்ற படத்தில், ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். சிறையில் இருப்பார். அவர் ஒரு கொள்ளைக்கூட்டத்துடன் தொடர்புள்ளவராக இருப்பார். ஆனால் சிறை வாழ்க்கை அவரை மாற்றிவிடும். அங்கே ஒரு காதல் இணைவும் கிடைக்கும். இதன் பிறகு அவர் தன்னுடைய கூட்டத்தினரைத் திருத்த முற்படுகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு பெரும் செல்வந்தரின் ஆதரவு கிடைக்கிறது. செல்வந்தரின் மகளை அவளுக்குப் பிடித்த காவல் அதிகாரியுடன் மணமுடித்து வைக்கும் தறுவாயில், செய்யாத குற்றத்திற்காக எம்.ஜி.ஆர். கைதாகும் சம்பவம் நடக்கிறது. இந்தக் கட்டத்தில் ஒலிக்கும் பாடல்தான்,
‘‘மேகங்கள் இருண்டு வந்தால், அதை
மழை எனச்சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால், அதைப்
பிழை எனக்கொள்வதுண்டோ?’’
திருமண நிகழ்ச்சிக்கான பட்டுச்சட்டையும் வேட்டியும் கட்டியிருந்த நிலையில், பெரும் மாளிகையிலிருந்து கைவிலங்கிடப்பட்டு எம்.ஜி.ஆர். ஜீப்பில் அழைத்துச் செல்லப்படும் இந்தக் காட்சியில் ஒலிக்கும் பாடலுக்கு, வேறு சில பாடல்களுக்கு அமையாத இன்னொரு சிறப்பும் இருந்தது.
(தொடரும்)