கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 192

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019

ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் 2

சிறை­யில் ஒரு­வன் மாட்­டிக்­கொண்டு, சிறைக் காவ­லர்­கள் தூக்­கத்­தில் ஆழ்ந்­தால்,

‘‘தூங்­குங்க தம்­பி­களா தூங்­குங்க, நான்

கடுக்கா தொடுத்­திட்­டுப் போன­தும்

தும்பை விட்டு, உங்க வாலைத் தேடி,

ஏங்­குங்க தம்­பி­களா ஏங்­குங்க’’, என்று

பாடு­வான்.

ஆனால் இதே சூழ்­நி­லை­யில் மேற்­படி நீலாம்­பரி  ராகத்தை எம்.ஜி.ஆர்., பாட­வில்லை, ‘தூங்­காதே தம்பி தூங்­காதே’ என்று பாடி­னார்!

எப்­ப­டி­யும், படத்­தில் காட்­டப்­ப­டு­வ­தைப்­போல், ஒரு சிறைக்­கா­வ­ல­ரின் குறட்டை மட்­டும் அந்­தப் பாடல் பாடப்­ப­டு­வ­தற்­கான கார­ணம் அல்ல. எம்.ஜி.ஆர்., தாக்க நினைத்­தது  அன்­றைய  காங்­கி­ரஸ் ஆட்­சியை! மக்­களை ஆட்­சிக்கு எதி­ராக விழிப்­ப­டைய செய்­வ­து­தான் பாடல் காட்­சி­யின் உண்­மை­யான நோக்­கம்!

இந்­தச் சிறைப் பாடல் வந்த கால­கட்­டம் என்ன?  சுதந்­தி­ரம் அடைந்­தி­ருந்த இந்­தியா, பூதா­கா­ர­மான பிரச்­னை­களை எதிர்­கொண்­டி­ருந்­தது. பாரத நாட்­டில் செல்­வம் கொழிக்­கி­றது என்று பேரா­சைப்­பொங்க அதை அடி­மைப்­ப­டுத்­திய வெள்­ளைக்­கா­ரன், அதன் வளங்­களை எல்­லாம் நன்­றாக சப்­பிப் போட்­டு­விட்டு வில­கி­யி­ருந்த கால­கட்­டம் அது. உண­வுப் பொருள் உற்­பத்தி, கல்வி, சுகா­தா­ரம்,  போக்­கு­வ­ரத்து, மின்­சார வசதி என்று பல துறை­க­ளில் இந்­தியா பெரும் பற்­றாக்­கு­றை­களை சந்­தித்­துக் கொண்­டி­ருந்­தது. நாடு ஒன்­றாக நிலைக்­குமா இல்லை பல­வாக சித­றுமா என்ற அச்­சம் இருந்­தது. சோவி­யத் பாணி­யி­லும் சோஷ­லிச கன­வு­க­ளு­ட­னும் பிர­த­மர் நேரு ஐந்­தாண்டு திட்­டங்­கள் வகுத்­தார்...ஆனால் அவற்­றின் வளர்ச்சி ஆமை வேகத்­தில் இருந்­தது. அதை ‘இந்து சத­வீத வளர்ச்சி’ என்று இட­து­சா­ரி­கள் பெய­ரிட்­டார்­கள்!

 தனி­யா­ரின் ‘லாபம்’ என்­கிற சொல்­லையே கூட நேரு வெறுத்­தார். இதன் கார­ண­மாக,  தொழில்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கும் அதி­கா­ரத்தை அரசு தன்­னி­டம் தேக்கி வைத்­துக்­கொண்­டது. தனி­யார் முயற்­சி­க­ளைப் பெர்­மிட் லைசென்ஸ் ராஜ் என்ற சங்­கிலி போட்டு அரசு முடக்­கி­யது. இன்­னொரு பக்­கம் அரசு எந்­தி­ரத்­தில் ஊழல் பெரு­கி­யது. இந்த நிலை­யில்,  நேரு கடைப்­பி­டித்த சோஷ­லிச பாதையை ஆத­ரிக்­கும் அணி­யில் இருந்த பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம் எழு­திய பாடல்­தான், ‘தூங்­காதே தம்பி தூங்­காதே.’

‘‘பொறுப்­புள்ள மனி­த­ரின் தூக்­கத்­தி­னால், பல பொன்­னான வேலை­யெல்­லாம் தூங்­கு­தடா’’ என்­ப­வை­தான் பாட­லின் முக்­கிய வரி­கள். பொறுப்பை எங்­க­ளி­டம் கொடுங்­கள் என்­ப­து­தான் தாத்­பர்­யம். இந்­தப் பாடல் பாடப்­பட்ட பத்து ஆண்­டு­க­ளுக்­குள் எம்.ஜி.ஆர். சார்ந்­தி­ருந்த கட்சி ஆட்­சிக்கு வந்­தது. இன்­னொரு பத்­தாண்­டு­க­ளில் எம்.ஜி.ஆரே ஆட்­சிக்கு வந்­தார்!

ஒரு ஜன­ரஞ்­ச­கப் படம் வெற்றி பெற­ வேண்­டும் என்­றால், அதன் பிர­தான பாத்­தி­ரத்­தின் மீது மக்­க­ளுக்­குக் கரி­ச­னம் ஏற்­பட வேண்­டும் என்­பது ஒரு முக்­கிய விதி. இதற்கு இந்­தப் பாடல் காட்சி நல்ல சான்று அளிக்­கி­றது. எம்.ஜி.ஆர். சிறை­யில் இந்­தப் பாடலை பாடும் காட்­சி­யில், மேல் தளத்­தில் கதா­நா­யகி பானு­மதி இருப்­பார். இடை­யி­டையே அவர் பாடலை கேட்டு ஆமோ­திப்­ப­தைப் போல் பல ஷாட்­டு­கள் உள்­ளன. பாடல் நிறை­வ­டைந்­த­தும், ‘பேஷ் பேஷ், பிர­மா­தம்’ என்று மன­தா­ரப் பாராட்­டு­வார். வேறு முக்­கிய பாத்­தி­ரங்­க­ளின் வாயி­லா­கப் பிர­தான பாத்­தி­ரத்­தின் மீது மரி­யாதை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற வெற்­றிக்­கான விதி இந்த வகை­யில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டு­விட்­டது.

‘நாடோடி மன்­ன’­­­னில் இரண்டு எம்.ஜி.ஆர்­கள் என்­றால், ஒரு பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வந்த ‘குடி­யி­ருந்த கோயி’­­­லி­லும் அதே நிலை­தான் (இடை­யில் வந்த ‘எங்க வீட்­டுப் பிள்­ளை’­­­யி­லும் அப்­ப­டித்­தான்).

‘‘கோயி­லும் தெய்­வ­மும் தானாகி,  நமை­யீன்ற தாயிற்­சி­றந்­த­தோர் கோயி­லும் இல்லை தெய்­வ­மும் இல்லை,  தாயே கோயில், தாயே தெய்­வம்...’’ என்று படத்­தின் நிறை­வில் பிர­க­ட­னம் செய்­யப்­ப­டு­கி­றது. இந்த வகை­யில், ‘குடி­யி­ருந்த கோயில்’ நெடுக தனக்­குத் தோதான காட்­சி­களை எம்.ஜி.ஆர். அமைத்­துக்­கொண்­டார்.

‘குடி­யி­ருந்த கோயி’­­­லில்  இரு எம்.ஜி.ஆர்­கள்   சிறை­யில்­தான்

சந்­திக்­கி­றார்­கள்! கொள்­ளைக்­கா­ர­னால் (நம்­பி­யார்) தீய வழி­யில் செலுத்­தப்­ப­டும் ஒரு எம்.ஜி.ஆர், மனம் கொந்­த­ளித்த நிலை­யில் காரை ஓட்­டிக்­கொண்டு வரும்­போது, விபத்­துக்கு உள்­ளாகி போலீ­சா­ரின் பிடி­யில் சிக்­கு­கி­றார். இந்த நிலை­யில்­தான் படத்­தின் சிறைக்­காட்­சி­கள் வரு­கின்­றன.

முதன்­மு­த­லில் தாய்ப்­பா­சத்தை யாரி­டம் அனு­ப­வித்­தாரோ, அந்த மாதையே கொல்­வ­தற்கு ஏவப்­பட்­ட­தால் வந்த தடு­மாற்­றம் ஒரு புறம். விபத்­தில் அடி­பட்­ட­தால் வந்த புத்தி மயக்­கம் இன்­னொரு புறம். ‘நான் யார், நான் யார், நீ யார்’ என்ற பாட­லின் வாயி­லாக அவ­ரு­டைய மன­தின் கலக்­கம் வெளிப்­ப­டு­கி­றது (இது எம்.ஜி.ஆரைப் போல் அப்­போது தி.மு.க.வில் இருந்த புல­மைப்­பித்­தன், திரைப்­பா­டல் ஆசி­ரி­ய­ராக நுழை­வ­தற்கு வாய்ப்பு அளித்த கட்­டம்).

ஆனால் படத்­தில் காட்­டப்­ப­டும் சிறை, சினிமா சிறைக்­கூ­ட­மா­கத்­

தான் தென்­ப­டு­கி­றது! யதார்த்­தத்­தோடு ஒட்­டி­ய­தாக இல்லை. குற்­ற­வாளி சாப்­பி­ட­வேண்­டிய ஒரு தட்­டில் அவ­னு­டைய முகம் கண்­ணா­டி­யில் தெரி­வ­து­போல் தெரி­கி­றது.  பளிங்­கைப்­போல் அவ்­வ­ளவு துப்­பு­ர­வாக இருக்­கி­றது தட்டு! இந்த சிறை­தான், சின்ன வய­தில் பிரிந்த இரட்­டைப் பிற­வி­கள் மீண்­டும் சந்­தித்­துக்­கொள்­ளும் கள­மாக அமை­கி­றது. அது மட்­டும் மல்ல. கொள்­ளைக்­கூட்­டத்­தில் செயல்­பட்டு வரும் உடன்­பி­றப்­பைப் போலவே சில தோற்ற மாற்­றங்­க­ளைச் செய்­து­கொண்டு,

அவ­னைப்­போல நடித்து அவ­னு­டைய கூட்­டா­ளி­க­ளைப் பிடிக்க நாய­கன் கிளம்­ப­வும் செய்­கி­றான். இவை எல்­லா­வற்­றுக்­கும் சிறைக்கூடம்­தான் ஆரம்ப கள­மாக விளங்­கு­கி­றது.

‘என் அண்­ணன்’ படத்­தில், தன்­னு­டைய தங்­கைக்கு அவள் கண­வ­னால் இழைக்­கப்­பட்ட அநீ­தி­யைத் தட்­டிக்­கேட்­கி­றான் ரங்­கன் (எம்.ஜி.ஆர்). இதன் தொடர்ச்­சி­யாக நடக்­கும் சம்­ப­வங்­க­ளில் அவன் சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றான்.

‘கட­வுள் ஏன் கல்­லா­னான், மனம் கல்­லாய்ப்­போன மனி­தர்­க­ளாலே’ என்ற அரு­மை­யான பாடலை நாய­கன் சிறை­யில் பாடு­கி­றான். மண்­வெட்­டி­யும் கையு­மாக தோட்­டத்­திலே கைதி­கள் வேலை செய்ய விடப்­ப­டும்­போது, அந்த வெளிப்­பு­றத்­தில் நாய­க­னின் இந்த அரு­மை­யான பாடல் ஒலிக்­கி­றது.

‘கல்­லா­னான்’ என்­ப­தன் வாயி­லாக, ஏதோ கல்­லா­லும் செம்­பா­லும் பஞ்­ச­லோ­கங்­க­ளா­லும் வழி­பாடு செய்­யப்­ப­டும் இந்து கட­வு­ளர்­கள் மட்­டும்­தான் பாட­லில் குறிக்­கப்­ப ­டு­கி­றார்­கள் என்று கொள்­வது மேம்­போக்­கான புரி­த­லாக இருக்­கும்.

‘கல்’ என்­பது உறைந்­து­போன, இறு­கிப்­போன நிலை­யைக் குறிக்­கி­றது. பல்­வேறு சமய கொள்­கை­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­வர்­கள், அவற்­றின்  ஜீவ­னான ஆன்­மிக அடித்­த­ளங்­க­ளி­லி­ருந்து விலகி,  அந்­தக் கொள்­கை­கள் உறைந்­து­போ­கும் நிலை வந்­து­வி­டு­கி­றது.

அப்­படி ஆகி­விட்­டதா இல்­லையா என்­ப­தற்கு ஒரே  பரி­சோ­த­னை­தான் உண்டு...... உண்­மை­யான தெய்­வத் தொடர்பு உள்­ள­வர்­கள், அருள் உள்­ள­வர்­க­ளா­க­வும் அன்பு உள்­ள­வர்­க­ளா­க­வும் சாந்­தம் ததும்­பும் இயல்­பி­ன­ரா­க­வும் இருப்­பார்­கள்.

கல்­லான மனம் கொண்­ட­வர்­கள்­தான் கரு­ணை­யற்­றும் கட­வு­ளு­டைய கனி­வற்­றும் இருப்­பார்­கள்.  இந்த வகை­யில் உள்­ளர்த்­தம் கொண்ட அரு­மை­யான பாடல் இது. தத்­து­வப் பாடல்­களை எழு­து­வ­தில் வல்­ல­வ­ரான கண்­ண­தா­ச­னின் கற்­ப­னை­யில் வந்த அரு­மை­யான பல வரி­க­ளைப் பாடல் கொண்­டி­ருக்­கி­றது.  

வாழ்க்கை என்­பது ஒரு­வ­கை­யில் இழப்­பு­க­ளின் தொகு­தி­தான். ஒவ்­வொரு நொடி­யும் நாளும் மனி­தன் தன்­னு­டைய இள­மை­யை­யும் ஆயு­ளை­யும் இழந்­து­கொண்­டி­ருக்­கி­றான்.

ஒவ்­வொரு திருப்­பத்­தி­லும் தன்­னு­டைய நெருங்­கிய சொந்­தங்­க­ளை­யும் இழக்­கி­றான்....அந்த வகை­யில் இழப்­பு­களை வைத்து ஒரு அரு­மை­யான சர­ணத்­தைக் கண்­ண­தா­சன் தரு­கி­றார். இழப்பு என்ற சொல்லே அதில் ஒரு புதிய பொரு­ளைப் பெறு­கி­றது.

‘‘கொடு­மை­யைக் கண்­ட­வன் கண்ணை இழந்­தான், அதை கோபித்­துத் தடுத்­த­வன் சொல்லை இழந்­தான் இரக்­கத்தை நினைத்­த­வன் பொன்னை இழந்­தான், இங்கு எல்­லோர்க்­கும் நல்­ல­வன் தன்னை இழந்­தான்’’ என்ற வரி­கள், இழப்­ப­தி­லும் உள்ள இனி­மையை நினைக்க வைக்­கின்­றன.

‘நான்’, ‘நான்’ என்று எப்­போ­தும் நினைக்­கும் மனி­தன்,  தன்­னு­டைய சுய­நல எண்­ணத்தை விடும் போது, ....தன்­னைத் தொலைத்­துத் தன்னை மீட்­டெ­டுக்­கி­றான்!

இந்­தப் பாடல் முடிந்­த­தும், வயோ­தி­க­ரான ஒரு ஆயுள் கைதி (டி.கே. பக­வதி), ரங்­கனை நெருங்கி, ‘‘உண்மை என்­னங்­க­றதை ரொம்ப தெளிவா சொல்­லிட்டே, ஏன்ப்பா, நீ படிச்சு பட்­டம் வாங்­கி­ன­வனா?’’, என்று கேட்­கி­றார்.

இதற்கு ரங்­கன், ‘‘ஏன்யா, இதைச் சொல்­ற­துக்­குப் படிச்சு பட்­டம் வேற வாங்­க­ணுமா? என் வாழ்க்­கை­யில நான் பட்ட அடி­களே போதாதா?’’, என்று பதில் கூறு­கி­றான்! எம்.ஜி.ஆருக்கு அமைந்த அரு­மை­யான வச­னம்.

இப்­படி தொடங்­கு­கி­றது அவர்­க­ளின் வார்த்­தைப் பரி­மாற்­றம். தன் பேரைக்­கூ­டத் தெரி­விக்­கா­மல் கைதி எண்ணை ‘நூறு’ என்று முத­லில்

தெரி­விக்­கும் ஆயுள் கைதி,  தன்­னு­டைய பேரை வேலப்­பன் என்று தெரி­விக்­கும் நாள் வரு­கி­றது, அப்பா என்று ரங்­கன் அவ­ரைக் கட்­டித்­த­ழு­வும்

நேர­மும் வரு­கி­றது! மக­னைத் தந்­தைக்­கும் தந்­தையை மக­னுக்­கும் அறி­மு­கம் செய்­து­வைக்­கும் இட­மாக சிறை அமை­கி­றது!

எத்­த­னையோ படங்­க­ளில் அச­ரீ­ரிப் பாடல்­கள் வரும்...பொது­வாக அவை ஓர­ள­வுக்­குத்­தான்  வெற்றி பெறும். ஒரு குறிப்­பிட்ட கட்­டத்­தின் உணர்ச்­சியை அடிக்­கோ­டிட்­டுக் காட்­டும் எஃபெக்ட் பாடல்­க­ளாக ஒலித்து அவை வேலையை செய்­து­விட்டு மறைந்­து­வி­டு­கின்­றன. ஆனால் எம்.ஜி.ஆர். தொடர்­பு­டைய ஒரு சிறைப்­பா­டல், மன­திலே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிற வரி­க­ளை­யும் இசை­ய­மைப்­பை­யும் கொண்­டி­ருந்­தது. என்ன பாடல் என்று கேட்­கி­றீர்­களா?

‘நான் ஆணை­யிட்­டால்’ என்ற படத்­தில், ஆரம்­பத்­தில் எம்.ஜி.ஆர். சிறை­யில் இருப்­பார். அவர் ஒரு கொள்­ளைக்­கூட்­டத்­து­டன் தொடர்­புள்­ள­வ­ராக இருப்­பார். ஆனால் சிறை வாழ்க்கை அவரை மாற்­றி­வி­டும். அங்கே ஒரு காதல்  இணை­வும் கிடைக்­கும். இதன் பிறகு அவர் தன்­னு­டைய கூட்­டத்­தி­ன­ரைத் திருத்த முற்­ப­டு­கி­றார்.

இந்த நிலை­யில் அவ­ருக்கு ஒரு பெரும் செல்­வந்­த­ரின் ஆத­ரவு கிடைக்­கி­றது. செல்­வந்­த­ரின் மகளை அவ­ளுக்­குப் பிடித்த காவல் அதி­கா­ரி­யு­டன் மண­மு­டித்து வைக்­கும் தறு­வா­யில், செய்­யாத குற்­றத்­திற்­காக எம்.ஜி.ஆர். கைதா­கும் சம்­ப­வம் நடக்­கி­றது. இந்­தக் கட்­டத்­தில் ஒலிக்­கும் பாடல்­தான்,

‘‘மேகங்­கள் இருண்டு வந்­தால், அதை

மழை எனச்­சொல்­வ­துண்டு

மனி­தர்­கள் திருந்தி வந்­தால், அதைப்

பிழை எனக்­கொள்­வ­துண்டோ?’’

திரு­மண நிகழ்ச்­சிக்­கான பட்­டுச்­சட்­டை­யும் வேட்­டி­யும் கட்­டி­யி­ருந்த நிலை­யில், பெரும் மாளி­கை­யி­லி­ருந்து கைவி­லங்­கி­டப்­பட்டு எம்.ஜி.ஆர். ஜீப்­பில் அழைத்­துச் செல்­லப்­ப­டும் இந்­தக் காட்­சி­யில் ஒலிக்­கும் பாட­லுக்கு, வேறு சில  பாடல்­க­ளுக்கு அமை­யாத இன்­னொரு சிறப்­பும் இருந்­தது.

(தொட­ரும்)