அத்திவரதர் விழா: இன்னும் 4 நாட்கள் தான் - தவறினால் அடுத்த 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 12:18

காஞ்சிபுரம்,

அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு இந்தாண்டு கிடைத்துள்ளது. அத்திவரதர் தரிசன விழா முடிவடைய இன்னும் 4 நாள்களே உள்ளன. இம்முறை தவறினால் தரிசனத்திற்கு அடுத்த 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் இன்றுடன் 12 நாட்களாக நின்ற கோலத்திலும் அத்திவரதர் பெருமாள் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனத்திற்கு இன்னும் மீதம் 4 நாள்களே உள்ள நிலையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் பெருவிழாவின் 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சை நிற சரிகை கலந்த பட்டாடையில் ராஜ மகுடம் சூட்டி பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதரை காண அதிகளவிலான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மட்டும் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பொது தரிசனத்தில் அத்திவரதரை காண 6 கி.மீ தூரம் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 42 நாட்களில் 85 லட்சம் பக்தர்கள் அத்திவரதர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.