அத்திவரதர் விழா: இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019 16:12

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்றும் தரிசனத்திற்காக லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அதிகாலை தொடங்கி  மாலை வரை  1 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மேலும் 2 லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
42வது நாள் தரிசனம்
அத்திவரதர் வைபவத்தின் 42 வது நாளான இன்று கத்தரிப்பூ, நீலம், ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்தும், வெட்டிவேர், திராட்சை, அத்திப் பழ மாலைகள் மற்றும், மலர் கிரீடத்துடன் நின்ற கோலத்தில்  தரிசனம் அளிக்கிறார் அத்திவரதர்.
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் 16 ம் தேதி கடைசி நாள் என்பதால் தரிசனத்துக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர்.
நள்ளிரவு முதல் காத்திருந்து அதிகாலை நடை திறக்கப்பட்டதும் தரிசித்து திரும்புகிறார்கள்.
41வது நாள் வரை 80 லட்சம் பக்தர்கள் தரிசித்து இருப்பதுடன்,நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதி, அவர்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

100 க்கும் மேற்பட்ட உணவுக்கூடங்கள் மூலம், உணவு வழங்கப்பட்டு வருகிறது.

100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருந்து மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்கள்.

விஐபி, விவிஐபி தரிசனத்தில், குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, தனியாக வரிசைப்படுத்தப்பட்டு, 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையில் பக்தர்கள் நிற்பதுடன், 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.

பொது தரிசனத்தில் வரிசை நகர்ந்து கொண்டே இருப்பதால் 5 மணி நேரத்தில் தரிசித்து செல்கிறார்கள்.