வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019 20:45

சியோல்,

  குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் இரு ஏவுகணைகளை ஏவி வடகொரியா மீண்டும் சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது.

நட்பு நாடுகளான தென் கொரியாவும் - அமெரிக்காவும் கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட் 11ஆம் தேதி (நாளை) அடுத்தக்கட்ட பயிற்சிகள் தொடங்கவுள்ளன.

அமெரிக்கா - தென்கொரியா கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதை, தங்கள் நாட்டுக்கு எதிரான படையெடுப்பிற்கான ஒத்திகை என்று வடகொரியா கருதுகிறது.

எனவே கூட்டுப் பயிற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி, வடகொரியா எச்சரித்து வருகிறது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி இரு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்தது. அதை நேரில் கண்காணித்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், இது அமெரிக்கா - தென் கொரியாவுக்கான எச்சரிக்கை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில், சனிக்கிழமை அன்று காலை தெற்கு ஹன்யோங் மாகாணத்தில் உள்ள ஹாம்ஹங் நகரில் இருந்து இரு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.

அந்த இரு ஏவுகணைகளும் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை தாக்கி அழிக்கும் சிறிய ரக ஏவுகணைகள்.மணிக்கு 7,500 கிலோ மீட்டர் வேகத்தில் 48 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும் திறன் பெற்றவை. கொரிய தீபகற்பம் - ஜப்பான் இடையே கடல் பகுதியில் அந்த ஏவுகணைகள் விழுந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரத்தில் வடகொரியா 5 முறை ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

அதிபர் டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் இருந்து மிகவும் அழகிய கடிதம் ஒன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அந்த கடிதத்தில் தனக்கு போர் ஒத்திகைகள் பிடிக்கவில்லை என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். எனக்கும் அவை பிடித்ததில்லை. ஏனென்றால் அதற்காக அமெரிக்கா பணம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை என டிரம்ப் கூறினார்.

வட கொரிய அதிபருடன் மற்றொரு சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறிய டிரம்ப், அந்நாட்டு நடத்தும் ஏவுகணைச் சோதனைகளால் தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

வடகொரியாவில் அணு ஆயுதச் சோதனைகள் எதுவும் நடக்கவில்லை. குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளை மட்டுமே அந்நாட்டு சோதனை செய்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் நெடுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்யவில்லை என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.