ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா பயணம்

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2019 16:15

இஸ்லாமாபாத், 

   ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி இன்று சீனாவுக்கு விரைந்தார்.

இந்திய அரசு அரசியலமைப்பு பிரிவு 370 –ஐ ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்தது. இந்திய தூதரை வெளியேற்றியது. இதுபோல் தொடர்ந்து பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.

பாகிஸ்தான் தன் அவசர முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இந்தியா தன் முடிவை மறுபரிசீலனை செய்தால் மட்டுமே பாகிஸ்தான் தன் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பேச அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி இன்று சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஷா மஹ்முத் குரேஷி,  ‘‘பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சீன அரசிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும். ஏனென்றால் சீனா நமது நட்பு நாடு மட்டுமல்ல. நம் பிராந்தியத்தின் மிக முக்கியமான நாடாகும்’’

‘‘இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து சீன தலைவர்களிடம் விவரிப்பேன். ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் செயல்கள் பற்றி எடுத்துரைப்பேன்’’ என ஷா மஹ்முத் குரேஷி கூறினார்.

சீனா வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

‘‘இருநாடுகளும் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சர்ச்சைக்குரிய பகுதியின் அந்தஸ்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட தரப்பு ஒருதலைபட்சமாக முடிவெடுக்க கூடாது.அது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும்’’ என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் 11ம்,தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக சீனா செல்கிறார். அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.