தண்ணீர் பற்றாக்குறை: நெல்லுக்கு பதில் மக்காச் சோளம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019

ஹரி­யானா மாநி­லத்­தில் நிலத்­தடி நீர் மட்­டம் படு­பா­த­ளத்­திற்கு செல்­வ­தால், மாநில அரசு தீவிர நட­வ­டிக்­கை­யில் இறங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக நிலத்­தடி நீர் மட்­டம் சரா­ச­ரி­யாக 10 மீட்­டர் குறைந்து வரு­கி­றது. குறிப்­பாக நெல் பயி­ரி­டப்­ப­டும் பகு­தி­க­ளில் நிலத்­தடி நீர் மட்­டம் வரு­டத்­திற்கு ஒரு மீட்­டர் சரி­கின்­றது. நெல் பயி­ருக்கு அதிக தண்­ணீர் தேவை. ஒரு கிலோ நெல் உற்­பத்தி செய்ய ஐந்­தா­யி­ரம் லிட்­டர் தண்­ணீர் தேவை.

நிலத்­தடி நீர் மட்­டம் சரி­வதை தடுக்க ஹரி­யானா மாநில அரசு இரண்டு மாதத்­திற்கு முன் ஒரு தீர்வை கூறி­யது. விவ­சா­யி­கள் நெல்­லுக்கு பதி­லாக மக்­காச் சோளம் அல்­லது பருப்பு வகை­களை (துவரை, உளுந்து போன்­றவை) பயி­ரி­டும்­படி அறி­வு­றுத்­தி­யது. ஒரு கிலோ மக்­காச் சோளம் உற்­பத்தி செய்ய ஆயி­ரத்­தில் இருந்து ஆயி­ரத்து ஐநூறு லிட்­டர் தண்­ணீர் மட்­டுமே தேவை. விவ­சா­யி­கள் மக்­காச் சோளம் பயி­ரி­டு­வதை ஊக்­கு­விக்க இல­வ­ச­மாக விதை­யும், ரொக்­க­மாக இரண்­டா­யி­ரம் ரூபா­யும்  வழங்­கப்­ப­டும் என அறி­வித்­தது. அத்­து­டன் விளைந்த மக்­காச் சோளம் குவிண்­டால் ரூ.1,700 (குறைந்­த­பட்ச ஆதார விலை) வீதம் கொள்­மு­தல் செய்­வ­தா­க­வும் அறி­வித்­தது. இந்த திட்­டத்­திற்கு ‘ஜல் ஹி ஜீவன் ஹை’ என்று பெய­ரிட்­டது. இந்த திட்­டத்தை அள­வுக்கு அதி­க­மாக நிலத்­தடி நீர் உறிஞ்­சப்­பட்­டும், பகு­தி­க­ளில் 50 ஆயி­ரம் ஹெக்­டர் பரப்­பில்  அமல்­ப­டுத்­தப்­ப­டும் என்­றும் அறி­வித்­தது.

இந்த திட்­டம் விவ­சா­யி­கள் மன­தில் அச்­சத்தை தோற்­று­வித்­துள்­ளது. நெல்­லைப் போல் மக்­காச் சோளம் போதிய விளைச்­சல் இருக்­குமா? அரசு விளைந்த மக்­காச் சோளம் போன்ற மற்ற தானி­யங்­களை கொள்­மு­தல் செய்­யுமா? மக்­காச் சோளம் எதிர்­பார்த்த அளவு விளைச்­சல் இல்லை எனில் என்ன செய்­வது என்­பது போன்ற அச்­சம் விவ­சா­யி­கள் மத்­தி­யில் ஏற்­பட்­டுள்­ளது. இதே அரசு ஐம்­பது வரு­டத்­திற்கு முன் பசுமை புரட்­சி­யின் போது, விவ­சா­யி­களை நெல் பயி­ரி­டு­மாறு கூறி­யது. பல வரு­டங்­க­ளாக கரீப் பரு­வத்­தில் விவ­சா­யி­கள் நெல் பயி­ரிட்டு வரு­கின்­ற­னர். நெல் கணி­ச­மான உற்­பத்தி, போதிய விலை கிடைப்­பது போன்ற கார­ணங்­க­ளால், விவ­சா­யி­கள் தற்­போது மக்­காச் சோளம் பயி­ரிட்­டால் போதிய விளைச்­சல் இருக்­குமா, கட்­டுப்­ப­டி­யா­குமா என்று தயங்­கு­கின்­ற­னர். அதே நேரத்­தில் அரசு அதி­கா­ரி­கள் விவ­சா­யி­கள் மத்­தி­யில் கூட்­டங்­களை நடத்தி, மக்­காச் சோளம் பயி­ரிட்­டால் இல­வ­ச­மாக காப்­பீடு செய்து கொடுப்­ப­தா­க­வும் வாக்­கு­று­தி­ய­ளிக்­கின்­ற­னர். அதி­கா­ரி­கள் எப்­ப­டியோ விவ­சா­யி­களை சம்­ம­திக்­க­வைத்து நெல்­லுக்கு பதி­லாக 50 ஆயி­ரம் ஹெக்­டே­ரில் மக்­காச் சோளம் போன்ற வேறு தானி­யங்­களை பயி­ரிட வைக்­கும் இலக்கை எட்ட முயற்­சிக்­கின்­ற­னர். நெல்­லுக்கு பதி­லாக மற்ற தானி­யங்­களை பயி­ரிட சம்­ம­திக்­கும் விவ­சா­யி­கள் பற்­றிய விப­ரங்­க­ளை­யும் சேக­ரிக்­கின்­ற­னர். சோனா­பட் மாவட்­டத்­தில் உள்ள கனூர் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி ராஜேந்­தர் தியாகி (57) அவ­ரது நிலத்­தில் நெல், கோதுமை, காய்­கறி போன்­ற­வை­களை பயி­ரி­டு­கின்­றார்.

அரசு நெல்­லுக்கு பதி­லாக மாற்று பயிர் செய்ய இலக்கு நிர்­ண­யித்­துள்ள பகு­தி­க­ளில் கனூ­ரும் அடங்­கும். “மக்­காச் சோளம் பயி­ரி­டு­வது லாப­க­ர­மா­ன­தாக இருக்­காது. இதை அர­சும் கொள்­மு­தல் செய்­யாது. அத்­து­டன் மக்­காச் சோளம் பயி­ரிட்­டால் மாடு­க­ளால் ஆபத்­தும் உள்­ளது. நெல் வயல்­க­ளில் தண்­ணீர் நிற்­ப­தால் மாடு­கள் வய­லில் இறங்­காது என்று தெரி­வித்­தார். இந்த மாற்று பயிர் திட்­டத்தை அரசு இந்த வரு­டம் கடு­மை­யாக அமல்­ப­டுத்­தாது. ஏனெ­னில் அடுத்த வரு­டம் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற உள்­ளது. இத­னால் நீக்­கு­போக்­காக நடந்து கொள்­ளும். அதற்கு பிறகு மாற்று பயிர் திட்­டத்தை கடு­மை­யாக அமல்­ப­டுத்­தும். அத்­து­டன் அரசு காப்­பீடு செய்­வ­தாக கூறு­வ­தை­யும் நம்­பு­வ­தற்­கில்லை. அரசு அதி­கா­ரி­கள் காரி­யம் ஆக வேண்­டும் என்­ப­தற்­காக எல்லா வாக்­கு­று­தி­க­ளை­யும் அளிப்­பார்­கள். நிச்­ச­யம் காப்­பீடு இழப்­பீடு கிடைக்­காது என்று உறு­தி­யாக கூறு­கின்­றார் விவ­சாயி ராஜேந்­தர் தியாகி.

ஹரி­யான மாநில அர­சின் நெல்­லுக்கு பதி­லாக மாற்று பயிர் திட்­டத்­திற்கு பல்­வேறு மாவட்­டங்­க­ளில் உள்ள விவ­சா­யி­கள் மத்­தி­யில் பல அச்­சங்­கள் எழுந்­துள்­ளன. இந்த திட்­டம் குரு­ஷேத்­திரா மாவட்­டம் கர்­னால் ஆசாந்த் என்ற தாலு­கா­வி­லும் அமல்­ப­டுத்த உள்­ள­னர். இந்த தாலு­கா­வில் உள்ள தேரா பூலா சிங் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி அவ­தார் சிங் (34) கூறு­கை­யில், “இந்த பரு­வத்­தில் மக்­காச் சோளம் பயி­ரிட்­டால், மழை­யால் பாதிப்பு ஏற்­ப­டும். மக்­காச் சோளம் பயி­ரிட்ட நிலத்­தில் அதிக தண்­ணீர் தேங்க கூடாது. மழை காலத்­தில் பெய்­யும் மழை தண்­ணீரை நெல் மட்­டுமே தாங்கி வள­ரும். மக்­காச் சோளம் போன்­றவை அழு­கி­வி­டும். இந்த பகு­தி­யில் நிலத்­தடி நீர் தர­மாக இல்­லா­விட்­டால் கூட, நிலத்­தடி நீர் உள்­ளது. அரசு நிலத்­தடி நீர் மட்­டம் அதிக அளவு சரிந்­துள்ள பகு­தி­க­ளில் மட்­டும் நெல் பயி­ரி­டு­வதை தவிர்க்­கு­மாறு கூற­வேண்­டும்” என்று கூறி­னார்.

அவ­தார் சிங் அவ­ருக்கு சொந்­த­மான நிலத்­தில் மக்­காச் சோளத்தை பயி­ரிட போவ­தில்லை. அவர் குரு­ஷேத்­திரா, அம்­பாலா, யமூனா நகர் ஆகிய மாவட்­டங்­க­ளில் மழை­யின் போது வெள்­ளம் வரும் என்­கின்­றார். அதிக அளவு மழை பெய்­யும் போது வெள்­ளத்­தால் குரு­ஷேத்­திரா மாவட்­டத்­தில் மட்­டும் 1,500 ஹெக்­டேர் பரப்­ப­ளவு நிலம் பாதிக்­கப்­ப­டும். நிலத்­தில் தண்­ணீர் தேங்­கும். இத­னால் மக்­காச் சோளம் மட்­டு­மல்­லாது நெற்­ப­யி­ரும் கூட பாதிக்­கப்­ப­டும். ஹலால்­பூர் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த சுக்­விந்­தர் சிங் (32) என்ற விவ­சா­யிக்கு 50 ஏக்­கர் நிலம் உள்­ளது. இவரை விவ­சாய துறை அதி­கா­ரி­கள் கெஞ்சி, காப்­பீடு செய்து தரு­வ­தாக சமா­தா­னப்­ப­டுத்­திய பிறகு, எட்டு ஏக்­க­ரில் மக்­காச் சோளம் பயி­ரிட சம்­ம­தித்­துள்­ளார். இந்த எட்டு ஏக்­க­ரில் நான்கு ஏக்­கர் நீரில் மூழ்­கும் அபா­யம் உள்­ளது. இந்த கிரா­மத்­தில் இவர் மட்­டுமே மக்­காச் சோளம் பயி­ரிட சம்­ம­தித்­துள்­ளார்.

இதே கிரா­மத்­தைச் சேர்ந்த பிர­தீப் குமார் (34) என்ற விவ­சாயி, போதிய வரு­வாய் கிடைத்­தால் மக்­காச் சோளம் பயி­ரி­டு­வ­தில் விவ­சா­யி­க­ளுக்கு எவ்­வித ஆட்­சே­ப­னை­யும் இல்லை. மழை­யால் ஈரப்­ப­தம் அதி­க­மா­கும். இத­னால் போதிய விலை கிடைக்­காது. வியா­பா­ரி­கள் தர­மாக இல்லை. எனவே குவின்­டா­லுக்கு ரூ. 600 முதல் 700 வரை மட்­டுமே கொடுப்­போம் என்­பார்­கள். எங்­க­ளால் என்ன செய்ய முடி­யும்? என்று கேட்­கின்­றார். காப்­பீடு செய்­தால் போதிய நஷ்­ட­ஈடு கிடைப்­ப­தில்லை என்ற புகா­ரும் உள்­ளது. இதே மாவட்­டத்­தைச் சேர்ந்த மாதனா என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சா­யி­கள், இங்­குள்ள மண் நெல் பயி­ரி­டு­வ­தற்கு மட்­டமே ஏற்­றது. மக்­காச் சோளம் பயி­ரி­டு­வ­தற்கு ஏற்ற மண் அல்ல என்று கூறு­கின்­ற­னர்.

அதே நேரத்­தில் அதி­கா­ரி­கள், விவ­சா­யி­க­ளின் பயம் தேவை­யற்­றது என்­கின்­ற­னர். “பசுமை புரட்­சிக்கு முன்பு, இந்த பிராந்­தி­யத்­தில் மக்­காச் சோளம், சோளம் மட்­டுமே பயி­ரி­டப்­பட்­டது. மாநி­லத்­தில் எந்த பகு­தி­யி­லும் மக்­காச் சோளம் வள­ரும். சிறு பகு­தி­யில் மட்­டுமே மழை­யால் வெள்ள பாதிப்பு இருக்­கும். நெல்­லுக்கு பதி­லாக மக்­காச் சோளம் பயி­ரிட சம்­ம­தித்­துள்ள விவ­சா­யி­க­ளுக்கு நிச்­ச­யம் காப்­பீடு திட்­டத்­தின் கீழ் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டும் என்று சுரேஷ் கிலா­வட் தெரி­வித்­தார். இவர் விவ­சாய துறை­யின் கூடு­தல் இயக்­கு­நர். நெல்­லுக்கு பதி­லாக மக்­காச் சோளம் பயி­ரி­டும் மாற்று பயிர் திட்­டத்தை அமல்­ப­டுத்­தும் அதி­கா­ரி­யும் கூட. நாங்­கள் விவ­சா­யி­க­ளுக்கு உறு­தி­மொ­ழி­ய­ளித்­துள்­ளோம். முத­ல­மைச்­ச­ரும் கூட உறு­தி­ய­ளித்­துள்­ளார். நிச்­ச­யம் விவ­சா­யி­க­ளுக்கு காப்­பீடு நஷ்­ட­ஈடு கிடைக்­கும் என்­றார்.

நெல் பயி­ரி­டும் விவ­சா­யி­களை மாற்று பயி­ருக்கு மாற்­ற­வது அர­சுக்கு கடி­ன­மா­னது. ஏனெ­னில் நெல்­லுக்கு நல்ல விலை கிடைக்­கின்­றது என்­பதை ஏற்­றுக் கொள்­ளும் சுரேஷ் கிலாட், நெல்­லுக்கு இணை­யாக மக்­காச் சோளத்­திற்­கும் குறைந்­த­பட்ச ஆதார விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.(குவிண்­டால் ரூ.1,700) நெல்லை போன்றே மக்­காச் சோளத்­தி­லும் அதிக  விளைச்­சல் இருக்­கும். அரசே மக்­காச் சோளத்தை கொள்­மு­தல் செய்­யும் என்ற வாக்­கு­று­தி­யை­யும் வழங்­கி­யுள்­ளது. எனவே நிச்­ச­யம் இந்த திட்­டம் வெற்றி பெறும் என்று தெரி­வித்­தார்.

பார­திய கிஷான் யூனி­யன் (பார­திய விவ­சா­யி­கள் சங்­கம்) மாநில தலை­வர் குர்­நாம் சிங் சாருனி கூறு­கை­யில், மக்­காச் சோளத்தை அரசே கொள்­மு­தல் செய்து, நெல் பயி­ரிட்­டால் கிடைக்­கும் வரு­மா­னம் விவ­சா­யி­க­ளுக்கு கிடைத்­தால், இந்த திட்­டம் நிச்­ச­யம் வெற்றி பெறும். அதே நேரத்­தில் களி­மண் அதி­கம் உள்ள பகு­தி­க­ளில் விவ­சா­யி­களை சோளம் பயி­ரிட நிர்ப்­பந்­திக்க கூடாது. ஏனெ­னில் களி­மண் பாங்­கான நிலத்­தில் மக்­காச் சோளம் வள­ராது என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

குரு­ஷேத்­திரா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் புவி­யி­யல் துறை தலை­வர் ஏ.ஆர்.சவுத்ரி கூறு­கை­யில்,. “இந்த திட்­டம் நிலத்­தடி நீர் பாதா­ளத்­திற்கு செல்­வதை தடுத்து நிறுத்த மிக அவ­சி­ய­மா­னது. உறிஞ்சு எடுக்­கப்­ப­டும் நிலத்­தடி நீரில் 80 சத­வி­கி­தம் விவ­சா­யத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அரசு இல­வச மின்­சா­ரம் வழங்க தொடங்­கிய 1990ம் ஆண்­டு­க­ளி­லேயே நிலத்­தடி நீர் மட்­டம் சரிய தொடங்­கி­யது. விவ­சா­யி­கள் வரை­முறை இல்­லா­மல் நிலத்­தடி நீரை உறிஞ்­சு­கின்­ற­னர். நிலத்­தடி நீர் மட்­டம் அதி­க­ரிக்க மழை நீரை சேமிக்க வேண்­டும். நதி நீர் பாயும் பகு­தியை வரை­ய­றுக்க வேண்­டும். நதி­யின் குறுக்கே அணை­கள் கட்டி, பாசன வசதி செய்த பிறகு, வறட்சி பகு­தி­கள் விவ­சா­யம் செய்­யும் பகு­தி­யாக மாறி­யது. இத­னால் பூமி­யில் தண்­ணீர் செல்­வது தடை­பட்­டது. ஒவ்­வொரு மாவட்ட கலெக்­ட­ரும், நதி நீர் பாயும் கால்­வாய்­க­ளில் ஆக்­கி­ர­மிப்பு இல்­லா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். அத்­து­டன் நகர்ப்­பு­றங்­க­ளில் மழை­நீர் கால்­வாய்­களை அமைத்து, குறிப்­பிட்ட கால்­வாய்­க­ளில் மழை தண்­ணீரை கொண்டு சேர்க்க வேண்­டும். நிலத்­தடி நீர் மட்­டம் அதி­க­ரிக்க வச­தி­யாக இயற்­கை­யாக கால்­வாய்­க­ளில் ஆங்­காங்கே ஒரு அடி உய­ரத்­தில் தடுப்பு சுவர் கட்ட வேண்­டும். இத­னால் மழை நீர் வீணா­வதை தடுத்து, நிலத்­தின் அடி­யில் செல்ல உத­வி­யாக இருக்­கும். நிலத்­தடி நீர் மட்­டம் அதி­க­ரிக்­கும்” என்று தெரி­வித்­தார்.

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில்

 சலிக் அக­மது.