கிரீன்லாந்தில் உருகும் பனியால் அபாயம்

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019

கிரீன்லாந்தில் ஒரே நாளில் பல லட்சக்கணக்கான டன் பனி உருகி இருப்பது சுற்றுச் சூழல் ஆராய்ச்சி யாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்து ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் இடையே உள்ள தீவு. உலகில் அதிக பனி கட்டிகள் குவிந்துள்ள தீவு கிரீன்லாந்து. அன்டார்டிக்கில் உள்ள பனிப்பகுதிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பனி பாறைகள் உள்ள நாடு கிரீன்லாந்து. சமீபத்தில் கிரீன்லாந்தில் வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வெப்பம் அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் 1,100 கோடி டன் அளவு பனிக்கட்டிகள் உருகியுள்ளது. 19,700 டன் பனி இருக்கும் கிரீன்லாந்தில் வருடத்திற்கு ஆறாயிரம் முதல் ஏழாயிரம் டன் பனி உருகுகின்றது. கோடை காலத்தில் மேற்பரப்பில் 50 சதவிகித பனி உருகும். ஆர்டிக்கில் குளிர்காலம் வரும் போது, பனி உறைவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் எப்போதும் இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக ஆர்டிக் பகுதியிலும் வெப்பம் அதிகரித்தது. இதுவே கிரீன்லாந்தில் பனி உருக காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போல் 1950ல் அதிக அளவு பனி உருகியாதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 1,100 கோடி டன் பனி உருகி இருப்பதால் கடல் நீர் மட்டம் அதிகரிக்குமா என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்தால், பல தீவு நாடுகளும், பல தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.