திண்ணை 11–8–19

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

வாசன் பப்ளிகேஷன் வெளியீடு, பி. சுவாமிநாதன் எழுதிய, 'அமரர் எஸ்.எஸ். வாசன் நுாற்றாண்டு மலர்' நுாலிலிருந்து:

ஈ.வெ.ரா., நடத்தி வந்த, 'குடி அரசு' இதழுக்கு, ஏராளமான விளம்பரங்களை சேகரித்து கொடுத்து, அதற்கான பணத்தையும், காலம் தவறாமல் அனுப்பி வந்தார், 'ஜெமினி' அதிபர், வாசன்.

அந்த காலத்து, 100 ரூபாய், அகலமாக பச்சை நிறத்தில் இருக்கும். பச்சை நோட்டு என்றால், 100 ரூபாய் என்று அர்த்தம்.

வாசன், பணத்தை ஒழுங்காக அனுப்புவதை பார்த்து, 'உங்களிடமிருந்து தான், மாதந்தோறும் ஒரு பச்சை தாளை பார்க்கிறேன்...' என்று கடிதம் எழுதினாராம், ஈ.வெ.ரா.,

'விடுதலை' நாளிதழுக்கு, குத்துார் குருசாமி மற்றும் வீரமணி ஆசிரியர்களாக இருந்தபோது, சினிமா செய்திகளோ, விளம்பரங்களோ இடம்பெறாத நாளேடாகத் தான் வெளிவந்தது.

ஆனால், 'ஜெமினி' அதிபர், வாசன் மட்டும், நன்றி தவறாது, நட்பு மாறாது, தன் திரைப்படங்களை, 'விடுதலை' இதழுக்கு விளம்பரங்களாக அனுப்பி வந்தார்.

இப்படி ஒரு முறை, விளம்பரம் வந்ததும், 'சினிமாவை எதிர்த்து எழுதும், நம் பத்திரிகையில், இந்த விளம்பரம் வரலாமா... இந்த வருமானம் நமக்கு தேவையா...' என, ஈ.வெ.ரா.,விடம் கேட்டனர், தோழர்கள்.

அதற்கு, ஈ.வெ.ரா., கூறுகையில், 'எந்த விதிக்கும், விலக்கு உண்டு; வருமானம் வருகிறது என்பதற்காக அல்ல; அதுவும் முக்கியமானதுதான். ‘குடி அரசு’ ஏட்டின் கருத்துகளை பற்றி கவலைப்படாமல், சென்னையிலிருந்து ஈரோடுக்கு, ஏராளமான விளம்பரங்களை வாங்கி அனுப்புகிறார். அதற்கு, நாம் மரியாதை காட்டுகிறோம்...

'அவரும், நம் கொள்கைகளை அறிந்து தானே விளம்பரம் அனுப்புகிறார். எனவே, யார் சொல்வது பற்றியும் கவலைப்படாமல் வெளியிடுவோம்...' என்றார். அதுதான், ஈ.வெ.ரா.,

***

ஸ்டார் பதிப்பகம் வெளியீடு, 'கர்மவீரர் காம ராஜரின் முத்தான தகவல்கள்' நுாலிலிருந்து :

எம்.ஜி.ஆர்., ஒரு, தி.மு.க.,காரர். பின், பிரிந்து, அ.தி.மு.க., கட்சியை துவக்கினார்; முதல்வர் ஆனார். இதுதானே நமக்கு தெரியும்?

ஆனால், பலருக்கு தெரியாத விஷயம், எம்.ஜி.ஆர்., ஆரம்பத்தில், தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்திஜியையும், காமராஜரையும் அதிகம் நேசித்தவர்.

ஆரம்பம் முதல், கதர் ஆடை தான் அணிந்தார், எம்.ஜி.ஆர்., அதன்பின், ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நட்பு கிடைத்து, தி.மு.க.,வில் இணைந்தார்.

ஆனாலும், கடைசி வரை, காமராஜர் மீது, தீராத பாசம் வைத்திருந்தார், எம்.ஜி.ஆர்.,

தன் இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து, விருந்து கொடுத்து மகிழ்ந்த, எம்.ஜி.ஆருக்கு, ஒரு தீராத ஏக்கம் இருந்தது...

ஒரே ஒருமுறை, காமராஜரை, தன் இல்லத்திற்கு அழைத்து, அருகே அமர்ந்து, உணவு சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஆனால், எப்போது அழைத்தாலும், சிரித்தபடி, 'சொல்றேன்...' என்ற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார், காமராஜர்.

ஒரு முறை, சிவாஜி, எம்.ஜி.ஆர்., பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு வந்தார், முதல்வர் காமராஜர்.

வழியனுப்பும்போது, மீண்டும் அழைப்பு விடுத்தார், எம்.ஜி.ஆர்.,

அப்போதும், அதே புன்னகை மாறாமல், 'ராமச்சந்திரா... நான், உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை... உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும், மீன், இறைச்சியும், அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவர்.

நான், மக்கள் ஊழியன். ரெண்டு இட்லி, தயிர் சோறுதான், எனக்கு சரிப்படும். உன் வீட்டில், அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால், திரும்பவும், நாக்கு அந்த ருசி தேடும். அதுக்கு நான் எங்கே போறது...? என்று கூறவும், ஆடிப்போனார், எம்.ஜி.ஆர்.,

இப்படி ஒரு, மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா என்று, காமராஜரை வணங்கினார், எம்.ஜி.ஆர்.,

***