சிறுகதை : மனம் விரும்புதே உன்னை...! விஜயா கிருஷ்ணன்

பதிவு செய்த நாள் : 11 ஆகஸ்ட் 2019

''பார்வதியம்மா... உங்க நிலைமைக்காக நானும் ஆறு மாசமா பொறுத்து போயாச்சு. இன்னும் ஒரு மாசத்திலே பணம் கிடைக்கலேன்னா நான் வேற வழியிலே போக வேண்டியது வரும். நான் எதுவும் சொல்லலையேன்னு நினைக்க வேண்டாம். அடுத்த மாசம் அஞ்சாம் தேதி வாக்கில் வருவேன். என்ன செய்வீங்களோ... ஏது செய்வீங்களோ தெரியாது. ஆனா, எனக்கு அப்போ பணம் ரெடியா இருக்கணும். அப்பவும் அது இதுன்னு ஏதாவது சாக்கு போக்கு சொன்னா சரியாகாது.'' கடுமையாக சொன்னபடியே ஆவுடையப்பன் கோபத்தோடே இறங்கி போனார். எதிரே கவுதம் வந்தான். அவனை பார்த்தும் பார்க்காதது போல் போனார்.

''அம்மா.... என்னம்மா சொல்லிட்டு போறார்?''

''வழக்கமான பல்லவியைத்தான் பாடிட்டு போறார். அவரை சொல்லவும் குத்தமில்லை. வட்டிக்கு காசு கொடுத்து அந்த வருமானத்திலேயே வாழ்றவர். நம்மகிட்டே மொத்தமா ரெண்டு லட்சத்தை தந்துட்டு வட்டியும், அசலும் கிடைக்கலேன்னா கோபப்படத்தானே செய்வார்? என் கவலை என்னன்னா, அவர் சொல்ற மாதிரி ஒரு மாசத்திலே இந்த தொகையை எப்படி கொடுக்க முடியும் என்கிறதுதான். உனக்கு கிடைக்கிற சம்பளம் வாடகைக்கும், வீட்டு செலவுக்கும், எனக்கு மாத்திரை மருந்து வாங்கவுமே சரியா போகுது. நாம இவ்வளவு செலவு செய்து கவிதாவை கட்டிக் கொடுத்திருக்க வேண்டாமோன்னு சில நேரம் நினைக்க தோணுது.''

''அப்படி என்னம்மா பெரிசா பண்ணிட்டோம்? இருபத்தஞ்சு பவுன் நகையும், கையிலே அம்பதினாயிரம் ரொக்கமும் கேட்டாங்க. அவங்களை பொறுத்தவரை அது சின்ன தொகைதான். நம்மாலேதான் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டோம். அப்பாவுக்காக நாம நிறைய செலவழிச்சோம். இருந்தும் அவரை காப்பாத்த முடியாமல் போச்சு. அதுக்கப்புறம் ஆறே மாசத்திலேயே கவிதாவின் கல்யாணம் அமைஞ்சதால நம்மால சமாளிக்க முடியலே. ஆனால் கவிதாவை நல்லபடியா கட்டிக்கொடுத்து இப்போ நல்ல குடும்பத்திலே சந்தோஷமாக வாழ்றாளே... அத நினைச்சா சந்தோஷமாகத்தானே இருக்குது. ம்... இந்த ரெண்டு லட்சத்துக்கும் ஏதாவது ஒரு வழி பிறக்கும்.'' சொன்னபடியே தான் வாங்கி வந்த மாலை பேப்பரை பிரித்து படித்தான். விளம்பர பகுதியில் 'மணமகன் தேவை' என்று சற்று பெரிய அளவில் போட்டிருக்க, அதை கூர்ந்து பார்த்தான்.

மறுமணம் என்ற பகுதியில், 'மறுமணத்திற்காக மணமகன் தேவை' என்கிற ஒற்றை வரியுடன் செல் நம்பர் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தால் அதன் வழியாக கிடைக்கும் ரூபாயில் கடனை அடைத்து விடலாமே! வரதட்சணையே வாங்க கூடாது என்கிற கொள்கையுடைய தன் மனதிலா இப்படி ஒரு எண்ணம். அவனது மனமே அவன் எண்ணத்தை கொஞ்சம் குத்தி காட்டியது. 'நாமாக கேட்க வேண்டாம். அவங்களா ஏதாவது தந்தால் கடனை அடைத்து விடலாமே. பணம் எதுவும் தரமுடியாத சூழ்நிலையில் உள்ள குடும்பமாக இருந்து விட்டால்... இப்போ இருக்கும் நிலையில் மனைவியும் ஒரு சுமையாக ஆகிவிடுவாள். மனம் கொஞ்ச நேரம் அலைபாய்ந்தது. இருந்தாலும் துணிந்து இறங்குவோம்.' ஆனது ஆகட்டும் என்று நினைத்தவன் அம்மாவோடும் சரி தங்கை கவிதாவோடும் சரி, இதை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்கிற நினைப்போடு விளம்பரத்தில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

ஒருவர் பேசினார். அவனது பெயரையும், ஊரையும் கேட்டவர் மறுநாள் காலை பத்து மணிக்கு இந்த விலாசத்தில் வந்து சந்தியுங்கள் என்று சொல்லி, அட்ரசை சொல்ல அவன் குறித்து கொண்டான். அம்மாவிடம் மறுநாள் காலை நண்பன் ஒருவனை பார்க்க போகிறேன் என்று சொன்ன கவுதம், குறிப்பிட்ட அந்த அட்சரசுக்கு சென்றான். அலுவலகம் போலிருந்த அந்த அறையில் விசாரிக்க அவனை அமர சொன்னவர், உள் அறைக்கு சென்று வந்தவர்.... அழைப்பதாக சொல்ல, சென்றான். நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். அவனை அமர சொல்ல அவனும் அமர்ந்தான்.

''ம்.... கவுதம் இல்லையா பெயர்? நேற்று 8 மணிக்கு போன் பண்ணியிருந்தீங்க இல்லே.... என்ன படிச்சிருக்கீங்க? எங்கே வேலை பார்க்கிறீங்க?''

''எம்.சி.ஏ., படிச்சிருக்கேன். ஒரு கம்பெனி யிலே வேலை பார்க்கிறேன்.''

பல கேள்விகளை கேட்டு பதிலும் கவுதம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

''நீங்க ஏன் மறுமணம் செய்ய விரும்புறீங்க? உங்களுக்கு இது முதல் திருமணம் தானே?''

''ஆமாங்க... இது முதல் திருமணம்தான். அப்பாவின் சிகிச்சைக்கும், தங்கை கல்யாணத்திற்கும் வாங்கின கடன், வட்டியோடு சேர்ந்து கிடக்கிறது. திருப்பி கொடுக்க முடியலே. அதற்காக.... கடமைக்காகத்தான் கல்யாணம் பண்ண போகிறேனோன்னு நினைக்க வேண்டாம். நல்லபடியானதொரு வாழ்க்கையை அவங்களுக்கு கொடுக்க என்னால முடியும். அதனாலதான் முதல் மணமானால் என்ன, மறுமணமானால் என்று நினைத்தேன்.'' கவுதம் தன் உண்மை நிலையை சொன்னான்.

''ஓ... புரியுது. பெண் என் மகள்தான். காலேஜிலே படிக்கையிலே ஒருத்தனை விரும்புனா. ஆனா நாங்க வேற இடத்திலே கட்டிக் கொடுத்தோம். அதுவும் சரியாகலே. இப்போதும் அவ திருமணத்துக்கு சம்மதிக்கலே. இருந்தும் நாங்க அவளை வற்புறுத்தித்தான் சம்மதிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை. அவள் உங்களை பார்த்து சம்மதம் சொன்னால் மட்டும்தான் திருமணம். உங்களுக்கும் அவளை பிடிக்கணும்.''

''உங்க சூழ்நிலையும் எனக்கு புரியுதுங்க. என்னை பிடிச்சிருந்து அவங்க சம்மதம் சொன்னா மட்டும்தான் இந்த திருமணம் அப்படீங்கிறீங்க.''

''புரிஞ்சுக்கிட்டீங்க... வாங்க'' என்று சொன்ன படி அவர் முன்னே நடக்க பின்தொடர்ந்தான். வெளியே நின்றிருந்த காரில் அவர் ஏற, அவனும் ஏறினான். கார் விரைந்தது. சுமார் பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் ஒரு பெரிய பங்களா முன் வந்து கார் நிற்க, அந்த வீட்டை பார்த்தவன் மனதுக்குள் வியப்பு. 'அடேயப்பா! எவ்வளவு பெரிய வீடு. அரண்மனை போல இருக்குதே' என்று நினைத்தபடியே இறங்கி அவர் பின்னாடியே நடந்தான். வீட்டினுள் சென்றதும் அங்கிருந்த அலங்கார சோபாவில் அமர சொன்னார்.

''சந்தியா... நீ போய் அவளை அழைச்சிட்டு வாயேன்.''

உள்ளே போனவள் சிறிது நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்து வர, அந்த பெண்ணை பார்த்ததும் திடுக்கிட்டான். ஆனால், அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளும் கவுதமை பார்த்து திகைக்க, இருவரும் பரஸ்பரம் ‘வணக்கம்’ சொல்லிக் கொண்டனர்.

''கவுதம்.... இவள்தான் என் மகள் மோனிஷா. உங்களை போல எம்.சி.ஏ. படிச்சுக்கிட்டுத்தான் இருந்தாள். ஆனால் கம்ப்ளீட் பண்ணவில்லை. அதற்கு முன் கல்யாணம் பண்ணி வைக்கிற சூழ்நிலை. மோனிஷா.... இவர் பெயர் கவுதம். ஒரு கம்பெனியிலே வேலை பார்க்கிறார். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். ஒரே தங்கை. திருமணம் ஆகிவிட்டது.''

சிறிது நேரம் இருவரும் எதுவுமே பேச வில்லை.

''கவுதம்... நீங்க மோனிஷாகிட்ட ஏதாவது பேச விரும்புனீங்கன்னா பேசலாம்.''

''ம்... பேச விரும்புறேன்.''

''இங்கேயே பேசணும்னாலும் பேசலாம். இல்லே வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போகிறதா இருந்தாலும் போகலாம்.''

''நாங்க வெளியே போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றோம் சார்.''

''மோனிஷா.... நீ என்னம்மா சொல்றே? போறியா?''

''சரிப்பா...''

''கவுதம்.... உங்களுக்கு கார் ஓட்ட தெரியு மில்லே?''

''தெரியும் சார்.''

கார் சாவியை அவன் கையில் கொடுக்க, அவன் டிரைவர் சீட்டில் அமர, அவளும் முன் பக்கம் அமர, கார் கிளம்பியது. பக்கத்து பார்க்கில் கொண்டு வந்து நிறுத்தி அவன் இறங்க, அவளும் அவனை பின்தொடர்ந்தாள்.

''மோனிஷா.... என்ன நடந்துச்சு? உன்னை சந்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். சிங்கப்பூர்ல கட்டி கொடுத்திட்டதா சொன்னாங்க. என் மனசு அதை கேட்டதும் நொறுங்கியே போனது. என் குடும்பத்தினருக்காக எல்லாவற்றையும் மறந்தேன். ஏன் மோனிஷா... அந்த வாழ்க்கை என்னாச்சு?''

''கவுதம்... நான் காலேஜிலே என்னோட படிக்கிற ஒரு ஏழைப்பையனை காதலிக்கிறேன்னு தெரிஞ்ச உடனேயே காலேஜுக்கு போக தடை போட்டாங்க. என்னை ஒரு ரூமிலே போட்டு அடைச்சு வச்சாங்க. போன் தரலை. யாரையும் பார்க்க அனுமதிக்கலே. கொஞ்ச நாள்ல சிங்கப்பூருக்கு அழைச்சுக்கிட்டு போயிட்டாங்க. அப்பாவோட பிரண்ட் ஒருத்தரோட மகன் பிரகாஷ்ன்னு.... அவருக்கும் எனக்கும் உடனேயே கல்யாணம்னு முடிவு பண்ணிட்டாங்க. நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். என்னால எதுவும் பண்ண முடியலே. தற்கொலை பண்ணிக்க கூட முடிவு பண்ணினேன். கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா அப்பாவும், அம்மாவும் தற்கொலை பண்ணிக்க போறேன்னு மிரட்டினாங்க. வேற வழியில்லாமல் சம்மதிச்சேன்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் எங்கப்பா கொட்டிக்கொடுக்கிறதா சொன்ன கோடிகளுக்காக சம்மதித்தார்கள். கூடிய சீக்கிரமே கல்யாணம் என்ற முடிவு செய்ய, திருமண நாளும் வந்தது. மாப்பிள்ளை பிரகாஷ் கோடீஸ்வரர் வீட்டு பையனாக இருந்ததால் அவனுக்கு எல்லா கெட்ட பழக்கங்களும்  இருந்தன. என் பெற்றோருக்கு தெரியாது. திருமணம் மாலை ஐந்து மணிக்கு. நான்கு மணிக்கே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஆரம்பித்தது. பிரகாஷ் தாலி செயினை என் கழுத்தில் அணிவிக்க, மோதிரமும் மாற்றினோம். சந்தோஷத்தில் பிரகாஷ் ஏற்கனவே குடித்திருந்தது பத்தாது என்று மேலும் மேலும் குடித்தான். குடிவெறி தலைக்கு ஏறின வேகத்தில் அசிங்கமா நடனமும் ஆடினான். பக்கத்தில் ஆடிக் கொண்டிருந்த மலாய் பெண் ஒருத்தியை அப்படியே துாக்கி கொண்டு பக்கத்து ரூமுக்குள் நுழைந்து தாளிட்டவன் அவள் கதற...... வெளியே வந்தவள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை பண்ண முயற்சிக்க, பிரகாஷின் பெற்றோரும், அந்த பெண்ணின் உறவினர்களும் தடுத்தார்கள். நான் அப்பவே என் கழுத்தில் பாரமாக கிடந்த மாங்கல்யத்தையும், மோதிரத்தையும் கழற்றி பிரகாஷ் மூஞ்சியில் விட்டெறியாத குறையாக அவன் கையில் திணித்தபடி அங்கிருந்து கிளம்பினேன். என் பெற்றோரும் இந்த கல்யாணம் நடக்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்து என்னோடு கிளம்பினார்கள். அங்கேயே ‘மாப்பிள்ளை’ வேட்டையை தொடர்ந்தனர். நான் எதற்கும் சம்மதிக்கவில்லை. இந்தியா திரும்பினோம். இங்கும் சிறிது காலமாகவே அவர்கள் கடமையை செய்கிறோம் என்று பல மாப்பிள்ளைகளை என்முன் நிறுத்தினர். அத்தனையும் என் சம்மதமில்லாததால், திருப்பி அனுப்ப வேண்டிய சூழ்நிலை. இன்று நான் விரும்பிய உங்களையே என் முன் நிறுத்தி இருக்கிறார்கள். நீங்கள் என்று தெரியாமல் வெறுப்போடுதான் வந்தேன். வந்து பார்த்தால் எனக்கு இன்ப அதிர்ச்சி.''

''உன்னை காணாமல் நானும் பல நாட்கள் பரிதவித்தேன். அதற்கு அப்புறம்தான் நீ சிங்கப்பூர் சென்றதையும் வேறு திருமணம் ஆகிவிட்டது என்பதையும் அறிந்தேன். மனமும், வாழ்க்கையும் வெறுத்துத்தான் போய்விட்டன. அதோடு அப்பாவுக்கு நோய் வந்துவிட அவரை பார்க்க வேண்டிய சூழ்நிலை. படிப்பு முடிந்து கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டேன். பின் அப்பாவின் மரணம். என் மனமே சூனியமாகி போனது. தங்கை திருமணத்திற்கு பிறகு கடன்களை அடைக்க முடியாத நிலைமை. வேறு வழி தெரியாமல்தான் மறுமணத்திற்கு சம்மதித்து வந்தேன். திருமணமே வேண்டாம் என்றிருந்த எனக்கு கடன்களை அடைக்க வேறு வழி தெரியவில்லை. என் குடும்ப சூழ்நிலை அப்படி.''

''இப்போ உங்க விருப்பம் எப்படி? என்னை கட்டிக்க சம்மதமா....?'' புன்சிரிப்போடு கேட்டாள் மோனிஷா.

''கேட்க வேண்டுமா என்ன... நான் விரும்பின வாழ்க்கை. உன்னை இழந்து விட்டதாக நினைத்து துடித்த நாட்கள்தான் எத்தனை? இப்போது உன்னை பார்த்ததும் உன் நிலைமையை தெரிந்து கொண்ட பிறகு, ‘எனக்கு நீ.... உனக்கு நான்’ என்பது அந்த கடவுளின் தீர்ப்பு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உன்னை பிரிந்த இந்த 3 வருடங்கள் நான் நானாகவே இல்லை. ஏதோ என் தாய்க்காகவே வாழ்வதாக நினைத்துத்தான் வாழ்ந்தேன். இனிமேல் உன்னை ஒரு நாளும் பிரிய மாட்டேன்.'' உணர்ச்சிப்பெருக்கோடு சொன்ன கவுதமின் கைகளை பற்றினாள் மோனிஷா.

''என்னங்க... மோனிஷா இந்த பையனையாவது கட்டிக்க சம்மதிப்பாளா?''

''ம்.... பார்ப்போம்.... என்ன முடிவோடு வர்றான்னு. இதுவரை நாமளும் எத்தனையோ மாப்பிள்ளை வரன்களை பார்த்தாச்சு. எதற்குமே அவ பிடி கொடுக்கலே. அவ சந்தோஷமா சிரிக்கிறதும் இல்லே.... கலகலப்பா பேசுறதும் இல்லே. கிட்டத்தட்ட வருஷம் மூணாச்சு. இந்த மாப்பிள்ளையையாவது அவளுக்கு பிடிக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். பையன் நல்ல படிப்பு. ஏழை வீட்டு பையன்னாலும் ராஜா மாதிரி கம்பீரம். அவளுக்கு பிடிச்சு சம்மதம் சொல்லிட்டா ஒரு வாரத்திலேயே கல்யாணத்தை பண்ணி சொத்து முழுவதும் அவங்க ரெண்டு பேருக்குமே எழுதி வச்சிடுவேன். அந்த கவுதம் கூட வெளியே போக அவ சம்மதம் சொன்ன போதே மனது கொஞ்சம் சந்தோஷப்பட்டது. அவனை அவளுக்கு பிடிக்கும்னே தோணுது.''

சொன்னபடியே இருந்தவர் முன் கவுதமும், மோனிஷாவும் சிரித்தபடியே காரில் வந்து இறங்க அப்படியே மனம் குளிர்ந்து போனார்கள் சந்திரசேகரும், சந்தியாவும்.

***