அமெரிக்க அரசின் அஞ்சல் துறை இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, தபால்களை எடுத்துச் செல்ல நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த ஆரம்பித்து வருகிறது. சமீபத்தில், தானோட்டி லாரிகள் மூலம் தபால்களை எடுத்துச் செல்ல, இரண்டு வார சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து, 1,600 கி.மீ., தொலைவில் உள்ள இன்னொரு மாகாணத்திற்கு தபால்களை, ஒரு லாரி, ஓட்டுனரில்லாமல் எடுத்துச் செல்ல இருக்கிறது. இதற்கான தானோட்டி லாரியை உருவாக்கி வரும், 'டுசிம்பிள்' இந்த சோதனையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறது.தானோட்டிகள் மூலம் தபால் வினியோகத்தால், அஞ்சல் துறைக்கு பல வகைகளில் லாபம் என்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.
தனியார் துாதஞ்சல்கள் ஏற்கனவே இந்த தானோட்டிகளைப் பயன்படுத்த போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க அஞ்சல் துறையும் புதுமை படைக்கத்
துடிப்பது, விஞ்ஞான உலகில்
பாராட்டுக்களை பெற்றுள்ளது.