சுட்டி முயல்!

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2019

உடு­மலை காட்­டில், சிட்டி, சுட்டி என்ற குட்­டி­க­ளு­டன், மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தது ஒரு முயல். குட்­டி­கள் செய்­யும் குறும்­பு­களை பொறுத்து, புத்­தி­மதி கூறி அன்­பாய் திருத்­தி­யது.

சிட்டி தான் பெரி­யது; எப்­போ­தும், பொறுப்­பு­டன் தாய் சொல்லை தட்­டா­மல் நடக்­கும்; பிரச்னை எதி­லும் மாட்­டிக் கொள்­ளாது. ஆனால், குட்டி முயல் சுட்டி, பெய­ருக்கு ஏற்ப, சுட்­டித்­த­னம் செய்­யும்; தாய் பேச்­சைக் கேட்­கா­மல், குறும்­பால் அவ்­வப்­போது மாட்­டிக் கொள்­ளும்.

தாய் முய­லுக்கு, ஆழி­யாறு காட்­டில், கிழங்கு, காய், கனி­கள் சேக­ரிக்­கும் வேலை இருந்­தது. திரும்பி வர, இரண்டு நாட்­கள் ஆகும் என்­ப­தால், உரிய முன்­னேற்­பா­டு­களை செய்­தது.

குட்­டி­களை அழைத்து, 'நான் ஊரில் இல்­லாத போது, மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும். தேவை­யான கிழங்­கு­கள் பறித்து வைத்­தி­ருக்­கி­றேன்; சாப்­பி­டுங்­கள்...

'போத­வில்லை என்­றால், அருகே, கண்­ணப்­பன் தோட்­டத்­தில், கேரட், காய்­க­றி­களை சாப்­பி­டுங்க... அங்கு கண்­கா­ணிப்­பும், காவ­லாளி எண்­ணிக்­கை­யும் குறைவு. வேறு எங்­கும் போகா­தீங்க...' என்று அறி­வுரை கூறி­யது தாய்.

அப்­போது துடுக்­கு­டன் முந்­திய சுட்டி, 'அதுக்கு அடுத்­த­தா­க­வும் ஒரு தோட்­டம் இருக்கே...' என்­றது.

சுட்­டி­யின் ஆர்­வத்தை புரிந்து கொண்ட தாய், 'ஆமாம், அடுத்து உள்­ளது வீரப்­பன் தோட்­டம். அங்கு, சுற்­றுச்­சு­வர் உண்டு. காவ­லாளி மிக­வும் கவ­ன­மாக கண்­கா­ணிப்­பார். அங்கு சென்­றால், அடித்­துக் கொன்று விடு­வர். அங்கே போகா­தீங்க...' என்று எச்­ச­ரித்து கிளம்­பி­யது.

தாய் சொன்ன அறி­வு­ரையை மன­தில் பதித்து, அதன்­ப­டியே நடந்­தது சிட்டி. தம்பி சுட்­டியோ, 'அம்­மா­விற்கு விப­ரம் போத­வில்லை' என்று எண்ணி, அறி­வு­ரையை காற்­றில் பறக்­க­விட்­டது. அதன் மனம் அலை பாய ஆரம்­பித்­தது. அன்று துாங்க போகும் முன், 'நாளை வீரப்­பன் தோட்­டத்­தில் தான் கேரட் சாப்­பிட வேண்­டும்' என, முடிவு செய்­தது.

மறு­நாள் -

காலை சூரிய கதிர்­கள், முகத்­தில் விழ, முயல் குட்­டி­கள் மகிழ்ச்­சி­யு­டன் எழுந்­தன.

பல் துலக்கி, தேனீர் தயா­ரித்து பரு­கின. பின், குளித்து முடித்து, உணவு மேஜை­யில் அமர்ந்­தன. அம்மா தயா­ரித்து வைத்­தி­ருந்த சர்க்­கரை வள்ளி கிழங்கு உணவை, வயிறு முட்ட சாப்­பிட்­டன.

பின், புல்­வெ­ளி­யில் ஓடிப்­பி­டித்து விளை­யா­டின. சிறிது நேரத்­தில் பசி எடுத்­தது.

மதிய உணவு நேரம். உடனே, முயல்­குட்­டி­கள், கண்­ணப்­பன் தோட்­டத்­திற்­குச் சென்­றன. அங்கு, கேரட்­டு­களை ருசித்து சாப்­பிட்­டது சிட்டி.

ஆனால், சுட்­டியோ ஒரு கேரட்டை சாப்­பிட்­ட­தும் முகத்தை சுழித்­தது.

'இதை எப்­ப­டித்­தான் சாப்­பி­டு­கி­றதோ சிட்டி... கொஞ்­சம் கூட இனிப்பே இல்லை; வீரப்­பன் தோட்­டத்­திற்கு போனால், இனிய கேரட்­டு­களை சாப்­பி­ட­லாம்' என்று எண்ணி, சத்­த­மின்றி கிளம்­பி­யது.

வீரப்­பன் தோட்­டத்­தில், ஆள் நட­மாட்­டம் இல்லை; சுற்­றுச்­சு­வ­ரில் இருந்த துவா­ரம் வழி­யாக, உள்ளே நுழைந்து, கேரட்­டு­களை தின்று, வீடு திரும்­பி­யது சுட்டி. அன்று இரவு நன்கு துாங்­கி­யது.

அடுத்த நாள் -

வழக்­கம் போல், காலை கடன்­களை முடித்து, காலை சிற்­றுண்­டிக்கே வீரப்­பன் தோட்­டத்­தில் நுழைந்து, வயிறு முட்ட சாப்­பிட்­டது சுட்டி. சாப்­பிட்டு முடித்த போது, ஒரு பயங்­கர தடி பறந்து வந்து, மரத்­தில் மோதி, சுட்டி அருகே விழுந்­தது; பயத்­தில் சிலிர்த்து நின்­றது சுட்டி.

கோபத்­தால் சிவந்த கண்­க­ளு­டன், எதி­ரில் வீரப்­பன் நிற்­ப­தைக் கண்­டது. மிரண்டு, கதி கலங்கி அங்­கும் இங்­கும் ஓடி­யது. அதை கொன்று விடும் முடி­வு­டன் துரத்­தி­னான் வீரப்­பன்.

வந்த வழி­யாக திரும்ப, சுற்­றுச்­சு­வர் துவா­ரத்­தில் நுழைந்­தது சுட்டி. அதன் தலை மட்­டுமே நுழைந்­தது; வயிறு பெருத்­தி­ருந்­த­தால், உடலை நுழைக்க முடி­ய­வில்லை. மீண்­டும் மீண்­டும் முயன்­ற­தால், உட­லில் காயம் ஏற்­பட்­டது.

உடனே, அந்த துவா­ரத்தை தவிர்த்து, தோட்­டத்­திற்­குள் ஓடி, தண்­ணீர் தொட்­டிக்­குள் குதித்து ஒளிந்து கொண்­டது. அங்கு, மூச்சை பிடித்து, அமர்ந்­தி­ருந்த சுட்டி, சுற்­றுப்­பு­றத்தை கூர்­மை­யாக கவ­னித்­தது.

'ஆள் நட­மாட்­டம் இல்லை' என்­பதை உறு­தி­ப­டுத்­தி­ய­தும் குதித்து ஓடி­யது; தோட்­டக் கதவு திறந்­தி­ருந்­த­தால், தப்­பி­யது. வீட்டை அடைந்­த­தும், 'அச்... அச்...' என, தும்­மல் போட்­டது. அதைக் கண்ட சிட்டி, 'எங்கே சென்­றாய்... இப்­படி நனைந்து, ஈரத்­து­டன் வந்­தி­ருக்­கி­றாயே...' என்­றது.

'குளத்­தில் நீச்­சல் பழ­கி­னேன்...' என்று சமா­ளித்த சுட்டி, துாங்க சென்­றது.

மறு நாள் காலை, வேலை­கள் முடிந்து, தாய் முயல் வீடு திரும்­பி­யது; அதன் குர­லைக் கேட்­ட­தும், சிட்டி ஓடி­வந்து கட்டி அணைத்து முத்­த­மிட்­டது.

அதன் தலையை கோதி­ய­படி, 'சுட்டி எங்கே...' என்­றது தாய்.

'இன்­னும் துாங்­கிட்டு இருக்கு...' என்­றது சிட்டி.

போர்­வையை நீக்கி, சுட்­டி­யின் நெற்­றியை தொட்­டுப் பார்த்­தது தாய்; காய்ச்­ச­லில், நடுங்­கிக்­கொண்­டி­ருந்­தது சுட்டி. உட­லில், ஆங்­காங்கே சிராய்ப்­பு­டன், ரத்த காயம் இருந்­தது. உடனே, முத­லு­தவி சிகிச்சை அளித்­தது; சிறிது நேரத்­தில், சுட்­டி­யின் காய்ச்­சல் குறைந்­தது.

தாய் முயல் கரி­ச­னத்­து­டன், சுட்­டி­யின் தலையை கோதி முத்­த­மிட்டு, 'நேற்று எங்கே போய் சாப்­பிட்­டாய்...' என்­றது.

அதற்கு பதில் சொல்ல தயங்­கிய சுட்டி, விழித்­த­படி தாயின் மடிக்­குள் சுருண்­டது.

சிணுங்­கிய சிட்டி, 'அம்மா... சுட்டி நேற்று எங்கு போன­துன்னே தெரி­யல்ல; திரும்பி வரும் போது, உட­லெல்­லாம் ஈரம் சொட்­டி­யது...' என்று மூச்சு விடா­மல் கூறி­யது.

தாய் முய­லின் அர­வ­ணைப்­பில் கிடந்த சுட்டி, நடந்த சம்­ப­வத்தை கூறி­யது. அதை கேட்டு நடுங்­கிய தாய் முயல், 'இது­போல் இனி செய்ய கூடாது; எப்­போ­தும் அறி­வு­ரையை கேட்டு நடக்­க­ணும். இல்லா விட்­டால் ஆபத்­தில் மாட்­டிக்க வேண்­டி­யது தான்...' என்­றது.

அன்று முதல், தாய் சொல்லை தட்­டா­மல், வாழ்ந்­தது சுட்டி முயல்.

குட்­டீஸ்... நீங்­க­ளும் அப்­ப­டியே வாழ பழ­குங்க!

– ஆர்.கார்த்­தி­கே­யன்