எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்!

பதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2019

சமையல் நெருப்பு!

சமையல் அறையில், மின் உபகரணங்கள், கத்தி, அரிவாள், அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவை, தினமும் பயன்படுபவை; மிகவும் எச்சரிக்கையுடன் கையாளத்தக்கவை.

குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துக்கள், பெரும்பாலும் சமையலறையில் உருவாவதாக வல்லுனர் குழு எச்சரித்துள்ளது. கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பில் போதிய அக்கறையின்மையால், விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சமையலறையில் பாதுகாப்பு விதிகள்:

* எரிவாயு சிலிண்டரை, காற்றோட்டமான, தரைமட்ட பகுதியில், நிமிர்ந்த நிலையிலேயே வைக்க வேண்டும்

* சிலிண்டர் மட்டத்தை விட, சற்று உயரமான இடத்தில், அடுப்பு இருக்க வேண்டும்

* எரிவாயு இணைப்பு ரப்பர் குழாயில், விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை, அடிக்கடி கவனிப்பது அவசியம். பயன்படுத்தாத நேரத்தில், சிலிண்டர், 'நாப்' மூடிய நிலையில் இருக்க வேண்டும்

* குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சாதனங்களை, சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, எரிவாயு கசிவு போன்றவை ஏற்பட்டால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்

* காற்றை விட, எரிவாயு கனமானது; கசிவு ஏற்படும் போது, தரைமட்டத்தில் பரவி நிற்கும்; எரிவாயு கசிவு கவனத்துக்கு வந்தால், ஜன்னல், கதவுகளை நன்றாக திறந்து, காற்றேட்டத்தை ஏற்படுத்தவும். அப்போது, எரிவாயு வெளியேறும்

* எரிவாயு கசிவு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை, சமையலறையில் பொருத்துவது பாதுகாப்பானது

* கத்தி, அரிவாள் போன்ற கருவிகளால், குழந்தைகள் காயம்பட வாய்ப்பு உண்டு. எனவே, சமையலறைக்குள் குழந்தைகளை அனுமதிக்கும் போது கவனமாக இருக்கவும். கூர்மையான கருவிகளை, எட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும்

* தளர்வான ஆடைகள் சமைய லறையில் அணிய கூடாது. 'சிந்தெக்டிக்' வகை ஆடைகளும் உகந்தது அல்ல. எதிர்பாராமல், தீ விபத்து ஏற்பட்டால், உடலுடன் ஒட்டிக் கொள்ளும். சீரான பருத்தி ஆடைகள் அணியவும்

* மின் இணைப்புகளை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சரி பார்க்கவும்

* தீ அணைக்கும் நவீன கருவி ஒன்றை பொருத்துவது பாதுகாப்பனது

* உடைந்த மின் சுவிட்சுகளை, உடனடியாக சரி செய்யவும்.

பச்சை மிளகாய்!

பச்சை மிளகாயில், ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக, ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. உணவில், கார மசாலா பொடி சேர்ப்பதற்குப் பதிலாக, பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

மிளகாய், வற்றலாக மாறினால், மருத்துவக் குணங்கள் காணாமல் போய் விடுகிறதாம். அதனால், பச்சை மிளகாயே உடலுக்கு உகந்தது.

'ஆன்டி ஆக்சிடன்ட்' என்ற சத்து நிறைந்துள்ளதால், உடலை பாதுகாக்கிறது; நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது; இளமையை நீடிக்க வைக்கிறது.

மிளகாயை பயன்படுத்தும் போது, மூக்கடைப்பு சரியாவதை உணரலாம். 'வைட்டமின் - ஈ' சத்தும் அதிகம் உள்ளதால், சருமத்தை பாதுகாக்கும்.

அனைத்து நன்மைகளும், கலோரி இன்றி கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்தத்தில், சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கிறது பச்சை மிளகாய். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உணவு செரிமானத்தை வேகப்படுத்துகிறது.

காரசாரமான உணவு சாப்பிட்டதும், உற்சாகத்தை உணர்ந்தால், அது தற்செயல் அல்ல; பின்னணியில் பச்சை மிளகாய் இருக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவருக்கும், பச்சை மிளகாய் நல்ல நிவாரணி.

அதே நேரம், பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போகும்.

உணவில் கையில் சிக்கும் பச்சை மிளகாய் துண்டுகளை, கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல், அவ்வப்போது சாப்பிட்டாலே போதும்.