அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2019 12:06

சென்னை,

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும் அவர்களின் உடமைகளைக் காக்கவும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  வனத்துறை அமைச்சர்   திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்   கே.ஏ.செங்கோட்டையன்,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்   பி .தங்கமணி,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,   மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,  உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன், உள்ளிட்ட அமைச்சர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  பி. பொன்னையா  மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் - 2019 ன் சிறப்பு நிகழ்வாக, அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலின் சிறப்பு, வரலாறு, கட்டடக் கலை, திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள், அத்தி வரதரின் சிறப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்ட "அத்திகிரி" என்ற நூல் வெளியிடப்பட்டது.

"அத்திகிரி" புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் எஸ். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் திரு. தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்

முதலமைச்சர் உத்தரவுகள்

அத்திவரதரை தரிசிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் கீழ்க்காணும் உத்தரவுகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று பிறப்பித்தார்:

காஞ்சிபுரத்திற்கு அதிகமான வாகனங்களும், மக்கள் கூட்டமும் வருவதால், கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அமர்ந்து செல்ல கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த,  கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்ப வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க, கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.

பக்தர்களுக்கு குடிநீர், உணவு போன்றவைகளை சுகாதாரத்தோடு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

காஞ்சிபுரம் நகராட்சி இவ்விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததை கருத்தில் கொண்டு அந்நகராட்சிக்கு ஏற்பட்ட செலவினத்தை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்திற்கு தொடர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கும் வகையில் 13.8.2019, 14.8.2019 மற்றும் 16.8.2019 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே 7500 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் மேலும் 5000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முதலமைச்சரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.