“நான் எவ்வளவுதான் சினிமாவிலே நடிச்சிருந்தாலும், டிவி சீரியல்தான் எனக்கு கைகொடுத்துச்சு!” என பூரிப்புடன் சொல்கிறார் கவிதா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக நான் – ஸ்டாப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
‘நிலா,’ ‘வள்ளி’ ஆகிய சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவரை சந்தித்த போது...
“குழந்தை நட்சத்திரமா சினிமாவிலே 7 வயசிலே இருந்து நடிச்சுக்கிட்டு இருக்கேன். ‘அஞ்சலி, ‘தம்பிக்கு ஒரு பாட்டு,’ ‘மாண்புமிகு மாணவன்’ (விஜய் தங்கையாக), ‘மனைவி வந்த நேரம்’ இப்படி பல படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு சின்ன கேப்புக்கு பிறகு, ஏவி.எம். புரொடக்க்ஷன்ஸ் தயாரிச்சு எஸ். பி. முத்துராமன் டைரக்ட் செஞ்ச ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ல ரீ – எண்ட்ரி ஆனேன். அதிலிருந்து ஏவி. எம். புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பிலே உருவான ‘ஒரு பெண்ணின் கதை,’ ‘அம்பிகை,’ ‘சக்தி,’ ‘பயணம்’ உட்பட பல சீரியல்கள்ல நடிச்சேன். தெலுங்கு சீரியல்கள்லயும் கொஞ்சம் நடிச்சிருக்கேன்.
எப்பவும் குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான் என்னை தேடி வந்துக்கிட்டிருக்கு. நானே நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்கணும்னு நினைச்சாலும், உங்க மூஞ்சிக்கு அது பொருத்தமா இருக்காதுன்னு சொல்லிடுவாங்க. ஆனா, அதையும் மீறி ‘அவளும் நானும்,’ ‘வேலுநாச்சி’ இந்த சீரியல்கள்ல நெகட்டிவ் ரோல்கள்ல நடிச்சேன். என்னை நெகட்டிவ் ரோல்ல பார்த்துட்டு நிறைய பேரு அதிர்ச்சி ஆகியிருக்காங்க. ஏன் நெகட்டிவ் ரோலை அக்செப்ட் பண்ணீங்கன்னு உரிமையா கோபிச்சுக்கிட்டாங்க. அந்த மாதிரியான ரோல்ல நடிக்கும் போது மட்டும் ரொம்ப உற்சாகமா ஷூட்டிங்குக்கு போவேன். ஏன் சொல்லுங்க? அப்போதான் சூப்பரா டிரஸ் பண்ணிக்கலாம், வகைவகையா நகைகள் போட்டுக்கலாம். கிடைச்சிச்சுடா சான்சுன்னு நான் பெர்சனலா ஆசைப்பட்டு வாங்கிய நகை, புடவையையெல்லாம் போட்டுக்குவேன். ஆனா, குடும்பப்பாங்கான கேரக்டர்கள்ல நடிக்கும் போது மேக் – அப், டிரஸ் எல்லாத்தையும் சிம்ப்பிளாதான் போட முடியும்.
இதுவரை நான் நடிச்ச சீரியல் கேரக்டர்கள்ல... ‘சக்தி’யிலே ‘மேகா’ கேரக்டர், ‘அம்பிகை’யிலே ‘வண்ணமதி’ கேரக்டர் (தைரியமான பெண்), ‘வேலுநாச்சி,’ ‘அவளும் நானும்’ இதெல்லாம் பிடிக்கும். ‘வேலுநாச்சி’யிலே எனக்கு ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அதுக்காக சிலம்பமெல்லாம் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டேன். இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கிற ‘நிலா,’ ‘வள்ளி’யையும் ரொம்ப பிடிக்கும்.
இப்பவும் எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா, எனக்கு ‘சீரியல்’ வாழ்க்கை சூப்பரா ‘செட்’ ஆயிடுச்சு. எனக்கு இந்த பீல்டுல நல்ல பேர் இருக்கு. சினிமாவிலே, நாம வர்ற காட்சிகள் ரொம்ப குறைவா இருக்கும். ‘துணை நடிகை’ மாதிரியான பேருதான் இடைக்கும். அதனால, அதிலே நடிக்கிறதுக்கு எனக்கு இஷ்டமில்லே. நல்ல முக்கியமான கேரக்டர்ன்னா நடிக்கலாம்.”