தமிழ்நாடு முழுதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள் : 03 ஆகஸ்ட் 2019 11:10

திருவாரூர்

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப் பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடிப் பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

புதுமண தம்பதிகள் மண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பெண்கள் புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டியும், ஆண்கள் கையில் மஞ்சள் கயிற்றை கட்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு, நாவல்பழம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, பச்சரிசி, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை  காவிரித் தாய்க்கு படைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். 

ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையால் விவசாயிகள், மக்கள் காவிரி அன்னையை வழிபட்டு தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர்.

ஆடி பட்டம் தேடி விதைத்து,

புதுப்புனல் பொங்கி வழிய,

தொட்டதெல்லாம் துலங்க,

தொழில்கள் பல்கி பெருக,

மாங்கல்யம் நீடிக்க

நீர் நிலைகளை போற்றுவோம்.

தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்தோடு வழியில் உள்ள ஓகேனேக்கல், சேலம், பவானி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியிலும் மற்றப் பகுதிகளில் இன்று ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து பெண்கள் வழிபடுகின்றனர்.

ஒகேனக்கல்

ஆடிப் பெருக்கை முன்னிட்டு மக்கள் ஒகேனக்கல் காவிரியாற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

புதுமணத் தம்பதியர் அருவிகளில் குளித்து, காவிரியம்மனை வழிப்பட்டனர். வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 11-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களிலும், பிரதான அருவி, சினி அருவிப் பகுதிகளில் மட்டுமே மக்கள் குளித்தனர். பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். .

திருச்சி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் காவிரியாற்றின் பல்வேறு படித்துறைகளில் ஏராளமான மக்கள் திரண்டனர் முக்கொம்பு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளதால் ஆற்றில் நடுவில் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. சத்திரம் பேருந்து முதல் ஒவ்வொரு படித்துறையிலுமாக மொத்தம் 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு வரை பொதுமக்கள் வருவார்கள் என்பதால் காவிரியில் ஆற்றிற்குள் 60 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் 

ஆடிப்பெருக்கின் போது தஞ்சையில் வழக்கமாக காவிரி கரை புரண்டு ஓடும் நிலையில், மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் இந்த முறை தஞ்சாவூர் கிளை ஆறு வந்தடையவில்லை. கிளை ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஆடிப் பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் மக்கள் காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு, வளையல், பச்சரிசி உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு மூத்த பெண்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். புதுமணமக்கள் திருமண மாலைகளை வழக்கமாக ஆற்று நீரில் விடும்நிலையில் இந்த முறை ஆற்று மணலில் போட்டுவிட்டுச் செல்லும் நிலை நிலவியது.

திருவாரூர்

திருவாரூர் கமலாலயக் குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமணத் தம்பதிகள், சுமங்கலிப் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.

மயிலாடுதுறை

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் துலாக்கட்டக் காவிரியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் மூலம் நீர் நிரப்பப்பட்டு ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

காவிரியை கன்னிப் பெண்ணாக கருதி கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகள் உள்ளிட்டவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சென்னை - மயிலாப்பூர்

காவிரி கரையோரத்தில் ஆடிப் பெருக்காக நடைபெற்று வரும் விழா சென்னையில் ஆடிப் பூரமாக கொண்டாடப்பட்டது. 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்