கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 190

பதிவு செய்த நாள் : 29 ஜூலை 2019

கண்ணதாசன் போட்ட எதிர்நீச்சல் !

‘பரா­சக்­தி’க்கு வச­னம் எழுத நேஷ­னல் பிக்­சர்ஸ் பெரு­மாள் முத­லி­யார் மு. கரு­ணா­நி­தியை அழைத்­தி­ருந்த நேரம். தன் நண்­பர் கரு­ணா­நி­தி­யு­டன் சென்னை பர்­கிட் சாலை­யில் இருந்த நேஷ­னல் பிக்­சர்ஸ் அலு­வ­ல­கத்­திற்­குக் கண்­ண­தா­சன் சென்­றி­ருந்­தார்.    ‘பரா­சக்­தி’க்­குக் கண்­ண­தா­சன்­தான் பாடல்­கள் எழு­த­வேண்­டும் என்று பெரு­மாள் முத­லி­யா­ரி­டம் கூறி­னார் கரு­ணா­நிதி.

ஆனால் ‘பரா­சக்­தி’­­­யில் ஒரு பாட்டு எழு­தும் வாய்ப்­பு­கூட கண்­ண­தா­ச­னுக்­குக் கிட்­ட­வில்லை. அங்­கியை மாட்­டி­விட்டு, நீதி­மன்­றக் காட்­சி­யில் ஒரு நாள் நீதி­பதி ஆக்கி விட்­டார்­கள்! ஏனென்­றால், அது உடு­மலை நாரா­யண கவி கோலோச்­சிய காலம். கண்­ண­தா­சன் ஏற்­க­னவே பாடல்­கள் எழு­தி­யி­ருந்­தும் பாட­லா­சி­ரி­ய­ரா­கக் கரு­தப்­ப­டாத காலம்.

 என்.எஸ்.கிருஷ்­ணன் ‘பணம்’ எடுக்­கத் தொடங்­கி­ய­போது, அவ­ரி­டம் கரு­ணா­நிதி, கண்­ண­தா­ச­னுக்­கா­கச் செய்த சிபா­ரிசு பலித்­தது. ‘பணத்­தில் கண்­ண­தா­ச­னின் பத்­துப் பாடல்­கள் இடம்­பெற்­றன.  

‘ஏழை­நின் கோயிலை நாடி­னேன் எழில் மின்­னும் சிலை வண்­ணத்­தே­வியே’ என்று கண்­ண­தா­சன் எழு­தி­னார்.

‘குடும்­பத்­தின் விளக்கு, நல்ல குடும்­பத்­தின் விளக்கு’ என்ற பாட­லில் ஒரு நல்ல மனை­வி­யின் குணங்­களை அடுக்­கி­னார்.

‘என் வாழ்­வில் புதுப்­பா­டமா’ என்ற பாட­லில், ‘மண­மேடை பலி­பீ­டமா, சூடும் மலர் மாலை விஷ­நா­கமா’ என்று தாளம் தப்­பாத சந்­தத்­து­டன் நல்ல கருத்தை முன்­வைத்­தார்.

‘மன­மு­டை­யோரே மனி­தர்­கள் என்­னும் வாய்­மொழி வள்­ளு­வன் சொல்­லா­கும்’ என்று வள்­ளு­வ­ரின் வாய்­மொ­ழியை அவ்­வை­யைப்­போல் இரண்டே வார்த்­தை­க­ளில் எடுத்து வைத்­தார் (மன­மு­டை­ய­வன்­தான் மனி­தன்).

‘தீனா மூனா கானா’ என்ற பாட­லில், ‘திருக்­கு­றள் முன்­னேற்ற கழ­கம்’ என்று போக்­குக்­காட்டி, தி.மு.க.விற்கு விளம்­ப­ரம் தேடித்­தந்­தார்.

இந்த பாடல்­கள் எல்­லாம் விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­தி­யின் முதல் பட­மான பணத்­தில் இடம்­பெற்­றா­லும், படத்­திற்­குப் பண­வ­சூ­லும் பெரு­க­வில்லை, இந்த படத்­திற்­குப் பிறகு  என்.எஸ். கிருஷ்­ணன் இன்­னொரு படத்­தை­யும் தயா­ரிக்­க­வில்லை! ‘பணம்’ செல்­லு­படி ஆகா­த­தால்,  கண்­ண­தா­ச­னுக்­குப் பாட்­டெ­ழு­தும் வாய்ப்­பு­க­ளும் பெரு­க­வில்லை.

கண்­ண­தா­ச­னுக்­குப் ‘பணம்’ படத்­தில் நல்ல வாய்ப்பு அமைந்­தா­லும், அவர் நிறைய பாடல்­கள் எழு­தி­னா­லும்,   அவர் எழு­திய பாடல்­கள் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை.

பாடல்­கள் எழு­தும்­போது ஏற்­பட்ட சில கசப்­பான அனு­ப­வங்­கள், கண்­ண­தா­சனை வாட்­டின.  கோவை சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­வில் ஜூபி­டர் பிக்­சர்ஸ் ‘ராணி’ தயா­ரித்து வந்த சம­யம். பானு­மதி பாடு­வ­தாக இருந்த பாட்­டிற்கு இசை­ய­மைப்­பா­ளர் சி.ஆர். சுப்­ப­ரா­மன் மெட்­ட­மைத்­தி­ருந்­தார். அதற்­கான தத்­த­கா­ரத்­தைக் கண்­ண­தா­ச­னி­டம் எழு­திக் கொடுத்­தி­ருந்­தார்­கள்.

‘பிர­சவ வேதனை’, ‘சித்­ர­வதை’ என்­றெல்­லாம்  அவஸ்­தைப்­பட்டு எழு­தி­னார் கண்­ண­தா­சன். பாடல் வரி­களை மெட்­டுக்­க­ளின் தத்­த­கா­ரத்­திற்­குள் அடக்­கு­வது சில சம­யங்­க­ளில் சுல­ப­மில்லை. மெட்­டில் இசை­யின் ஆர்ப்­பாட்­டம்  மேலோங்­கி­யி­ருந்­தால், இடை­யில் மாட்­டிக்­கொள்­ளும் சொற்­கள் திக்­கு­முக்­கா­டும். எப்­ப­டியோ துண்டு துண்­டாக அமைந்த வார்த்­தை­களை ஒட்­டிக்­கொ­டுத்­தார் கண்­ண­தா­சன்.

ஒத்­திகை பார்க்க பானு­மதி வந்­த­போது, அவர் பாடல் பிர­தியை வாங்­கிப்­பார்த்­தார். சிரித்­துக்­கொண்டே, ‘இது என்ன பாஷை?’ என்று கேட்­டார்.

பானு­மதி ஒரு நட்­சத்­தி­ரம். பிர­பல நட்­சத்­தி­ரம்.  பல துறை­க­ளில் திறமை உள்ள புத்­தி­சாலி வேறு. ஆகவே, ‘பாடல் நன்­றாக இல்லை’ என்று சொல்லி விட்­டுத் தன்­பாட்­டுக்­குப் அவர் சென்­று­விட்­ட­போது, கண்­ண­தா­ச­னுக்கு அவ­மா­ன­மாக இருந்­தது. எல்­லோர் முன்­னா­லும் தலை­கு­னிவு. மீண்­டும் எழு­தி­னார் கண்­ண­தா­சன். அதே கதி­தான். அதா­வது அதோ கதி­தான். கண்­ண­தா­ச­னின் ஆரம்ப காலத்­தில் இப்­ப­டி­யெல்­லாம் நடந்­தது. இசை­ய­மைப்­பா­ளர் சுப்­ப­ரா­மன் ஒரு ஜீனி­யஸ் என்­பது பானு­ம­தியே ஒப்­புக்­கொண்ட விஷ­யம். அவர் போட்ட மெட்­டுக்­குக் கண்­ண­தா­ச­னால் சரி­யாக எழுத முடி­ய­வில்லை என்­றால், எழு­தி­ய­வ­ரின் திறமை குறைவு என்­று­தானே எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும்?

சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­வில் ஜூபி­டர் நிறு­வ­னத்­தின் குத்­த­கைக் காலம் முடிந்­த­தும், அது சென்னை மயி­லாப்­பூ­ரில் நாகேஸ்­வ­ர­ராவ் பூங்­கா­விற்கு எதி­ரில் இருந்த மங்­கள விலாஸ் என்ற பங்­க­ளா­விற்கு மாறி­யது.  

அங்கே ஒரு நாள் இசை­ய­மைப்­பா­ளர் சி.ஆர்.சுப்­ப­ரா­மன் கூறி­னார், ‘‘உடு­மலை நாரா­யண கவி­யைப் போல் பாடல் எழுத இன்­னொ­ரு­வர் பிறக்­கப்­போ­வ­தில்லை’’.

கண்­ண­தா­சன் இதற்­குப் பதில் கூறும் வகை­யில், ‘‘அவ­ரைப் போல் நான் ஆயி­ரம் கவி­ஞர்­களை உரு­வாக்­கு­வேன்’’ என்­றார்!

கண்­ண­தா­சன் இப்­ப­டிப் பேசி­ய­தைக் கேட்டு, அங்கே இருந்த விஸ்­வ­நா­தன், ராம­மூர்த்தி, பாட­லா­சி­ரி­யர் கே.டி.சந்­த­னம் ஆகி­யோர் சுப்­ப­ரா­ம­னு­டன் சேர்ந்து சிரித்­தார்­கள்.  இதைக் கண்­ண­தா­சன் ‘என் சுய­ச­ரி­தம்’ என்ற தன்­னு­டைய நூலில் குறித்­தி­ருக்­கி­றார்.

இந்த வகை­யில் கண்­ண­தா­சன் பேசி­னா­லும், அவ­ரால் பாட்­டெ­ழு­தும் துறை­யில் முன்­னேற முடி­ய­வில்லை. உதி­ரிப் பாட­லா­சி­ரி­ய­ரா­கத்­தான் இருந்­தார். ஆனால், தான் செய்த சப­தத்­தைத் தன்­ன­ள­வி­லே­னும் நிரூ­பித்­துக்­காட்­ட­வேண்­டும் என்ற உந்­து­தல் அவ­ரு­டைய உள்­ளத்­தில் இருந்­து­கொண்டே இருந்­தது.

‘தீனா, மூனா, கானா’  என்று கட்­சிப் பிரச்­சா­ரம் செய்­த­வர், கல்­லக்­கு­டிக்கு ‘டால்­மி­யா­பு­ரம்’ என்று பெயர் சூட்­டப்­பட்­டதை எதிர்த்து, தி.மு.க. கட்­சி­யி­னர் செய்த மறி­ய­லில் ஈடு­பட்­டார். கைது, வழக்கு, வாய்தா என்ற சூழ்­நி­லை­யில் ‘இல்­லற ஜோதி’யை மாடர்ன் தியேட்­டர்­சுக்­காக எழு­தி­னார். இந்த படத்­திற்கு,

 ‘கேட்­ப­தெல்­லாம் காதல் கீதங்­களே,

காண்­ப­தெல்­லாம் வாழ்­வின் வேதங்­களே’ என்ற சவா­லான பாடலை எழு­தும் போது, இசை­ய­மைப்­பா­ளர் ஜி. ராம­நா­தன் மிகுந்த கனி­வு­ட­னும் அன்­பு­ட­னும் தன்­னி­டம் வேலை வாங்­கி­னார் என்­ப­தைக் கண்­ண­தா­சன் குறித்­தி­ருக்­கி­றார்.

‘மனோ­கரா’ (மு.கரு­ணா­நிதி), ‘மலைக்­கள்­ளன்’ (மு.கரு­ணா­நிதி), ‘சொர்க்­க­வா­சல்’ (சி.என்.அண்­ணா­துரை)  என்று கட்­சிக்­கா­ரர்­கள் எழு­திய படங்­க­ளுக்கு இடையே, கண்­ண­தா­ச­னும் வச­ன­கர்த்­தா­வாக சில வாய்ப்­பு­கள் பெற்று வந்­தார்.

கண்­ண­தா­சன் கதை, வச­னம் எழு­திய ‘சுகம் எங்­கே’­­­விற்கு விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்தி இசை­ய­மைத்­தார்­கள். ‘சுகம் எங்கே சுகம் எங்கே’, ‘கண்­ணில் தோன்­றும் காட்சி யாவும்’ ஆகிய வெற்­றிப் பாடல்­க­ளைக் கண்­ண­தா­சன் எழு­தி­னார். ‘கங்கை நதி தீரத்­திலே விளை­யா­டு­வோம்’ என்று அவர் எழு­திய பாடல் வெற்றி பெற­வில்லை. ‘ராசி பலன் ராசி பலன்’ என்று ஜோதி­டப் பித்­தைச் சாடி ஒரு பாடல் எழு­தி­னார்.

விஸ்­வ­நா­த­னு­டன் கண்­ண­தா­ச­னின் நட்பு வளர்ந்து கொண்­டி­ருந்­தது. தனக்­குத் தெரிந்த தயா­ரிப்­பா­ளர்­க­ளி­டம் ‘விஸ்­வ­நா­தன், ராம­மூர்த்­தி­யைப் போடுங்­கள்’ என்று சிபா­ரிசு செய்­து­கொண்­டி­ருந்­தார் கண்­ண­தா­சன்! இந்த வகை­யி­லே­னும் திரைப்­பா­டல்­கள் மீது கண்­ண­தா­ச­னுக்கு இருந்த நாட்­டம் இந்த கால­கட்­டத்­தில் தொடர்ந்­தது. மற்­ற­படி, அவரே கதை, வச­னம் எழு­திய ‘நானே ராஜா’ படம்­கூட, கண்­ண­தா­சனை பாட­லா­சி­ரி­ய­ராக அங்­கீ­க­ரிக்­க­வில்லை !

கேமரா கலை­ஞர் பி.எஸ்.ரங்கா, திரைக்­கதை எழுதி ‘தெனா­லி­ரா­மன்’ படத்­தைத் தயா­ரித்து இயக்­கி­னார். சிவாஜி நடித்த படத்­திற்கு, கண்­ண­தா­சன் வச­னம், பாடல்­கள் எழு­தி­னார் (இரண்டு பாடல்­கள் ஆத்­ம­நா­தன்). இரட்­டை­யர் இசை­ய­மைத்த ‘தெனா­லி­ரா­ம’­­­னில், ‘சிட்­டுப்­போலே, முல்லை மொட்­டுப்­போலே’ (குரல் :-- ஏ.பி.கோமளா) , ‘தங்­கம் பொங்­கும் மேனி’ (ஆர். பால­ச­ரஸ்­வதி), ‘பிறந்த நாள் மன்­னன் பிறந்த நாள்’ (பானு­மதி), ‘விண்­ணு­ல­கில் மின்­னி­வ­ரும் தார­கையே போ’ (பானு­மதி) ஆகிய பாடல்­கள் உட்­பட, சுமார் ஒன்­பது பாடல்­கள் எழு­தி­னார் கண்­ண­தா­சன்.  கண்­ண­தா­சன் எழு­திய பாடலை பானு­ம­தி­யும் எந்த நொட்­டாங்­கும் சொல்­லா­மல் பாடி­விட்­டுப்­போ­னார்.

திருப்­பதி தரி­ச­னம் செய்­து­விட்டு வந்­த­தால், தி.மு.க.வின­ரின் எதிர்ப்­புக்கு சிவாஜி கணே­சன் ஆளா­கி­யி­ருந்த கால­கட்­டம். ‘தெனா­லி­ரா­மன்’ ஸ்டில் ஒன்­றைப் போட்டு, சிவாஜி படு­கு­ழிக்­குப் போகப்­போ­வ­தாக தன் பத்­தி­ரி­கை­யில் எழு­தி­னார் கண்­ண­தா­சன். வாஹிணி ஸ்டூடி­யோ­வில் சிவா­ஜிக்­கும் கண்­ண­தா­ச­னுக்­கு­மி­டையே லடாய்...கைக­லப்பு நடக்­கா­மல் நண்­பர்­கள் தடுத்­தார்­கள் (எனது சுய­ச­ரி­தம்).

இத்­த­கைய கால­கட்­டத்­தில், ‘மதுரை வீரன்’, ‘நாடோடி மன்­னன்’ முத­லிய எம்.ஜி.ஆர்., படங்­க­ளின் மிகப்­பெ­ரிய வெற்றி, அவற்­றுக்­குக் கதை, வச­னம் எழு­திய கண்­ண­தா­ச­னின் செல்­வாக்­கைக் கூட்­டி­யது.

இடை­யில், திரை உலக ஜாம்­ப­வா­னான சுந்­த­ர­ராவ் நட்­கர்னி, எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த ‘மகா­தே­வி’க்­குத் திரைக்­கதை, வச­ன­மும் ஐந்து பாடல்­க­ளும் எழு­தி­னார் கண்­ண­தா­சன். விஸ்­வ­நா­தன், ராம­மூர்த்­தி­தான் இசை. ‘காமு­கர் நெஞ்­சில் நீதி­யில்லை’ என்ற பாடலை ஜமு­னா­ரா­ணி­தான் பாட­வேண்­டும் என்று விஸ்­வ­நா­தனை கண்­ண­தா­ச­னால் நிர்­பந்­தப்­ப­டுத்த முடிந்­தது.

சிவா­ஜி­யும் பானு­ம­தி­யும் ஜோடி­யாக நடித்த  ‘அம்­பி­கா­ப­தி’­­­யின் தயா­ரிப்­பா­ளர், கண்­ண­தா­ச­னின் அண்­ணன் ஏ.எல். சீனி­வா­சன். அண்­ணன் தயா­ரித்த இசைக்­கா­வி­ய­மான திரைப்­ப­டத்­தில், தம்­பிக்கு ஒரே ஒரு பாட்டு தான் அமைந்­தது (‘கண்­ணிலே இருப்­ப­தென்ன கன்­னி­யி­ள­மானே’). கண்­ண­தா­ச­னைத் தவிர, ஏழு கவி­ஞர்­கள் ‘அம்­பி­கா­ப­தி’­­­யின் பாடல்­களை எழு­தி­னார்­கள்.

தன்னை அடை­யா­ளம் காட்ட, தனது எல்லா சக்­தி­க­ளை­யும் ஒன்று திரட்டி ‘நாடோடி மன்­னன்’ எடுத்த எம்.ஜி.ஆரைப்­போல், கண்­ண­தா­சன் பிலிம்ஸ் என்ற நிறு­வ­னத்தை (அண்­ணன் சீனி­வா­ச­னின் உத­வி­யு­டன்) தொடங்கி, சுதந்­தி­ர­மா­கப் பாடல் எழு­தத் தொடங்­கி­னார் கண்­ண­தா­சன்.  இசை, விஸ்­வ­நா­தன்,- ராம­மூர்த்தி.

திரா­விட இயக்­கத்­த­வ­ரான கண்­ண­தா­சன், பணக்­கஷ்­டத்­தில் படத்­து­றை­யி­லி­ருந்து வில­கி­விட்ட  பிரா­ம­ண­ரான டி.ஆர்.மகா­லிங்­கத்தை ஒப்­பந்­தம் செய்து, ‘மாலை­யிட்ட மங்கை’ எடுத்­தார். ‘எங்­கள் திரா­வி­டப் பொன்­னாடே’ என்ற அவ­ரைப் பாட­வைத்­தார்!

எந்த இடத்­தில் பாட்­டுப் போடு­வது என்­ப­தை­யும் அவரே தீர்­மா­னித்து, இத­மா­கப் பாடல்­கள் எழு­தி­னார் கண்­ண­தா­சன். திடீ­ரென்று புதிய பாடல்­க­ளுக்­கான  வரி­கள் தோன்­றும்...விஸ்வ­ நாதனை அழைப்­பார். வரி­க­ளும் இசை­யும் நிறைவு பெறும். பாட­லா­சி­ரி­ய­ருக்­கும் இசை­ய­மைப்­பா­ள­ருக்­கும் இருந்த இணக்­கத்­தால், ‘செந்­த­மிழ் தேன்­மொ­ழி­யாள்’ என்ற இர­வல் மெட்­டுப் பாட­லில் கூட, ஒரு இசைவு வந்­து­விட்­டது! இந்தி பாட­லில் இல்­லாத சுகங்­க­ளும் இதங்­க­ளும் தமிழ்ப் பிர­தி­யில் அமோ­க­மாக கூடி­கொண்­டன.

அடுத்­த­ப­டி­யாக, ஆயி­ரம் கற்­ப­னை­க­ளு­டன் கண்­ண­தா­சன் ‘சிவ­கங்­கைச் சீமை’க்­குள் புகுந்­தார்.  கட்­ட­பொம்­ம­னுக்­குப் போட்­டி­யாக வெளி­யி­டப்­பட்ட ‘சிவ­கங்­கைச் சீமை’ தோல்வி அடைந்­தது. ஆனால் குறை­களை மீறி அதன் கலை­யம்­சங்­கள் மிளிர்ந்­தன.

வீரன் முத்­த­ழ­காக நடித்த எஸ்.எஸ். ராஜேந்­தி­ரன் தன் காதலி சிட்டு என்­ப­வ­ளு­டன் (குமாரி கமலா) குலா­விக் கொண்­டி­ருக்­கி­றான்.

முத்­த­ழகு -- அடடா! திரு­ம­ணம் என்­ப­தும் குனி­கி­றதே தலை!

சிட்டு -- வெட்­கம்­தானே காத­லுக்கு விலை!

முத்­த­ழகு    : -- இர­வெல்­லாம் எனக்­குப் பக­லாகி

        விட்­டது.

சிட்டு     : வேலை அதி­கம்!

முத்­த­ழகு     :-- இல்லை...காதல் துய­ரம்.

சிட்டு --    : உம்...தூங்கி எத்­தனை நாளா­யிற்று?

முத்­த­ழகு    :-  நேற்­று­தான் தூங்­கி­னேன்.

சிட்டு --    : ஓஹோ...அந்­தத் தூக்­கத்­தில் கூட

முத்­த­ழகு சிட்­டு­டன் பாடு­கி­றான் -- ‘கனவு கண்­டேன் நான் கனவு கண்­டேன்’.

மோக­ன­மான ஒரு சூழ்­நி­லை­யில், முகா­ரி­யில் இரட்­டை­யர் அமைத்த மெட்­டில், டி.எம்.எஸ்­சும் டி.எஸ்.பக­வ­தி­யும் நிறை­வான பாட­லைப் பாடி­னார்­கள். ஐம்­ப­து­க­ளின் சூழ­லில் கண்­ண­தா­ச­னின் பாடல் நிறை­வாக ஒலித்­தது.

‘வீரர்­கள் வாழும் திரா­விட நாட்டை வென்­ற­வர் கிடை­யாது’ என்று, ‘அச்­சம் என்­பது மட­மை­ய­டா’­­­விற்கு ஒத்­திகை பார்த்­தார்­கள் இரட்­டை­யர்­கள். குதி­ரை­யின் குளம்­படி தாளம் போட, வீர­மான முழக்­கம் சிறப்­பா­கக் கேட்­டது.

படம் தோற்­றுப்­போ­னா­லும், ஒரு­வ­கை­யில் நன்மை செய்­தது ‘சிவ­கங்­கைச் சீமை’. கண்­ண­தா­சன் பாடலை ஒப்­புக்­குத் தொட்­டுக் கொண்­ட­வர்­கள் கூட,  அவரை முன்­ன­ணிப் பாட­லா­சி­ரி­ய­ரா­கக் கருதி வாய்ப்­பு­கள் தர முன்­வந்­தார்­கள்.   தன்­னு­டைய பாடல் திற­மை­யைக் காட்ட கண்­ண­தா­சன் தன்­னு­டைய பணத்­தையே பண­யம் வைத்து  படம் எடுத்து தன்­னு­டைய திற­மையை நிரூ­பித்­தார்.

உடு­ம­லைத் தொடர்­பாக அவர் போட்ட

சவாலை ஓர­ளவு மெய்ப்­பித்­துக்­காட்­டும் காலம்

வரத்­தொ­டங்­கி­யது.  

                                              (தொட­ரும்)