23 ஜூலை 2019, 07:07 PM
நடிகர்கள் : விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா, யார் கண்ணன் மற்றும் பலர்.
இசை : டி. இமான், ஒளிப்பதிவு : எம். சுகுமார், எடிட்டிங் : எல்.வி.கே. தாஸ், தயாரிப்பு : திருப்பதி பிரதர்ஸ் (என். லிங்குசாமி, என். சுபாஷ் சந்திரபோஸ்), திரைக்கதை, இயக்கம் : பிரபு சாலமன்.
பொம்மன் (விக்ரம் பிரபு) தான் சகோதரனாக எண்ணும் யானை மாணிக்கத்துடன், தனது மாமா கொத்தலி(தம்பி ராமையா) மற்றும் நண்பன் உண்டியலோடு (அஸ்வின் ராஜா) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு மாணிக்கத்தை அழைத்துச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். தங்களை நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி உதவும் ஏஜன்ட்டிற்காக (யார் கண்ணன்) முதன்முறையாக காட்டிற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு செல்கிறார்கள். அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்காத நிலையில் தங்களது கிராமத்தின் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் கொம்பன் என்ற யானையை அடக்குவதற்காக அக்கிராமத்தின் தலைவர் (ஜோ மல்லூரி) கும்கி யானையை வரவழைக்கிறார். ஏஜன்ட் உண்மையான கும்கி யானையோடு வரும் வரை சமாளிப்பதாக கூறி மாணிக்கத்தோடு பொம்மன் அக்கிராமத்தில் தங்குகிறான். தங்களை காக்க வந்த தெய்வமாக கருதி அம்மக்கள் இவர்களை அன்பாக நடத்துகிறார்கள்.
கொம்பனின் நினைப்பில் மாணிக்கத்தை கண்டு பயப்படும் தலைவரின் மகள் அல்லி (லட்சுமி மேனன்) மெதுவாக மாணிக்கத்தோடு நட்பாகிறாள். அல்லியை கண்டவுடன் காதலில் விழும் பொம்மன், அவளைப் பிரிய மனமில்லாமல் மாணிக்கத்திற்கு கும்கி ஆவதற்கான பயிற்சியை அளிக்கிறான். தங்களது ஊர் கட்டுப்பாடுகளை நினைத்து தயங்கினாலும் பிறகு அல்லியும், பொம்மனை விரும்புகிறாள். வேறு சில இடங்களில் கொம்பனால் உயிர்பலி நிகழ்ந்திருப்பதாக கூறி வன அதிகாரி கிராம மக்களை வெளியேற வற்புறுத்துகிறார். தங்களது இருப்பிடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் மக்கள் மாணிக்கத்தையும், பொம்மனையும் நம்புகிறார்கள்.
பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் மாணிக்கத்திற்கு மதநீர் சுரக்க பொம்மனும் மற்றவர்களும் வைத்தியம் பார்க்கிறார்கள். அறுவடை சிறப்பாக நடந்து ஆட்டம்பாட்டமென மக்கள் கொண்டாடும் வேளையில் கொம்பன் திரும்ப வருகிறான். பொம்மனை காப்பாற்ற மதம் பிடித்த மாணிக்கம் கொம்பனோடு போராடி வீழ்த்துகிறது. படுகாயத்துடன் வீழும் மாணிக்கத்தை காப்பாற்ற மாமாவையும், உண்டியலையும் அழைக்கிறான் பொம்மன். ஆனால் கொம்பனால் நிகந்த விபத்தில் ஏற்கனவே இருவரும் இறந்திருக்க, அல்லியின் அருகாமையில் மாணிக்கமும் இறக்கிறான்.
தனது சுயநலத்தா லேயே இத்தனை உயிர்கள் பலியானதாக வருந்தி கதறும் பொம்மன் கிராமத்தை விட்டே போகிறான். சிறுவயதில் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்த மாணிக்கத்தைப் பற்றிய பொம்மனின் நினைவுகளோடு படம் நிறைவேறுகிறது.