கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 189

பதிவு செய்த நாள் : 22 ஜூலை 2019

ரங்காராவ் என்னும் நடிப்புலக சக்ரவர்த்தி

 தமிழ் மற்­றும் தெலுங்கு திரைப்­ப­டங்­க­ளில்  குணச்­சித்­திர வேடங்­க­ளில் நடித்த ஸம­ரல வெங்­கட ரங்­கா­ராவ் என்ற எஸ்.வி.ரங்­கா­ரா­வின் நெடிய ஆகி­ருதி.  இந்த இரண்டு மொழி திரைப்­ப­டங்­க­ளின் வர­லா­று­க­ளு­டன் பின்­னிப் பிணைந்­தி­ருக்­கி­றது. இந்த ஜூலை 2019ல் ரங்­கா­ரா­வின் நூற்­றாண்டு முடி­கி­றது. அவர் மர­ணம் அடைந்­த­தும் ஜூலை மாதம் என்­ப­தால், இது அவ­ரு­டைய திரை அத்­தி­யா­யத்தை நினைப்­ப­தற்­கான சரி­யான நேர­மாக இருக்­கி­றது. ஏனென்­றால், தமிழ் சினி­மா­வின் ஜீவ­னுள்ள பல கட்­டங்­க­ளு­டன் ரங்­கா­ரா­வின் அனா­யா­ச­மான நடிப்பு விர­விக்­கி­டக்­கி­றது.

‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ படத்­தில் இரண்டே காட்­சி­க­ளில் கலெக்­டர் விஞ்­சாக வரு­கி­றார் ரங்காராவ்.

‘பணக்­கா­ரன்’, ‘பட்­ட­தாரி’, ‘ஜமீந்­தார்’ எல்­லாம் நம்ம ைஸட். ஆப்­டர் ஆல், சிதம்­ப­ரம் பிள்ளை. பூல். அவ­னைத் தூக்­கில் போட்­டாக் கூட, ஈவென் இப் யூ ஹாங் ஹிம், நோபடி இஸ் கோயிங் டு கேர்  பார் ஹிம்... ’’, என்று கூறி­விட்டு,    துணைக்­க­லெக்­டர் ஆஷைப் பார்த்து, ‘‘...சில கூலிப்­ப­சங்க கூச்­சல் போடு­வாங்க... யூ ஜஸ்ட் டேக் கேர் ஆப் தெம்,’’ என்று கூறு­வார்.

அதன்­பின், ஒரு கணம் நிறுத்­தி­விட்டு, ‘‘கான்ட் யூ?’’ (உன்­னால் முடி­யும் இல்லை?) என்று கேட்­பார் ரங்­கா­ராவ்.  அந்­தத் தோரணை, அந்த மிடுக்கு, அந்த உச்­ச­ரிப்பு,  அந்த முக­பா­வம்....ஆண­வம் பிடித்த ஒரு வெள்­ளைக்­கார அதி­கா­ரியை நம் கண் முன் ஒரு கணத்­தில் நிறுத்­தி­வி­டு­வார் ரங்­கா­ராவ்!

துணைக்­க­லெக்­டர் ஆஷாக வரும் அசோ­க­னும் திற­மை­யான நடி­கர்­தான்...ஆனால் இந்த காட்­சி­யில் அவ­ருக்­கும் ரங்­கா­ராவ் போன்ற தரத்­தி­லான ஒரு நடி­க­ருக்­கு­மான வேறு­பாடு சட்­டென்று தெரிந்­து­வி­டும்!

இதன் பிறகு சிவாஜி சிதம்­ப­ரம் பிள்­ளை­யா­ க­வும் டி.கே. சண்­மு­கம் சுப்­ர­ம­ணிய சிவா­வா­க­வும் வரும்­போது, அவர்­க­ளு­ட­னான காட்­சி­யில் ரங்­கா­ராவ் இன்­னும் கூட அமர்க்­க­ளப்­ப­டுத்­தி­வி­டு­வார்.

இந்த வகை­யில், குறைந்த நேரத்­திற்கு வரும் ஒரு பாத்­தி­ரத்­தில் கூட தன்­னு­டைய முத்­தி­ரை­யைப் பதிக்­கக்­கூ­டிய ஆற்­றல் பெற்ற ரங்­கா­ராவ், எந்­தப் பாத்­தி­ரம் என்­றா­லும் அதை சிறப்­பா­கச்­செய்­யக்­கூ­டி­ய­வர் என்ற பெயர் எடுத்­தார். கடோத்­க­ஜன் (‘மாயா பஜார்’), ஹிரண்­ய­க­சிபு (‘பக்த பிர­க­லாதா’) போன்ற புரா­ணப் பாத்­தி­ரங்­கள்; அன்­னை­யின் ஆணை, ‘நம் நாடு’ போன்ற படங்­க­ளில் கய­மைத்­த­னம் படைத்த அப்­பட்­ட­மான வில்­லன் வேடங்­கள்; ‘சபாஷ் மீனா’, ‘சாரதா’ போன்ற படங்­க­ளில் கல­க­லப்­பான குணச்­சித்­தி­ரங்­கள்; ‘படிக்­காத மேதை’, ‘நானும் ஒரு பெண்’ போன்ற படங்­க­ளில் உணர்ச்­சி­பூர்­வ­மான உயர்ந்த பாத்­தி­ரங்­கள்....இப்­படி வேடங்­கள் எந்­தத் தன்மை  கொண்­டி­ருந்­தா­லும் தத்­ரூ­ப­மாக செய்து முடிப்­ப­வர் ரங்­கா­ராவ். அவ­ரு­டைய அணு­கு­மு­றை­யில் எந்த கேலிக்­கூத்­துக்­கும் இடம் கொடுக்­க­மாட்­டார். இத­னால் தெலுங்கு திரைப்­பட ரசி­கர்­கள் அவ­ருக்கு   உலக நடிப்பு மாமன்­னன் என்று பொருள்­ப­டும் ‘விஷ்வ நட சக்­ர­வர்த்தி’  என்ற டைட்­டிலை வழங்­கி­னார்­கள். இந்த வகை­யில் அவ­ருக்கு வேறு சில டைட்­டில்­க­ளும் உண்டு.

சிவா­ஜி­யின் தந்­தை­யா­க­வும் சிவா­ஜி­யின் பட நாய­கி­க­ளின் தந்­தை­யா­க­வும் அவர் எத்­த­னையோ படங்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றார். அறி­மு­கக்­காட்­சில், சிவாஜி ரங்­கா­ரா­வைப் பார்க்­கும் பார்­வை­யி­லேயே, ராவ் மீது அவர் நிஜ வாழ்­வி­லும் கொண்ட மரி­யாதை புலப்­பட்­டு­வி­டும்.... இந்த வகை­யில் ‘கைகொ­டுத்த தெய்­வம்’ படத்­தின் காட்சி ஒரு சான்று.

சிவா­ஜி­யைப் போல் முதல் படத்­தி­லேயே ரங்­கா­ரா­வுக்­குக் கதா­நா­ய­கன் வேடம் கிடைத்­து­ விட்­டது. தெலுங்­குப் பட­மான ராவின் அறி­மு­கப்­ப­டத்­தின் பெயர், ‘வரூ­தினி’ (சேனை).  அது சிவாஜி நடித்த ‘பரா­சக்தி’ வரு­வ­தற்கு ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்பு வந்­தது. ஆனால் ரங்­கா­ரா­வின் பள்ளி- – கல்­லூரி நண்­ப­ரான ராமா­னந்­தம் எடுத்த ‘வரூ­தினி’  படு­தோல்வி அடைந்­த­தால், ரங்­கா­ரா­வின் சினிமா ஆசை பின்­னுக்­குத் தள்­ளப்­பட்­டு­விட்­டது. நடி­கை­க­ளு­டன் நெருங்கி நடிக்­க­வேண்­டிய நிர்ப்­பந்­தம்­கூட அவரை வில­கச் செய்­த­தா­கச் சொல்­வார்­கள். ‘வரூ­தினி’ யில் நடிக்­கும் போது ரங்­கா­ரா­வுக்­குத் திரு­ம­ணம் ஆகி­யி­ருக்­க­வில்லை.

ஆந்­திர பிர­தே­சத்து கிருஷ்ணா மாவட்­டத்­தில் உள்ள நுஜ்­வீடு என்ற கிரா­மத்­தில் ஜூலை 3, 1918 அன்று, கோடீஸ்­வ­ர­ராவ் நாயு­டு­விற்­கும் லட்­சுமி நர­சம்­மா­விற்­கும் முதல் பிள்­ளை­யா­கப் பிறந்­தார் ரங்­கா­ராவ். ரங்­கா­ரா­வின் தந்தை, கீழ் கோதா­வரி ஜில்­லா­வில் உள்ள தவ­ளேஸ்­வ­ரத்­தில் கலால் வரி ஆய்­வா­ள­ராக இருந்­தார்.

ரங்­கா­ராவ் ஆந்­தி­ரா­வில் பிறந்­தா­லும், சென்­னை­யில்­தான் வளர்ந்­தார். ரங்கா ராவின் தந்­தை­வழி பாட்­ட­னார் சென்னை பொது மருத்­து­வ­ம­னை­யில் சர்­ஜ­னாக இருந்­தார். அவ­ரு­டன் தங்­கிய ரங்­கா­ராவ், பள்­ளிப்­ப­டிப்பை சென்­னை­யில்­தான் முடித்­தார். திரு­வல்­லிக்­கே­ணி­யில் இருந்த இந்து ஹை ஸ்கூலில் ரங்­கா­ராவ் பள்ளி இறுதி (எஸ்.எஸ்.எல்.சி) வரை படித்­தார்.

இந்த கால­கட்­டத்­தில், பல ஊர்­க­ளைப் பார்க்க வேண்­டும், அவற்­றில் வசிக்­க­வேண்­டும் என்ற ஆர்­வம் வந்­து­விட்­ட­தாம் ரங்­கா­ரா­விற்கு. விசா­கப்­பட்­டி­ணத்­தில் இரண்டு வரு­டம் இண்­டர்­மீ­டி­யட் படித்­தார். அதன் பிறகு  காகி­நா­டா­வில் பி.எஸ்.சி. பட்­டத்­திற்­குப் படித்து அதி­லும் நன்­றா­கத் தேறி­னார். படிப்பு முடிந்­த­தும், மீண்­டும் சென்­னைக்கே ரங்­கா­ராவ் திரும்­பி­விட்­டார்.

நல்ல நெட்­டை­யான உரு­வம். ஆஜா­னு­பா­கு­வான தோற்­றம். இதற்­குப் பொருத்­த­மாக, ரங்­கா­ரா­விற்கு தீய­ணைக்­கும் படை­யில் துணை அதி­கா­ரி­யாக வேலை கிடைத்­தது! ஆனால் இந்த வேலை அவ­ருக்­குப் பிடிக்­கா­த­தால் ராஜி­னாமா செய்­து­விட்டு வேறு வேலை  தேட ஆரம்­பித்­தார்.  இந்த  கால­கட்­டத்­தில், பெற்­றோர் அவ­ரு­டைய தாய்­மா­மா­வான ஏலூரு வெங்­க­ட­ரா­மய்யா நாயு­டு­வின் மக­ளான லீலா­வ­திக்கு மணம் செய்து வைத்­து­விட்­டார்­கள்!  ரங்­கா­ராவ் மள­ம­ள­வென்று திரை உல­கில் உயர தொடங்­கிய கால­கட்­டத்­தில், முத­லில் பையன் அதைத்­தொ­டர்ந்து இரண்டு பெண்­கள் என்று அவ­ரு­டைய குடும்­பம் வளர்ந்­தது. பின்­னா­ளில் நடிகை சாவித்­திரி சென்னை ஹபி­புல்லா சாலை­யில் மாளிகை போன்ற பங்­க­ளா­வில் வசித்­த­போது, அவர் இல்­லத்­திற்கு எதிரே இருந்த பங்­க­ளா­வில் வசித்­தார் ரங்­கா­ராவ். இரண்டு பேருக்­கு­மி­டையே நல்ல புரி­தல்  இருந்­தது. அவ்­வப்­போது பார்ட்­டி­க­ளும் நடந்­தன.

ஆனால், ஐம்­ப­து­க­ளின் ஆரம்ப காலத்­தில் ரங்­கா­ராவ் தியா­க­ராய நகர் தண்­ட­பாணி தெரு­வில் ஒரு வீட்­டில் வசித்­தார். இதற்­கெ ல்­லாம் முன்பு, அவ­ரு­டைய முதல் படம் தோல்வி அடைந்­த­தும், சினிமா உல­கத்­திற்கே முழுக்­குப் போட்­டு­விட்டு பிர­பல டாடா நிறு­வ­னத்­தில் சேர்ந்து ஜம்­ஷெட்­பூர் சென்று பணியை ஏற்­ற­வர்­தான் ரங்­கா­ராவ்.  அங்கே வேலை பிடிக்­கா­மல் புழுங்­கிக்­கொண்­டி­ருந்­த­வர், மீண்­டும் சென்­னைக்கு திரும்­பி­விட்­டார்!  

அவ­ருக்கு மீண்­டும் நடிப்பு வாய்ப்பு கிடைப்­பது கஷ்­ட­மாக இல்லை. ஆனால் கிடைத்­தது என்­னவோ சின்ன வேடம். ஏ.நாகேஸ்­வ­ர­ரா­வும் என்.டி. ராமா­ரா­வும் இணைந்து நடித்த முதல் பட­மான ‘பல்­லெ­டூரி பில்லா’ என்ற படத்­தில், ரங்­கா­ரா­வுக்கு ஒரு கிழ­வ­னார் வேடம் கிடைத்­தது.  வந்து செத்­துப்­போ­கும் சிறு வேடம்! ஆனால் படம் ரங்­கா­ரா­வின் சினிமா ஆசையை உயி­ரோடு இருக்க வைத்­தது.  அடுத்­தது, அதற்கு நன்­றாக  ஆக்­ஸி­ஜன் கொடுத்­தது, விஜயா வாகிணி ஸ்தாப­னம். சவு­கார் ஜான­கிக்கு ‘சவு­கார்’ என்ற  பெய­ரைக் கொடுத்த ‘சவு­காரு’ என்ற தெலுங்­குப் படத்­தில், வில்­லத்­த­னம் செய்­யும் கிராம குண்­ட­னாக ரங்­கா­ராவ் நன்­றாக நடித்­தார்.

ரங்­கா­ரா­வின் திற­மை­களை உணர்ந்து கொண்ட விஜயா ஸ்தாப­னத்­தின் உரி­மை­யா­ளர்­க­ளான நாகி ரெட்­டி­யும் சக்­ர­பா­ணி­யும், தங்­கள் படங்­க­ளில் அவ­ரைத் தொடர்ந்து நடிக்க வைத்­தார்­கள். இந்த வரி­சை­யில் முத­லில் வந்த படம்­தான், ‘பாதாள பைரவி’. தெலுங்­கி­லும் தமி­ழி­லும் இந்த படம் சக்­கைப்­போடு போட்­டது. பாடல்­கள் நன்­றாக அமைந்த பொழு­து­போக்­குப் பட­மான ‘பாதாள பைர­வி’­­யில் மந்­தி­ர­வா­தி­யாக நடித்த ரங்­கா­ரா­வின் நடிப்பு அனை­வ­ரை­யும் அசத்­தி­யது. அது­வரை அவ்­வ­ள­வாக கண்­ணுக்­குத் தெரி­யா­மல்  இருந்த ரங்­கா­ரா­வின் திறமை, ‘பாதாள பைரவி’ படத்­தின் வாயி­லாக  வெட்­ட­வெ­ளிச்­சம் ஆகி­விட்­டது ! இதற்­குப் பிறகு தெலுங்கு மற்­றும் தமிழ் சினி­மாக்­க­ளில் ரங்கா ராவ் நடிக்­காத படங்­களை விரல்­விட்டு எண்­ணி­வி­ட­லாம் என்று கூறத்­தக்க அள­வில் அவர் சர்வ வியாபி ஆகி­விட்­டார்.

இத­னால், எந்­தப் பாத்­தி­ரம் தந்­தா­லும் அவர் அந்­தப் பாத்­தி­ர­மாக மாறி­வி­டு­வார் என்ற உண்­மையை உல­கம் புரிந்­து­கொண்­டது. மந்­தி­ர­வாதி வில்­லன், காசில்­லா­மல் கல்­யா­ணம் நடத்­தி­வைக்­கும் பெரி­ய­வர் (கல்­யா­ணம் பண்­ணிப்­பார்), ராஜ­வி­சு­வா­சம் உள்ள ஊழி­யன் (சந்­தி­ர­ஹா­ரம்),  பித்­துக்­கு­ளித்­த­னம் உள்ள செல்­வந்­தர் (ராஜி என் கண்­மணி), காத­லர்­க­ளுக்கு இடம் கொடுக்­கும் கன­வான் (மிஸ்­ஸி­யம்மா) என்று வேடம் எது­வாக இருந்­தா­லும், அதைப் புதி­ய­தொரு கோணத்­தில் அணு­கும் திறமை படைத்­த­வ­ராக ரங்­கா­ராவ் விளங்­கி­னார்.

நகைச்­சுவை மேலோங்கி நின்ற ‘சபாஷ் மீனா’­­வில் தனது கம்­பீ­ர­மான உரு­வத்தை லேசாக்­கிக்­கொள்­ளும் ரங்­கா­ராவ், ‘மாயா பஜா’­­ரில் ‘கல்­யாண சமை­யல் சாதம்’ சாப்­பி­டும் கடோத்­க­ஜ­னாக என்ன ஆர்ப்­பாட்­டம் செய்­கி­றார்! இப்­படி பட்­ட­வர்­தான், ‘படிக்­காத மேதை’­­யில் சோக சித்­தி­ர­மாக மாறு­கி­றார்! பல படங்­க­ளில் சிவாஜி (எடுத்­துக்­காட்­டாக, அன்னை இல்­லம்), எம்.ஜி.ஆர் (நீதிக்­குப்­பின் பாசம்), சாவித்­திரி (எல்­லாம் உனக்­காக, கைகொ­டுத்த தெய்­வம்), சரோ­ஜா­தேவி (சபாஷ் மீனா, எங்க வீட்­டுப் பிள்ளை) போன்ற முன்­னணி நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு அப்­பா­வாக சிறந்த முறை­யில் நடித்­தார் ரங்­கா­ராவ். ஆனால் தெலுங்கு சினி­மா­வில் ஒரு தலை­சி­றந்த இயக்­கு­ந­ரா­கக் கரு­தப்­ப­டு­கிற பி.என்.ரெட்டி, ‘பங்­காரு பாபா’ என்ற படத்­தில் ரங்­கா­ரா­வுக்கு முக்­கிய வேடத்தை அளித்­தார். இந்­தப் படம் ராவின் நடிப்­புத் திற­மை­யின் ஒரு மைல்­கல்­லா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

‘சத­ரங்­கம்’, ‘பாந்­தவ்­யாலு’ என்ற  இரு தெலுங்­குப் படங்­களை ரங்­கா­ராவ் தானே தயா­ரித்து, இயக்கி, அவற்­றில் நடிக்­க­வும் செய்­தார்.  இதில் ‘பாந்­தவ்­யாலு’ வேறொன்­றும் இல்லை, கே.எஸ். கோபா­ல­கி­ருஷ்­ணன் இயக்­கிய ‘கண்­கண்ட தெய்­வம்’­­தான்.

கே.எஸ்.ஜி. கதை,வச­னம் மட்­டும் எழு­திய காலத்­தி­லி­ருந்தே அவ­ரு­டைய படங்­க­ளில் ரங்­கா­ராவ் நடித்­துக்­கொண்­டி­ருந்­தார். உதா­ர­ணத்­திற்கு, மாடர்ன் தியேட்­டர்­சின் ‘குமு­தம்’. இந்த படத்­தில் ரங்­கா­ராவ் ஏற்ற பாத்­தி­ரம் அரு­மை­யாக இருக்­கும். கே.எஸ்.ஜியின் முதல் இயக்­க­மான ‘சார­தா’­­வி­லும் ரங்­கா­ரா­வுக்கு சிறப்­பான வேடம் அமைந்­தது. இந்த கே.எஸ்.ஜி-ரங்­கா­ராவ் இணைவு கடைசி வரை தொடர்ந்­தது. கே.எஸ்.ஜி. முதன்­மு­த­லாக தயா­ரித்து வெற்றி கண்ட ‘கற்­ப­கம்’, அதை அடுத்து வந்த ‘கைகொ­டுத்த தெய்­வம்’, ‘செல்­வம்’, ‘பேசும் தெய்­வம்’, ‘கண்­கண்ட தெய்­வம்’, ‘வாழை­யடி வாழை’ என்று இது ஒரு தொடர்­க­தை­யாக விளங்­கி­யது. இந்த படங்­க­ளில் சில இடங்­க­ளில் தன்­னு­டைய இயல்­பான நடிப்­பி­லி­ருந்து மாறு­பட்டு மிகை நடிப்­பி­லும் ரங்­கா­ராவ் ஈடு­பட்­டார்.

ரங்­கா­ராவ் தயா­ரித்த நான்கு படங்­க­ளில் ஒன்று, ‘சுக­துக்­காலு’. இது மேஜர் சந்­தி­ர­காந்­தின் தெலுங்கு தயா­ரிப்பு. இதில் மேஜர் சுந்­தர்­ரா­ஜன் நடித்த கண் தெரி­யாத மாஜி ராணுவ வீரர் பாத்­தி­ரத்­தில் ரங்­கா­ராவ் நடித்­தார்.  

தெலுங்கு திரைப்­ப­டங்­க­ளில் பல் வேறு­பட்ட சிறந்த புராண பாத்­தி­ரங்­க­ளில் ரங்­க­ராவ் மிகச் சிறப்­பாக நடித்­தார்.   தமி­ழில் வந்த ‘மாயா பஜா’­­ரில் இந்த நடிப்பு பரி­மா­ணத்­தைக் கண்ட தமிழ் சினிமா ரசி­கர்­கள், மீண்­டும் ‘பக்த பிர­க­லா­தா’­­வில் அதைப் பார்த்­தார்­கள். ஹிரண்­ய­க­சி­பு­வாக ரங்­கா­ராவ் ஆர்ப்­பாட்­டம் செய்­யா­ம­லேயே அசத்­தி­னார்.

ஆண­வம் பிடித்த ஆங்­கில அதி­காரி விஞ்­சாக ஓரிரு காட்­சி­க­ளில்   அமர்க்­க­ளப்­ப­டுத்­திய ரங்­கா­ராவ், ‘சர்­வர் சுந்­த­ரம்’ படத்­தில் ஒரே ஒரு காட்­சி­யில் நிலைத்து நின்­றார்.   திற­மை­யுள்ள ஒரு புது­மு­கத்­தை­யும் அல்­டாப் காட்­டும் திற­மை­யற்ற பெண் நட்­சத்­தி­ரத்­தை­யும் இயக்­கும் பட டைரக்­ட­ராக வந்து, அந்த ஒரே காட்­சி­யில் உன்­ன­தத்­தைத் தொட்­டார். நட்­பின் பேரில் அவர் தனக்கு இந்த சீனில் நடித்­துக்­கொ­டுத்த விஷ­யத்தை நாகேஷ் பதிவு செய்­தி­ருக்­கி­றார். அதற்கு ரங்­கா­ராவ்

எந்த காசும் வாங்­கா­த­தோடு, தன்­னு­டைய வீட்­டிலே நாகே­ஷுக்கு விரு­து­ம­ளித்­தார்! இயக்­கு­நர்­க­ளி­டம் பிரச்­னை­யும் செய்­யக்­கூ­டி­ய­வர் ரங்­கா­ராவ் என்­பதை இயக்­கு­நர் (கிருஷ்­ணன்) பஞ்சு

கூறி­யி­ருக்­கி­றார்.  

புகைப்­ப­ழக்­க­மும் மதுப்­ப­ழக்­க­மும் அதி­க­மா­கவே இருந்த ரங்­கா­ராவ், தன்­னு­டைய 55 வய­தி­லேயே மார­டைப்­பால் கால­மா­னார்.  அகா­ல­மாக விடை­பெற்­றா­லும், சுமார் முப்­பது வரு­டங்­கள் தமிழ் சினி­மா­வி­லும் தெலுங்கு சினி­மா­வி­லும் கோலோச்­சிய ரங்கா ராவ், பல முறை சிறந்த நடிப்­பிற்­கான தேசிய விருதை பெற்­ற­தோடு, திரை உல­கிலே ஒரு நிரந்­த­ர­மான இடத்­தை­யும்  தக்­க­வைத்­துக் கொண்­டு­விட்­டார்.

(தொட­ரும்)