கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 188

பதிவு செய்த நாள் : 15 ஜூலை 2019

தேசிகரும் அவருடைய முத்தான சீடரும் !

அண்­மை­யில் இசை அறி­ஞர் ப. முத்­துக்­கு­மா­ர­சாமி மறைந்­தார். எண்­பத்தி ஏழு வயது. ஆனால் ஓரிரு வரு­டங்­கள் வரை, பத்து பதி­னைந்து கிலோ­மீட்­டர் பஸ்­சில் பய­ணம் செய்து, சென்னை பாரி­முனை அருகே இருக்­கும் ராஜா அண்­ணா­மலை மன்­றத்­தின் தமிழ் இசைக் கல்­லூ­ரி­யில் மாண­வர்­க­ளுக்­குப் பாடம் எடுத்­துக்­கொண்­டி­ருந்­தார்.  இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன், அத்­தனை  தூரம் வந்­து­போக முடி­யா­மல் போனது. அதன் பிறகு, சென்­னை­யின் மயி­லைப் பகு­தி­யில் குழந்­தை­க­ளுக்­குத்   ‘தேவார’ இசை வகுப்பு எடுப்­ப­தாக இருந்­தது. அது ஏதோ கார­ணத்­தால் தொடங்­கா­மல் போனது.

தமிழ் இசைத்­தே­ட­லில் முத்­து­கு­மா­ர­சா­மிக்கு அதிக ஆர்­வம் இருந்­தது. இந்த தேட­லின் வாயி­லாக அவர் ஏரா­ள­மான தமிழ்ப் பாடல்­களை இசை­யு­டன் அறிந்­து­வைத்­தி­ருந்­தார். எண்­பது வய­தைத்­தாண்­டி­யும் குர­லில் பிசிரோ நடுக்­கமோ இல்­லா­மல் கச்­சேரி செய்­வார். தன்­னு­டைய இந்த இசைத்­த­மிழ் சொத்­தைப் பிற­ரு­டன் பகிர்ந்­து­கொள்­வ­தி­லும் அவர் தயக்­க­மில்­லா­மல் செயல்­பட்­டார்.

சில சிறப்பு கச்­சே­ரி­க­ளுக்­குப் பொருத்­த­மான பாடல்­களை அவ­ரி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்ட பிர­பல பாடகி சுதா ரகு­நா­தன், அவ­ரு­டைய இந்த  தாராள குணத்­தைக் கூறி வியந்­து­போ­வார். தமிழ்ப் பாடல்­க­ளைக் கற்­றுத் தரு­வ­தில் அவர்  எந்த சுணக்­க­மும் காட்­ட­மாட்­டார். அதில் அவர் உயர்வு – தாழ்வு பார்க்­க­மாட்­டார். தான் சிர­மப்­பட்டு அறிந்­து­கொண்­டதை பிறர் சிர­மப்­ப­டா­த­வாறு பகிர்ந்­து­கொள்­வார். இத­னால்­தானோ என்­னவோ அவ­ரி­டம் சோர்வோ, முது­மையோ இல்லை.  

தமிழ் இசை வட்­டங்­க­ளி­லும் சென்­னை­யி­லும் கடந்த சில ஆண்­டு­க­ளாக தண்­ட­பாணி தேசி­க­ரின் இசைப் பாணி­யை­யும் ஆக்­கங்­க­ளை­யும் தொடர்ந்து வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­ய­தால் முத்­துக்­கு­மா­ர­சாமி பல­ரு­டைய கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தார். ஒவ்­வொரு ஆண்­டும் தவ­றா­மல்  ‘தேசி­கர் நாள்’ கொண்­டா­டு­வார். இவற்­றில் பேச்­சுக்­கச்­சே­ரி­க­ளும் இருக்­கும், பாட்­டுக்­கச்­சே­ரி­க­ளுக்­கும் குறை­வி­ருக்­காது. இத்­த­னைக்­கும், இதற்­கெல்­லாம் முத்­துக்­கு­மா­ர­சா­மிக்­குக் குறிப்­பி­டும்­ப­டி­யான பண உதவி கிடைக்­காது.  

சங்­கீத விஷ­யத்­தில்  ஆடம்­ப­ரத்­தையோ அலட்­ட­லையோ முத்­துக்­கு­மா­ர­சாமி துளி­யும் நம்­பி­ய­தில்லை. தான் பாடும் போது

தன்­னு­டைய மேதா­வி­லா­சத்தை வெளிக்­காட்­டவோ இசையை அதிக அலங்­கா­ரம் செய்தோ பாட­மாட்­டார். பாடல் வரி­க­ளின் சொற்­களை சரி­யாக உச்­ச­ரித்­தும் தக்­க­வாறு சந்தி பிரித்­தும் பாடு­வார். பாட­லின் உணர்­வும், பாடல் அமைந்­தி­ருக்­கும் ராகத்­தின் தன்­மை­யும் அள­வாக வெளிப்­ப­டும்­படி பாடு­வார்.

அவர் அதி­கப்­ப­டி­யாக செய்­தது,  தன்­னு­டைய குரு­நா­த­ரான தண்­ட­பாணி தேசி­க­ரைக்  கொண்­டா­டிய ஒன்­றைத்­தான்.  இத­னால்­தான்,  முத்­துக்­கு­மா­ர­சா­மியை குரு­பக்­தி­யின் எடுத்­துக்­காட்­டாக இன்­றைய இளம் கர்­நா­டக இசைக் கலை­ஞர்­கள் கொள்­ள­வேண்­டும் என்­றார், சுதா ரகு­நா­தன்.

முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் மூதா­தை­யர்­கள், காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர்­கள். ஒரு கால­கட்­டத்­தில், குடும்­பம் யாழ்ப்­பா­ணத்­திற்­குக் குடி­பெ­யர்ந்­தது. முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் தந்தை பர­ம­சாமி, பிர­பல நல்­லூர் கந்­த­சாமி கோயி­லில் குருக்­க­ளாக இருந்­த­வர். பின்­னா­ளில், இந்த கோயி­லின் சூழ­லில் அமைந்த, தன்­னு­டைய இளம் பிரா­யத்து சுக­மான காலங்­கள் முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் நினை­வில் நிழ­லா­டும். ஆனால், அவ­ருக்கு ஏழு வய­தாக இருந்­த­போது, அப்பா திடீ­ரென்று இறந்­து­போ­னார். அப்பா போன­தும், முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் வாழ்க்­கையை வறுமை சூழ்ந்­து­கொண்­டது.

ஆனால் என்ன வேடிக்கை என்­றால், வறுமை ஒரு பக்­கம் வாடிக்­கை­யா­கிப்­போ­னா­லும், இன்­னொரு பக்­கம் இசை உணர்ச்சி வளர்ந்­து­கொண்டே வந்­தது. மூன்று வய­தி­லேயே முத்­துக்­கு­மா­ர­சா­மி­யி­டம் இசை ஞானம் வெளிப்­பட்­டு­விட்­டது. அதை வெளிக்­கொண்டு வந்­தது, தியா­க­ராஜ பாக­வ­த­ரின் பாட்டு.

‘பவ­ளக்­கொ­டி’­­யில் அறி­மு­க­மான பாக­வ­தர், ‘நவீன சாரங்­க­தா­ரா’­­வில் ‘சிவ­பெ­ரு­மான் கிருபை வேண்­டும்’ என்­றும், ‘சத்­தி­ய­சீ­லன்’ என்ற படத்­தில் ‘சொல்லு பாப்பா’ என்­றும்  பாடி­யி­ருந்­தார். எதற்­கா­கப் பாடி­னார்? முத்­துக்­கு­மா­ர­சாமி பாடு­வ­தற்­கா­கத்­தான் என்று பெற்­றோ­ருக்­குத் தோன்­றும் வண்­ணம் அவற்­றைத் திருப்­பித் திருப்­பிப் பாடிக்­கொண்­டி­ருந்­தான் சிறு­வன் முத்­துக்­கு­மா­ர­ சாமி! (நல்ல பாடல்­க­ளைக் சிறு­வர்­கள் கேட்­கும்­படி செய்­தால், அவர்­கள் அவற்­றைத் திரும்­பப்­பா ­டு­வார்­கள், முணு­மு­ணுப்­பார்­கள். ‘கல்­யா­ணம்­தான் கட்­டிக்­கிட்டு ஓடிப்­போ­லாமா’ என்றோ, ‘ஐயோ பத்­திக்­கிச்சே’ என்றோ  கேட்­டுக்­கொண்­டி­ருந்­தால், அவச்­சொற்­கள்­தான் குழந்­தை­க­ளின் அமு­த­வா­யி­லி­ருந்து வெளிப்­ப­டும்!)

முத்­துக்­கு­மா­ர­சாமி வளர்ந்து வந்த கால­கட்­டத்­தில், ‘பட்­டி­ணத்­தார்’ வந்­தது. தேவா­ரப் பாடல்­களை கம்­பீ­ர­மான குர­லி­லும் சுத்­த­மான தமிழ் உச்­ச­ரிப்­பி­லும் பாடிக்­கொண்­டி­ருந்த தண்­ட­பாணி தேசி­கர், தலைமை வேடத்­தில் நடித்­தார். கரு­வ­றை­யி­லி­ருந்து கரு­மாதி வரை ஒரு உயிர் காணும் ஜீவிய நாட­கத்தை, ‘ஒரு மட­மா­தும் ஒரு­வ­னு­மாகி’ என்ற பாட­லில் பட்­டி­ணத்­தார் எழுதி வைத்­தி­ருந்­தார். அதைப் படத்­தில் தேசி­கர் அரு­மை­யா­கப் பாடி நடித்­தார். முத்­துக்­கு­மா­ர­சாமி அந்­தப் பாட­லைக் கேட்ட போது அதன் பொரு­ளைப் புரிந்­து­கொள்­ளும் வயது அவ­ருக்­கில்லை. அதோடு, அந்­தப் பாட­லைப் பாடிய தண்­ட­பாணி தேசி­கர் தன்­னு­டைய குரு­நா­த­ராக வரு­வார் என்­றும் அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆனால் தேசி­கர் பாடிய தமிழ்ப் பாடல், முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் இத­யத்தை ஈர்த்­தது.

ஆண்­டு­கள் செல்ல செல்ல இசை­தான் தன்­னு­டைய துறை என்­பது முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு விளங்க ஆரம்­பித்­து­விட்­டது. ஆனால்,  அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சென்று அங்கே நான்கு வருட ‘சங்­கீத பூஷ­ணம்’ படிப்பை மேற்­கொள்­ள­வேண்­டும் என்ற முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் கனவு பல வரு­டங்­கள் எட்­டாக்­க­னி­யாக இருந்­தது.  கடை­சி­யில் அது­வும் 1956ல் நடக்­கத்­தான் செய்­தது. அப்­போது முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு 27வது வயது.

‘நாளை போவேன்’, ‘நாளை போவேன்’ என்று சிதம்­பர தரி­ச­னத்தை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்த நந்­த­னார் கடை­சி­யில் நட­ரா­ஜப்­பெ­ரு­மா­னு­டன் ஐக்­கி­யம் ஆன­து­போல், முத்­துக்­கு­மா­ர­சா­மி­யும்  பல்­க­லைக்­க­ழக இசைத்­து­றை­யில் இணைந்­தார்.

இசைத்­து­றைக்­குள் நுழை­வது, தன்­னு­டைய இசைப்­ப­சிக்கு விருந்­த­ளிப்­ப­து­போல் இருந்­தது முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு. பாடல்­க­ளுக்கு சுர­தா­ளக் குறிப்பு எப்­படி எழு­து­வது என்று திரு­பாம்­பு­ரம் ராஜ­கோ­பால பிள்ளை சொல்­லிக்­கொ­டுத்­தார். கீர்த்­த­னை­களை சீக்­கி­ரம் கிர­கிக்­கும் வழியை மயிலை வஜ்­ஜி­ர­வேலு முத­லி­யார் காட்­டி­னார். டி.கே.ரங்­கா­சா­ரி­யின் பாட்­டும் வகுப்­பும் உணர்ச்­சி­ம­ய­மான விருந்­த­ளித்­தன. தஞ்­சா­வூர் ராம­தாஸ் லய சம்­பந்­த­மான விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்­தார்.

இப்­படி  பல மகா­னு­பா­வர்­கள் இசை ஆசி­ரி­யர்­க­ளா­கக் கிடைத்­தா­லும், பேரா­சி­ரி­ய­ரான தண்­ட­பாணி தேசி­க­ரி­டம் முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு ஒரு தனி மரி­யா­தை­யும் அன்­பும் ஏற்­பட்­டன. திரை­யில் தண்­ட­பாணி தேசி­கர் பட்­டி­னத்­தா­ராக, தாயு­மா­ன­வ­ராக, மாணிக்­க­வா­ச­க­ராக, திரு­ம­ழிசை ஆழ்­வா­ராக,  ஜெமி­னி­யின் நந்­த­னா­ராக நடித்­த­வர் என்­பது அல்ல முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் தனி அன்­புக்­கான கார­ணம்.

தேவா­ரப் பாட­க­ராக இருந்து, திரை நட்­சத்­தி­ர­மாகி,  நடி­கை­யான தேவ­சே­னாவை இரண்­டாம் தார­மாக மணந்து, இசை ஆராய்ச்­சி­யா­ளர் ஆகி, தமிழ் இசை இயக்­கத்­தின் தூணாக உரு­வா­கி­யி­ருந்­தார் தண்­ட­பாணி தேசி­கர். அவ­ரு­டைய இசை வாழ்க்­கை­யின் ஒவ்­வொரு திருப்­பத்­தை­யும் அவர் திறம்­பட சந்­தித்து தன்­னு­டைய ஆற்­ற­லை­யும் அந்­தஸ்­தை­யும் உயர்த்­திக்­கொண்­டி­ருந்­தார்.

இப்­ப­டி­பட்ட  தனி ஆளு­மை­யான தேசி­க­ரு­டன்  முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு  முத­லில் சங்­க­ட­மான ஒரு அனு­ப­வம் ஏற்­பட்­டது.   ‘திரு­ம­களே நல்­வ­ரம் அருள்­வாய்’ என்ற தோடி ராகப் பாடலை வகுப்­பில் சொல்­லிக் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தார் தேசி­கர்.

பட்டு வஸ்­தி­ரங்­கள் அணிந்து, காதில் வைரக்­க­டுக்­கண் மின்ன, ஜவ்­வா­தும் புனு­கும் மணக்க, அடுக்­க­டுக்­காக சங்­க­தி­கள் போட்­டுப் பாட­லைப் பாடிக்­காட்­டி­னார் தேசி­கர். அவர் சுட்­டிக்­காட்­டும் மாண­வர், அவர் தொடுத்த, குறிப்­பிட்ட சங்­க­தி­யைத் திரும்­பப் பாட வேண்­டும். அந்த வகை­யில் முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் முறை வந்­தது. கடி­ன­மான ஒரு சங்­க­தி­யைப் போட்­டார் தேசி­கர். முத்­துக்­கு­மா­ர­சா­மி­யால் அதை சரி­யா­கப் பாட முடி­ய­வில்லை. ‘‘என்­னப்பா நினைச்­சுக்­கிட்டே? என்ன பாடறே? உனக்கு சங்­கீ­தம் வருமா? கேட்டு ஒழுங்கா பாடத்­தெ­ரி­யலே,’’ என்­றெல்­லாம் திட்­டி­விட்டு, பாடத்­தைத் தொடர்ந்து நடத்­திச் சென்­றார் அவர்.

வகுப்பு முடிந்­த­தும், சக மாண­வர்­கள் முத்­துக்­கு­மா­ர­சா­மி­யைத் தேற்­றி­னா­லும், அவ­ருக்­குத் துக்­கம் தாங்­க­வில்லை. மூன்று நாட்­கள் வகுப்­பிற்­குப் போக­வில்லை. விடுதி அறை­யில் படுத்­துக்­கி­டந்­தார். அப்­போது யாரோ கத­வைத் தட்­டும் சப்­தம் கேட்­டது. திறந்து பார்த்­தால், தேசி­கர்! ‘‘முத்­து­சாமி...முக­மெல்­லாம் அலம்­பிக்­கொண்டு வகுப்­பிற்கு வா,’’ என்று கூறி­விட்டு சென்­று­விட்­டார்!

என்ன நடக்­கப்­போ­கி­றதோ என்று பயந்­து­கொண்டு வகுப்­புக்கு சென்­றார் முத்­துக்­கு­மா­ர­சாமி. அங்கே தேசி­கர்  பேசி­னார். ‘‘குரு­வும் நண்­ப­னைப் போலத்­தான்பா. சீடன் சரி­யா­கப்­பா­ட­வில்லை என்­றால் தப்பை சுட்­டிக்­காட்டி திருத்­து­வார். அவர்­தான் உண்­மை­யான குரு....,’’ என்­றார்.

இப்­ப­டிக் கூறி விஷ­யத்தை முடித்­து­வி­ட­வில்லை தேசி­கர்.  ‘‘வகுப்பு முடிஞ்­ச­தும், எழு மணிக்கு வீட்­டுக்கு வா,’’ என்­றார். பிறகு வீட்­டில், தேவ­சேனா இலை போட, தேசி­க­ரு­டன் முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு சாப்­பாடு!

தண்­ட­பாணி தேசி­க­ரின் குரல்,  பேஸ் குரல், இனி­மை­யும் ஆழ­மும் கொண்ட கணீர் குரல். குரல் இப்­படி என்­றால், அவ­ரு­டைய உள்­ளம் கலை உள்­ளம், கருணை உள்­ளம். ஒரு மாண­வ­னுக்­காக அவர் இறங்­கி­வந்து அவ­னு­டைய மன­திற்கு ஒத்­த­டம் கொடுத்த விதம், அவ­ரு­டைய உள்­ளத்­தின் குழை­வைக் காட்­டி­யது.

தேசி­க­ரு­டன் முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் உறவு, அண்­ணா­ம­லை­யில் படித்த நான்கு வரு­டங்­க­ளை­யும் கடந்து தொடர்ந்­து­கொண்டே இருந்­தது. பின்­னர், தேசி­கர் 1973ல் இறந்­தார். இனக்­க­ல­வ­ரத்­தால் இலங்­கை­யி­லி­ருந்து  தமி­ழ­கத்­திற்­குத் திரும்­பிய முத்­துக்­கு­மா­ர­சாமி, குடும்­பத்­து­டன்   வாழ்க்­கையை மீண்­டும் தொடங்­க­வேண்­டிய நிலை­யில் இருந்­தார். அப்­ப­டி­யும் தேசி­கர் புக­ழைப் பரப்­பு­வ­து­தான் அவ­ரு­டைய இசைத்­தொண்­டாக இருந்­தது. தேசி­க­ரின் நூற்­றாண்டு வந்த 2008ல், பல இசை சபை­க­ளில் முத்­துக்­கு­மா­ர­சாமி அவ­ரு­டைய உருப்­ப­டி­க­ளைப் பாடி தன்­னு­டைய குரு­வின் இசைத் தொண்டை வெளிச்­சம்­போட்­டுக் காட்­டி­னார்.  ‘‘மதுரை மீனாட்சி அம்­மன் மீது தேசி­கர் இயற்­றிய ஒன்­பது பாடல்­களை முத்­துக்­கு­மா­ர­சாமி பிர­ப­லப்­ப­டுத்­தி­னார்’’, என்று சுட்­டிக்­காட்­டி­னார், முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் நண்­ப­ரும் உடன் பணி­யாற்­றும் இசை விரி­வு­ரை­யா­ள­ரு­மான  ஹரி­ஹ­ர­சுப்­பி­ர­ம­ணி­யம். இவர், முத்­துக்­கு­மா­ர­சா­மி­யின் எண்­ப­தா­வது பிறந்த நாளை, இசை மாண­வர்­க­ளு­டன் சேர்ந்து இனி­மை­யா­கக் கொண்­டா­டி­ய­வர்.

தமிழ் இசை மீது முத்­துக்­கு­மா­ர­சா­மிக்கு எத்­த­னைக் காதல் இருந்­ததோ அந்த அள­வுக்கு தேசி­கர் மீது மரி­யா­தை­யும் நன்றி உணர்­வும் குரு­பக்­தி­யும் இருந்­தன. ஆனால் ‘தமிழ், தமிழ்’ என்று வெறு­மனே கூப்­பாடு போடும் கூட்­டம், முத்­துக்­கு­மா­ர­சாமி என்­னும் உண்­மை­யான தமிழ் மகா­னின் மறை­வைக் கூட கண்­டு­கொள்­ள­வில்லை.

                                           (தொட­ரும்)