பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க் கேள்விகளை அடுக்கிய நிர்மலா சீதாராமன்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 20:55

புதுடில்லி, 

  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதிலளித்து பேசினார். அப்போது ப. சிதம்பரத்தின் கேள்விகளுக்கு பதிலடியாக பல கேள்விகளை அடுக்கினார்.

மாநிலங்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய வலிமையான கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என விமர்சித்தார்.

முதலீடுகளை ஊக்குவிக்கவும் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ? என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் தொடர்பாக ப. சிதம்பரம் முன்வைத்த கருத்துகள் மற்றும் கேள்விகளுக்கு இன்று மாநிலங்களவையில்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். தன் 102 நிமிட நேர உரையில் 45 நிமிடங்கள்    ப. சிதம்பரத்துக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது இந்தியாவில் நிதி அமைச்சர் ஒருவர் இல்லாவிட்டாலும்  நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே இரட்டிப்பாகும் என்பதை வட்டிக்கு கடன் கொடுப்பவர் கூட கணக்கு பார்த்துக் கூறிவிட முடியும் என்று ப. சிதம்பரம் கூறியதை சுட்டிக்காட்டினார்.

அக்கறை காட்டாத காங்கிரஸ்

ப. சிதம்பரம் கூறியது போல் நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாக இரட்டிப்பாகும் என்றால் நாம் அனைவரும் இங்கு ஏன் கூடியுள்ளோம் ? எதற்காக அரசாங்கம் செயல்பட வேண்டும் ?

ஒருவேளை இதனால் தான் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை போலும். ஆனால் மோசடிகள் மட்டும் குறைவில்லாமல் அதிகரித்தன. பொருளாதாரம் எப்படியும் வளர்ந்துவிடும். நம் சுய லாபத்தை அதிகரிப்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்தலாம் என இருந்துவிட்டீர்களோ ? ப. சிதம்பரம் என்ன தான் கூற வருகிறார்?

அனுபவம் வாய்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம் நேற்று அவையில் பட்ஜெட் தொடர்பாக பல விஷயங்களை முன்வைத்து பேசினார். அதற்கு நான் நிச்சயம் பதிலளிக்க விரும்புகிறேன்.

எனக்கு முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்களிடம்  இருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்.

அதேபோல் மத்திய பட்ஜெட்டில் மதிப்பு மிக்க விஷயம் எதுவும் இல்லாதது போல் பேசிய ப. சிதம்பரம் தன் பதவி காலத்தில் என்ன செய்தார் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பாஜக தலைமையிலான மத்திய அரசை கேலி செய்து பேசிய ப. சிதம்பரத்திடம் நான் ஒன்று கேட்கிறேன். கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பானதா ? காங்கிரஸ் ஆட்சியில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை ?

ஜிஎஸ்டி என்ற மெகா சீர்திருத்தம்

மத்திய அரசு கட்டமைப்புக்கான எந்த சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்று ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆனால் நிதர்சனத்தில் மத்திய அரசு 16 சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அதில் மிக முக்கியமானது ஜிஎஸ்டி வரி. நாட்டின் மிக பெரியளவிலான சீர்திருத்த நடவடிக்கை ஜிஎஸ்டி. இது நாட்டின் கட்டமைப்பு சீர்திருத்தம் இல்லையா ?

ஜிஎஸ்டி வரிக்கு காங்கிரஸ் எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போட்டது. தற்போது அதை கபார்சிங் வரி என்றும் விமர்சித்து வருகிறது.

மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால் கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக செல்லாமல் தடுக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்கள் மூலம் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் யதார்த்தமான நிறைவேற கூடிய திட்டங்கள். இந்த திட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி கூறுவது போல் சமூகத்துறைக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது.  

அரசின் சுமையை அதிகரித்த ப. சிதம்பரம்

ப. சிதம்பரம் பதவிக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் சொத்து விவரங்களை தானாக முன்வந்து தாக்கல் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஒரு முறைகேடான திட்டம். அதனால் வரிசெலுத்துவோர் கடும் அவதிக்குள்ளானார்கள் என இந்தியாவின் தலைமைத் தணிக்கை அதிகாரி சாடினார்.

பட்ஜெட்டில் நிர்ணயித்தப்படி நிதி பற்றாக்குறையை 4.8 சதவீதத்துக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப, சிதம்பரம் அரசின் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் அதன் சுமையை அடுத்த வந்த அரசின் மீது செலுத்திவிட்டார்.

அந்த சுமை 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் தலையில் விழுந்தது. இதில் இருந்து நான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா ? என நிர்மலா சீதாராமன் கேள்விகளை அடுக்கினார்.

நிர்மலா சீதாராமன் தான் பதிலளித்து பேசும் போது ப. சிதம்பரம் இன்று அவையில் இல்லாதததையும் சுட்டிக்காட்டினார்.