ஆப்கன் திருமண நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் தற்கொலை தாக்குதல் : 6 பேர் பலி

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 20:13

காபுல், 

   ஆப்கானிஸ்தான் நாங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு ஆப்கன் மாகாணமான நாங்கர்ஹாரில் உள்ள பசிர்வா அகம் மாவட்டத்தில் அரசு படைகளின் கமாண்டர்களில் ஒருவரான மாலிக் டூர் என்பவரது இல்லத்தில் இன்று காலை அவரது மருமகனின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த 13 வயது நிரம்பிய ஒரு சிறுவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த தாக்குதலில் கமாண்டர் மாலிக் டூர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

அரசு படை கமாண்டர் மாலிக் டூரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஃபயஸ் முகமது பாபர்கில் தெரிவித்தார்.

திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் பலர் ஒரே இடத்தில் கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாங்கர்ஹார் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதஹுல்லா கோகியானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை தங்கள் அமைப்பினர் நடத்தவில்லை என தலிபான் அறிவித்துள்ளது . தாக்குதலின் போது பொதுமக்கள் உயிரிழப்பை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என தலிபான் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாங்கர்ஹார் மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.