நம்பிக்கை வாக்கு கோருவேன்: சட்டமன்றத்தில் முதல்வர் குமாரசாமி உறுதி

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 19:43

பெங்களூரு

   இன்று பிற்பகல் கூடிய கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி தனக்கு பெரும்பான்மை ஆதரவு இன்னும் இருப்பதை உறுதி செய்ய கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரப் போவதாக அறிவித்தார்.

கர்நாடக அரசியலில் சமீபத்தில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் நம்பிக்கை வாக்கு கோர நான் முடிவு செய்துள்ளேன் என முதல்வர் குமாரசாமி கூறினார்.
நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்கு எனக்கு கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் போதுமான அவகாசம் அளிக்க வேண்டும் என குமாரசாமி கேட்டுக்கொண்டார். கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்துள்ளனர். தங்கள் ராஜினாமாக்களை ஏற்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்ற கூட்டம் இன்று பிற்பகல் துவங்கியது.

வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தில் முதல் நாளன்று கர்நாடக சட்டமன்றத்தில் அங்கம் வகித்து காலமாகிவிட்ட உறுப்பினர்களின் பணியை போற்றிப் பாராட்டி கௌரவிக்கும் விதத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள்.

இதேபோல கர்நாடக மாநிலத்தையும் வேறு மாநிலங்களையும் சேர்ந்த மறைந்த பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த மரபுப்படி இன்று இரங்கல் தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என கர்நாடக சட்டமன்ற அலுவலகம் அறிவித்திருந்த்து. அதன்படி இன்று அவை துவங்கியதும் இரங்கல் தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் மீது பேசும் பொழுது கூட அரசியல் கலப்பை தவிர்க்க முடியவில்லை. முதலமைச்சர் தன்னுடைய உரையின் போது தான் நம்பிக்கை வாக்கு கோர இருப்பதை அறிவித்தார்.

தவறான செய்தி

உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் இளைஞர் பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி இன்று வெளியானது.

இந்த செய்தி உண்மையல்ல என்று மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமான நடவடிக்கை குறித்து செய்திகள் வெளியாகும் போது சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் அல்லது செய்தியாளர்கள் கட்சி நிர்வாகிகளிடம் அவற்றை உறுதி செய்துகொண்டு வெளியிடுவது பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

ஹூப்பாலி நகரில் முன்னாள் கர்நாடக அமைச்சர் பசவராஜ் ராய ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சியில் இருந்து ராஜினாமா செய்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி கோரி நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்போவதாக ரெட்டி தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மும்பையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறைவாசம் எனக்கு கவலை தருகிறது. அதனால் நீதிமன்றத்தில் மனுச் செய்ய திட்டமிட்டுள்ளேன் என ராய ரெட்டி தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்துள்ளனர் இந்த ராஜினாமா கடிதங்களை சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கக்கூடாது எல்லாம் ராஜினாமா கடிதங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் ராயர் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார்.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டும் என்று நேற்று வலியுறுத்தி விதான சவுதாவில் பாஜக தர்ணா போராட்டம் நடத்தியது. ஆனால் இன்று பாஜக தலைவர்கள் யாரும் கருத்து வெளியிட வில்லை. அவர்கள் அமைதி அமைதி காத்தனர்.