எத்தனால் மோட்டார் சைக்கிள்: டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டது

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 19:19

புதுடெல்லி 

  எத்தனால் என்று அழைக்கப்படும் எத்தில் ஆல்கஹாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் அப்பாச்சி மோட்டார் சைக்கிளை இன்று புது தில்லியில் டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டது.

எத்தில் ஆல்கஹால் எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த மோட்டார் சைக்கிளின் பெயர் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகும்.
2018 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை டிவிஎஸ் தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று புதிய மோட்டார் சைக்கிளை டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்த வெளியீட்டு விழாவில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான அமைச்சருமான நிதின் கட்காரி, மற்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வெணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகள் பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் வாகனங்களைத் தவிர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன

இந்தியாவிலும் 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல பெட்ரோல் டீசலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதனை அமுல்படுத்த உதவியாக, மின்சார வாகனங்களை மாற்று வாகனங்களாகப் பயன்படுத்த அரசும் நிதி ஆயோக் அமைப்பும் பரிந்துரை செய்துள்ளன.

பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் சந்தையில் நிலை பெற பல வரிச் சலுகைகளை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளது

எத்தனால் என்பது தாவரப் பொருள்களில் இருந்து தயாரிக்கக் கூடியதாகும்.

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலைகள் சர்க்கரைப் பாகுக் கழிவான மொலசஸை விற்று விடுகின்றன. இந்த மொலசஸ் எத்தில் ஆல்கஹால் தயாரிக்க உதவுகிறது.

எத்தனாலின் இரசாயனக் குறியீடு c2 h5 oh ஆகும். இதில் 35 சதவீத ஆக்சிஜனைக கலந்து எரிபொருள் ஆக்குகிறார்கள். தாவரப பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் அன்னியச் செலாவணி மிச்சம், வெளியாகும் புகை மிகவும் குறைவு. அதில் உள்ள சுற்றுச்சூழலை மாசு படுத்தும் நைட்டிரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவை மிகக் குறந்த அளவே வெளியாகின்றன.அதனால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எத்தனால் சேமிப்பு, எடுத்துச்செல்லுதல் மிகவும் எளிமையான வேலைகளாகும்

இந்த பின்னணியில் டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எத்தனால் மோட்டார் சைக்கிள் மக்கள் மத்தியில் ஆதரவு ஆதரவு பெறும் என்றும் அரசின் ஆதரவும் அதற்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது