வர்த்தக வாகன விற்பனை சரிவு : அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஆலைகளை தற்காலிகமாக மூட முடிவு

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 19:05

சென்னை,

   உத்தரகாண்ட் மாநிலம் பந்த் நகரில் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்படுகிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்களின் விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக 2.08 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
குறிப்பாக அசோக் லேலண்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் விற்பனை விகிதம் 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 19 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை குறைக்கவும் ஆலைகளை தற்காலிகமாக மூடவும் முடிவு செய்துள்ளன.

அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் பந்த்நகரில் செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆலை ஜூலை 11ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலை ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனைத் தேவைகளுக்கேற்ப தன் உற்பத்தியை சீரமைக்கப்போவதாக கடந்த ஜூன் மாதம்  ஒருவாரம் தன் ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது.