சித்தாந்த ரீதியில் போராட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 17:41

அகமதாபாத் 

  சித்தாந்த ரீதியாக போராட, தனக்கு வாய்ப்புகளை வழங்கிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு தன் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி 5 நாட்களில் ரூ.750 கோடியை மாற்றியது என்று கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் அஜெய் பட்டேல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக, ராகுல் காந்தி இன்று அகமதாபாத் வந்தடைந்தார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

இதற்இடையில், ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில்,”நான் இன்று அகமதாபாத்தில் இருக்கிறேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அரசியல் எதிரிகளால் தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் ஆஜராக நான் இங்கு வந்துள்ளேன்.

சித்தாந்த ரீதியாக எதிர்த்து போராடி, அந்தப் போராட்டங்களை மக்களிடம் நான் கொண்டு சேர்க்கும் வாய்ப்புகளையும், மேடைகளையும் எனக்கு வழங்கிய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சத்யமேவ ஜெயதே” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.