கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச சட்ட கமிஷன் பரிந்துரை

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 17:26

லக்னோ,

   கும்பல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கலாம் என்று உத்தரபிரதேசத்தின் சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அதற்கான வரைவு மசோதாவை முதல்வர் யோகி ஆதித்தியநாத்திடம் சமர்ப்பித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கும்பல் வன்முறைகள் (mob attacks) அதிகரித்து வருகின்றன. பசுக் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு காரணங்களினால் பல இடங்களில் இந்த கும்பல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி வலியுறுத்தி சிறுபான்மையினர் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகளவில் நடந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2019ம் ஆண்டு வரை 50 கும்பல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பசுக் காவலர்களால் மட்டும் 25 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த வன்முறை சம்பவங்களை தடுக்க முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத் தீர்வு குறித்து பரிசீலிக்கும்படி உத்தரபிரதேச மாநில சட்டக் கமிஷனுக்கு வேண்டு கோள் முன்வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் சட்ட கமிஷன், மாநிலத்தில் நடந்த கும்பல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்தியநாத்திடம் புதன்கிழமை சமர்ப்பித்தது.

அதனுடன் கும்பல் வன்முறைகளை தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு மசோதாவையும் சட்ட கமிஷன் அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளை தடுக்க தற்போதுள்ள சட்டம் போதுமானது அல்ல என்று அந்த 128 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரைகளின் படி கும்பல் வன்முறைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் முதல் அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட கமிஷன் தன் வரைவு மசோதாவில் பரிந்துரைத்துள்ளது.

கும்பல் வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மீதும் கடமை தவறிய குற்றத்திற்காக தக்க தண்டனை விதிக்க வேண்டும்.

கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

கும்பல் வன்முறைகளுக்கு எதிராக மணிப்பூர் மாநிலம் மட்டும் சிறப்பு சட்டம் இயற்றியுள்ளது. மத்திய பிரதேச அரசு விரைவில் சிறப்பு சட்டம் இயற்ற உள்ளது.

இந்த சூழ்நிலையில் உத்தரபிரதேச அரசு விரைவாக கும்பல் வன்முறையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட கமிஷன் செயளாளர் சப்னா திரிபாதி தெரிவித்துள்ளார்.