கொடைக்கானலில் கட்டிட விதிமீறல்களை ஆராய்ந்து வரன்முறைப்படுத்த அரசு உரிய நடவடிகை – ஓ.பி.எஸ் தகவல்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 17:05

சென்னை,

   திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கட்டிட விதிமீறல்களை ஆராய்ந்து வரன்முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பழநி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொடைக்கானலில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், இதையடுத்து 9 உறுப்பினர்களை கொண்ட மறுஆய்வு குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில், விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்,

கொடைக்கானலில் 1,496 அனுமதியற்ற கட்டிடங்கள் உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கொடைக்கானல் மலை வாழ்விடத்தில் சுற்றுசுழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும், இதனடிப்படையில் கட்டடிட விதிமீறல்களை ஆராய்ந்து சம்மந்தப்பட்ட துறைகளின் ஆலோசனை பெறப்பட்டு,கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.