அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 17:04

சென்னை,

  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் குடும்பத்துடன் இன்று மாலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிப்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் மனைவி மற்றும் மகளுடன் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர்.

அதன் பின் சென்னை விமானநிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் சென்றார். அங்கு மாலை 3 மணியளவில் ராம்நாத் கோவிந்த் தன் குடும்பத்தினருடன் அத்திரவரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் சென்றார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவர் தரிசனம் செய்யும் நேரத்தில் சுமார் 2,000 போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு நண்பகல் 12.30 மணியளவில் கிழக்கு கோபுரம் வழியாக பொதுதரிசனம், முக்கியஸ்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

குடியரசுத்தலைவர் புறப்பட்ட பிறகு வழக்கம் போல் மாலை 4.30 மணியிலிருந்து பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.