புதுச்சேரி அமைச்சரவைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 16:29

புதுச்சேரி,

   புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடுகளை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி மறுத்துவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க எதிர்மனுதாரரான கே. லட்சுமிநாராயணனுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் நிதிச் செலவினங்கள், நிலப் பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பான முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அமைச்சரவை முக்கிய முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. முக்கிய முடிவுகள் எடுக்க புதுசேரிக்கு அதிகாரமுள்ளது. புதுச்சேரி அரசைக கட்டுப்படுத்த துணைநிலைஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும் அதிகார மோதல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை இரு தரப்பாரும் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.