இந்தியாவில் மொத்தம் 19.47 லட்சம் டாக்டர்கள்: மக்களவையில் சுகாதார அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 16:24

புதுடில்லி 

  நாடு முழுவதும் 19.47 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் உள்ளதாக மக்களவையில் இன்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2019-20 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றும் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பூஜ்ஜிய நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசினார். அப்போது பேசிய அவர்,”இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுவதும் மொத்தம் 19.47 லட்ச மருத்துவர்கள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

“இதில், 11,59,309 அலோபதி மருத்துவர்கள், மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டவர்கள். மருத்துவர்கள் – மக்கள் தொகை விகிதத்தை எடுத்துக்கொண்டால், 135 கோடி மக்கள் தொகையில், அதன் விகிதம் 1:1456. அதாவது, 1456 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் விதியில் (1:1000) கொடுக்கப்பட்டதை விட குறைவானதாகும்” என்று தெரிவித்தார்.

”இதேபோல், நம் நாட்டில் 7.88 லட்சம் ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளன. மருத்துவர்கள் – மக்கள் தொகை விகிதத்தை எடுத்துக்கொண்டால், அதன் விகிதம் 1:867. அதாவது, 1456 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் விதியில் கொடுக்கப்பட்டதை விட அதிகமானதாகும்” என்று ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.