சிறந்த தாசில்தார் விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 14:24

ஐதராபாத்,

   சிறந்த தாசில்தார் விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.93.5 லட்சம் பணம் மற்றும் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக இருப்பவர் லாவண்யா. இவரது வீடு ஐதராபாத்தில் உள்ள ஹயாத்நகரில் உள்ளது. சில நாட்களுக்கு முன் விவசாயி பாஸ்கர் என்பவர் தனது நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிழையை நீக்க விஏஓ அந்தையாவை அனுகி உள்ளார்.

அவர் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டதால், அது தொடர்பாக தாசில்தார் லாவண்யாவிடம் முறையிட்டுள்ளார். அப்போது தனது பிரச்னையை தீர்த்து வைக்கும்படி லாவண்யாவின் காலில் விழுந்து அழுது, புலம்பி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோ லஞ்ச ஒழிப்பு துறையினரின் பார்வைக்கு சென்றதை அடுத்து, லாவண்யா மற்றும் அந்தையாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது மற்றொரு விவசாயி, தனது நிலத்தின் ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக விஏஓ.,விடம் சென்றுள்ளார். அவர் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் ரூ.5 லட்சம் லாவண்யாவிற்கு பங்கு செல்லும் என கூறப்படுகிறது.

பணம் கைக்கு வந்ததும் விஏஓ அந்தையா, லாவண்யாவை தொடர்பு கொண்டு, தகவல் அளித்துள்ளார். அப்போது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், லாவண்யாவிடம் விசாரித்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டை லாவண்யா மறுத்துள்ளார். இருப்பினும் லாவண்யாவின் சொகுசு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்ட போது ரூ.93.5 லட்சம் பணமும், 400 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா அரசால் சிறந்த தாசில்தார் விருது பெற்றவர் லாவண்யா. இவரது கணவர் ஐதராபாத் மாநகராட்சியில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.