நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 13:58

சென்னை,

  நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியை நிர்மலாதேவி, அக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சுமார் ஓராண்டு சிறை வாசத்திற்கு பின்னர் மூவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.