ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட உதவிகளை நாடியுள்ளார்: தமிழக அரசு தகவல்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 13:12

சென்னை,

   ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட உதவிகளை நாடியுள்ளார் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறேன். நான் எனது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தத் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட நிபுணர்களின் கருத்துகளைக கோரியுள்ளார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினி தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடருமா  விசாரணை கைவிடப்படுமா என்பதை அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியது,  வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.