ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட குடிநீர் ரயில் சென்னை வந்தது, விநியோகம் துவக்கம்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 09:42

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்ட சென்னை குடிநீர் ரயில் இன்று காலை 11.30 மணி அளவில் வில்லிவாக்கத்திற்கு வந்து சேர்ந்தது. ரயில் வேகன்களில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து சென்னை நகரத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு ரூ. 65 கோடி நிதி ஒதுக்கி, அதற்காக பணிகளை மேற்கொண்டது.

இதற்காக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீரை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான இடத்தைத் தேர்வு செய்தனர்.

அதன்படி, மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல 50 வேகன்கள் கொண்ட ரயில் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மொத்தம் 50 வேகன்கள் உள்ள இந்த ரயிலில் சோதனை ஓட்டமாக இரு நாள்களுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கொண்டு செல்லப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இருமுறை தண்ணீர் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ராட்சத குழாய் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வரும் குடிநீரை வேகன்களில் ஏற்றுவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக ஜோலார் பேட்டையில் இருந்து 25லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு ரயில் புறப்பட்டுள்ளது. ரயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடங்கி வைத்தார். அந்த தண்ணீர் ரயில் காலை  11.30 மணிக்கு சென்னை-வில்லிவாக்கம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.
ஒரு முறை குடிநீர் ரயிலில் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து சேரும். ஒரு நாளைக்கு நான்கு முறை  வரும் குடிநீர் ரயில்கள் மூலமாக மொத்தம் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் கூறியது குறிப்பிடத் தக்கது.

இரண்டாவது முறை

இன்று சென்னைக்கு வெளியூரிலிருந்து குடிநீர் ரயில் வருவது இரண்டாவது முறையாக அமைந்தது. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் ஈரோடில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது.