கேரள கைதிகள் தயாரித்த சிக்கன் பிரியாணியை ஆன்லைனில் விற்பனை

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 20:44

திரிசூர்,

   கேரளாவில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் சிக்கன் பிரியாணியை ஆன்லைன் மூலம் கேரளா சிறைச்சாலைத்துறை விற்று வருகிறது.

கேரளாவில் உள்ள சிறைச்சாலைகளில் பீரிடம் புட் பாக்டரி (Freedom Food Factory) என்ற பெயரில் கடந்த 2011ம் ஆண்டு முதல் சிறை கைதிகள் உணவு சமைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

உணவின் தரம் மற்றும் குறைவான விலை காரணமாக சிறை கைதிகள் தயாரித்த உணவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதில் குறிப்பாக கேரளா திரிச்சூர் மாவடத்தில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலையில் ஆரம்பத்தில் சப்பாத்திகளை மட்டும் தயாரித்து விற்பனை செய்து வந்த கைதிகள், பின்னர் பிரியாணி, அசைவ உணவு வகைகள், கேக் போன்ற பேக்கரி வகைகளை ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

தற்போது சிறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் 100 சிறை கைதிகள் நாள் ஒன்றுக்கு 25,000 சப்பாத்திகள் மற்றும் 500 பிரியாணிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் யோசனையை வையூர் மத்திய சிறைச்சலையின் டிஜிபி ரிஷிராஜ் சிங் முன்வைத்தார்.

அதை தொடர்ந்து சிறை கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.

அதற்காக ஆன்லைன் உணவு விநியோகஸ்தாரான ஸுவிக்கி நிறுவனத்துடன் வையூர் சிறைச்சாலை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முதல்கட்டமாக 127 ரூபாய்க்கு பிரியாணி காம்போவை விற்பனை இன்று முதல துவங்கியது.  

இந்த பிரியாணி காம்போவில் 300 கிராம் பிரியாணி, ஒரு வறுத்த கோழி லெக் பீஸ் , 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். கூடவே வாழை இலை ஒன்றும் தருகின்றனர்.

ஒரு நாள் சிறை அனுபவம்

கேரளாவின் சிறைச்சாலைத்துறை தன் வருவாயை அதிகரிக்க மேலும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் கேரளாவில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலையில் ஒருநாள் தங்கி சிறை அனுபவத்தை பெறலாம். அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

வையூர் சிறைச்சலையில் அமைக்கப்படவுள்ள தனித்துவம் மிக்க சிறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.