உச்சநீதிமன்ற ஆணைப்படி கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்தார் சபாநாயகர்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 20:38

பெங்களூரு,

   கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள கடிதங்களை சபாநாயகர் அலுவலக்த்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களைச் சந்தித்து பேசிய பின் இன்று முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற ஆணைப்படி சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமார் இன்று மாலை அவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

கர்நாடகாவில் முதல்வர் எச்.டிஒ குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணி அரசை சேர்ந்த சுமார் 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இது கர்நாடகாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவினர் தூண்டுதலால் தான் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ், மஜத கட்சியினர் குற்றம்சாட்டினர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முதல்வர் குமாரசாமி, மற்ற தலைவர்கள் முயற்சி செய்தனர்.

இந்நிலையில் ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். நேற்று அவர்களை சந்திக்க வந்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மற்றும் மகாராஷ்டிர  காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகர் காலதாமதம் செய்வதாக கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்கள் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும்படி தனக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என கூறிய ரமேஷ் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். அவரது மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி சபாநாயகரை சந்திக்க 11 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூரு வந்தனர். நேராக கர்நாடகத்தின் தலைமை செயலகமான விதான சவுதாவிற்கு விரைந்தனர்.

அரசியல் சூழ்நிலை காரணமாக இன்று விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. விதான சவுதாவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சபாநாயகர் பேட்டி 

விதான சவுதாவிற்கு விரைந்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்து பேசினர். எம்.எல்.ஏக்களுடனான கூட்டத்திற்கு பின் ரமேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை வேண்டும் என்றே தான் தாமதப்படுத்தவில்லை என கூறினார்.

அதிருபதி எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் நான் தாமதம் செய்வதாக வரும் தகவல்கள் கேட்டு மனவருத்தம் அடைந்தேன். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா தொடர்பாக ஜூலை 6ம் தேதி ஆளுநர் எனக்கு தகவல் அளித்தார். அதற்கு முன்பாக யாரும் ராஜினாமா செய்வது தொடர்பாக என்னைச் சந்திக்கவில்லை.

ஜூலை 6ம் தேதி மதியம் 1.30 மணி வரை நான் என் அலுவலகத்தில் இருந்தேன். அதன் பின்னர் வெளியே கிளம்பிவிட்டேன். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முன்னறிவிப்பின்றி என்னை மதியம் 2 மணிக்கு சந்திக்க வந்துள்ளனர். எனவே நான் அவர்களை சந்திக்காமல் சென்றுவிட்டதாக கூறுவது தவறு.

ராஜினாமா கடிதங்கள் மீது அவசரகதியில் நடவடிக்கை எடுக்க முடியாது. 13 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த கடிதங்களில் 8 கடிதங்கள் முறையாக இல்லை.

தற்போது அவர்கள் மீண்டும் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். இரவு முழுவதும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பரிசீலிப்பேன். அதிருப்தி எம்.எல்.ஏக்களுடனான எனது பேச்சுவார்த்தை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பேன்.

சிலர் தங்களை மிரட்டியதால் தான் நாங்கள் மும்பைக்கு சென்றதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் என்னை அணுகியிருந்தால் பாதுகாப்பு வழங்கியிருப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன். பிரச்சனை ஆரம்பித்து வெறும் 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் பெரிய பூகம்பம் வந்தது போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

ராஜினாமா விவகாரம் தொடர்பாக என்னை முதலில் சந்திக்காமல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நேரடியாக ஆளுநரையும் உச்சநீதிமன்றத்தையும் நாடியது தேவை இல்லாதது. ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசியலமைப்பை இவ்வாறு தவறாக பயன்படுத்துவது முறைதானா? என சபாநாயகர் ரமேஷ் குமார் சாடினார்.