பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசின் தடை செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 20:26

சென்னை:

    பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கோரும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி கேரிபேக் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் கடைகள், தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னையை சேர்ந்த ஜெயா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 60 நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. பொருட்களை பேக்கிங் செய்யும் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்தத் தடையையும் நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த தடையை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக்கூடாது எனவும் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கூறினர். மேலும் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது எனவும் விசாரணையின் போது நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது
பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 14 வகை பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என்று இன்று தீர்ப்பளித்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான வியாபாரிகளின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.